சனி, 22 ஜூலை, 2017

மறைந்த போலீஸ் ஐ ஜி அருளின் மகன் மைக்கல் வீட்டில் வருமானவரி சோதனை!

;நமது நிருபர்;VENKATARAJ J
போலீஸ் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் வீடு
சென்னை அடையாறில் மறைந்த போலீஸ் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் அருளின் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு காரணமாகவே மைக்கேல் அருளிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறை
சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள ஒரு சொத்து, அரசு நிர்ணயித்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விட குறைவாக விற்கப்பட்டத்தகவல் வருமானவரித்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் குறித்த தகவல்களை வருமானவரித்துறையினர் சேகரித்தனர். அந்த இடத்தை சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குருமூர்த்தியின் குடும்பம் வாங்கியது தெரிந்தது.
குருமூர்த்தியின் மகன் தியாகராஜன், அரசு ஒப்பந்தக்காராக உள்ளார். இதையடுத்து வருமான வரித்துறையினர் குருமூர்த்தி மற்றும் தியாகராஜன் ஆகியோரின் பணப்பரிவர்த்தனைகளைக் கண்காணித்தனர். அப்போது, வரி ஏய்ப்பு குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக, அவர்களது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, கிலோ கணக்கில் தங்கம், முக்கிய ஆவணங்களும், லட்சக்கணக்கில் பணமும் சிக்கின. தொடர்ந்து இன்றும் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது.

மைக்கேல் அருள்
இதையடுத்து சொத்தை விற்ற மைக்கேல் அருள் வீட்டுக்குள் வருமான வரித்துறையினர் இன்று காலை அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். மைக்கேல் அருள் வீட்டில் நடந்த சோதனை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மைக்கேல் அருள், மறைந்த போலீஸ் ஐ.ஜி எப்.வி. அருளின் மகன். குறைந்த விலைக்குச் சொத்தை விற்றதால் மைக்கேல் அருள் வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மறைந்த போலீஸ் ஐ.ஜி.எப்.வி அருள், தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1942-ல் ஐ.பி.எஸ்.தேர்ச்சி பெற்றவர். 1968-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு சி.பி.ஐ. இயக்குநராகவும், 1973-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை தமிழக போலீஸ் ஐ.ஜியாகவும் பணியாற்றினார். இந்தச் சூழ்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு அருள் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப்பிறகு குடும்பத்தில் சொத்து தகராறு ஏற்பட்டது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சொத்தைத்தான் மைக்கேல் அருள் விற்று வருமானவரித்துறை சோதனையில் சிக்கியுள்ளார்” என்றனர்.
26 கோடி ரூபாய்
வருமான வரித்துறையினர் கூறுகையில், “குருமூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாகவே மைக்கேல் அருள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளோம். ஏற்கெனவே, குருமூர்த்தி, தியாகராஜன் வீடு, அலுவலகங்களிலிருந்து முக்கிய ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை கிடைத்துள்ளன. மைக்கேல் அருள் விற்ற எழும்பூர் இடத்துக்கு அரசு நிர்ணயித்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 26 கோடி ரூபாயாகும். ஆனால், அந்த மதிப்பைக் குறைத்து வெறும் 10 கோடி ரூபாய்க்கு அந்த இடம் விற்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு 50 கோடிக்கு மேல் உள்ளது. இதனால், மைக்கேல் அருள் அந்த இடத்தை எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்று விசாரணையில் களமிறங்கினோம். அதுதொடர்பாகவே விசாரணை நடந்துவருகிறது. மைக்கேல் அருள் வீட்டிலிருந்தும் எங்களுக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன” என்றனர்.

வில்லங்க சொத்து?
மைக்கேல் அருள், சென்னை அடையாறு போர்ட் கிளப்பில் குடியிருக்கிறார். அங்கும், எழும்பூரில் விற்கப்பட்ட இடத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மைக்கேல் அருள் விற்ற எழும்பூர் இடம், வில்லங்கத்தில் இருப்பதாகவும் தகவல் உள்ளது. அந்த சொத்தை விற்கக்கூடாது என்று உயில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அந்த சொத்தை குறைந்த விலைக்கு வாங்கியிருக்கலாம் என்ற தகவலும் உள்ளது.
இந்த சொத்து குறித்த தகவல்களை பெரியமேடு சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர். வழக்கமாக குறைந்த விலைக்கு சொத்துகள் பதிவு செய்யப்பட்டதால் அதன் ஆவணங்கள், வாங்கியவர்களுக்கு கொடுக்கப்படாது. நிலத்துக்கு அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்புக்கு ஏற்ப முத்திரை தாள்கள் அல்லது, அதற்குரிய நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே சொத்தை வாங்கியவர்களின் கைக்கு கிடைக்கும். அதுவரை அந்த ஆவணங்கள் வாங்கியவர்களுக்கு கொடுக்கப்படாது என்கின்றனர் பத்திரப்பதிவுத் துறையினர்.
தங்க மோதிரங்கள்
குருமூர்த்தி மற்றும் தியாகராஜன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் வருமான வரித்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது, பணமதிப்பிழப்பு சமயத்தில் இந்த குடும்பத்தினர் அதிகளவில் தங்கத்தை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதுவும் அதிக எண்ணிக்கையில் மோதிரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த மோதிரங்களை அன்பளிப்பாக அவர்கள் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இதுதொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரித்துவருகின்றனர். குருமூர்த்தி மற்றும் தியாகராஜனிடம் மோதிர வாங்கியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது. அதில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பெயர்கள் உள்ளதாம்.  விகடன்

கருத்துகள் இல்லை: