புதன், 19 ஜூலை, 2017

விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள்

வினவு : 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தைத் தமது அரசு இரட்டிப்பாக்கப் போவதாக” அறிவித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. “இதற்காக ஏழு அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருவதாக”
மோடி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் வடமாநில விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
விளக்கமளித்திருக்கிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.
“விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டுமென”க் கோரி வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் விவசாயிகள் கலகத்தில் இறங்கிய சூழ்நிலையில், இப்படிப்பட்டதொரு தேன் தடவிய அறிவிப்பைத் திரும்பத்திரும்பக் கூறி வருகிறது, மோடி அரசு. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்த அறிவிப்பு நனவாகிவிடுமா, குறு, சிறு விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பால் பலன் கிட்டுமா என்பதையெல்லாம் கீறிப் பார்க்கும் முன்பாக, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் மோடி அரசின் யோக்கியதையை உரசிப் பார்த்துவிடுவோம்.

2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாய விளைபொருட்களின் உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீதத்தைச் சேர்த்து விலையை நிர்ணயிப்போம்” என வாக்குறுதி அளித்தது, அக்கட்சி. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், “எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்துள்ள பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு 50 சதவீத இலாபம் கிடைக்கும்படி விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது” என எழுதிக் கொடுத்தது, மோடி அரசு.
“விவசாய நிலங்களின் மீதான விவசாயிகள் உரிமையைப் பாதுகாக்கக் கூடிய தேசிய நிலக் கொள்கை வகுக்கப்படும்” என்பது பா.ஜ.க. அளித்திருந்த மற்றொரு வாக்குறுதி. ஆட்சியைப் பிடித்த பிறகோ, தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது, மோடி அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட் முதலாளிகள் விரும்பியபடி திருத்தி, நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையைப் பறிக்க முயன்றது, பா.ஜ.க. திருத்தப்பட்ட அச்சட்டம் நாடாளுமன்ற மேலவையில் பா.ஜ.க.விற்குப் பெரும்பான்மை பலம் இல்லாததன் காரணமாக நடைமுறைக்கு வரவில்லை.
“நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளோடு இணைத்து, அத்திட்டத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றுவோம்” என்பது இன்னொரு வாக்குறுதி. ஆனால், மோடி பிரதமர் ஆன மறுநிமிடமே, “அத்திட்டம் இந்தியாவில் வறுமையை நிரந்தரமாக்கும் நினைவுச் சின்னம்” எனச் சாடினார். அதோடு, அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மொத்த வேலைநாட்கள் ஆகியவற்றையும் கணிசமாகக் குறைத்தது, அவரது அரசு.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2009-10 ஆம் ஆண்டில் 2.8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வேலைவாய்ப்பு 2013-14 ஆம் ஆண்டில் 2.2 கோடி பேராகச் சரிந்து, மோடியின் ஆட்சியில் (2014-15) 1.66 கோடி பேராகச் சுருங்கிவிட்டது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கூலியை வழங்கவேண்டும். ஆனால், மோடி ஆட்சியில் இந்தக் கூலி ஆறு மாதங்கள் முடிந்த பிறகும் வழங்கப்படாததால், “செய்த வேலைக்குக் கூலி கொடு” எனக் கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
காங்கிரசு கூட்டணி ஆட்சியில், விவசாயிகள், பழங்குடியின மக்களின் போராட்டங்கள் காரணமாகப் பல்வேறு தொழில் திட்டங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே, சுற்றுப்புறச் சூழல் விதிகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்களுக்குத் தடையில்லாமல் அனுமதி கிடைக்கும்படிச் சட்டத் திருத்தங்களைச் செய்து, இதுவொரு பேரழிவுக்கான ஆட்சி என நாட்டு மக்களுக்குப் புரிய வைத்தார்.
கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஓட்டுப் பொறுக்குவதும், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அத்தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவதும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் வேறுபாடின்றிக் கையாளும் தந்திரம் என்றபோதும், பா.ஜ.க.வும், மோடியும் இந்த நரித்தனத்தில் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவர்கள் என்பதை இதிலிருந்து யாரும் புரிந்துகொள்ள முடியும். மோடியின் வாக்குறுதி மோசடிகளுக்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால், “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு ஏழை இந்தியனின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்ச ரூபாயைப் போடுவோம்” என மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்; அதற்கான நிதியை மைய அரசு ஒதுக்கும்” என்று வாக்குறுதி அளித்தார் மோடி. கடன் தள்ளுபடி என்ற சொற்கள் மோடியின் வாயிலிருந்து வந்தபொழுது, அதனைக் கைதட்டி வரவேற்ற பா.ஜ.க.வும் அதிகார வர்க்கமும், அதே சொற்கள் சாதாரண விவசாயிகளிடமிருந்து போராட்ட முழக்கமாக வந்தபோது கண்டித்தார்கள், அவமானப்படுத்தினார்கள். “கடன் தள்ளுபடி கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது” எனத் தனது சொத்தே பறிபோனது போல விவசாயிகளைக் கொச்சைப்படுத்தினார், வெங்கய்ய நாயுடு. “கடன் வாங்கினால், அதனைக் கட்ட வேண்டாம். தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற கலாச்சாரத்தை ஏற்படுத்துகிறார்கள்” என அறம் குறித்து உபதேசித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல். “கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காது” எனக் காரியம் முடிந்த பிறகு கையை விரித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, விளைபொருட்களுக்கான ஆதார விலை சந்தையில் கிடைப்பதைக்கூட உத்தரவாதப்படுத்த மறுத்துவருகிறது, மோடி அரசு. நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்டு 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு நிர்ணயித்தபோதும், நெல்லையும், கோதுமையையும் தவிர மற்ற பயிர்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை. அந்த இரண்டு பயிர்களுக்கும்கூட வெளிச்சந்தையில் ஆதார விலை கிடைப்பதில்லை.
குறிப்பாக, இந்த ஆண்டில் ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.1,625 ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ.1,200-ஐத் தாண்டவில்லை. இந்தச் சரிவுக்கு விளைச்சல் அதிகரிப்பைக் காரணம் காட்டுகிறார்கள், பொருளாதார நிபுணர்கள். ஆனால், அது உண்மையல்ல. விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யாமல், நொண்டிக் காரணங்களைக் கூறி, அவர்களை வெளிச்சந்தைக்குத் தள்ளிவிட்ட அரசின் கபடத்தனமும், கோதுமை இறக்குமதிக்குத் தரப்பட்ட சலுகையும்தான் இந்தச் சரிவின் பின்னுள்ள உண்மைகள்.
கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வையை மோடி அரசு முதலில் 10 சதவீதமாகக் குறைத்து, பின்னர் அதனை முற்றிலுமாக நீக்கியது. உள்நாட்டில் கோதுமை உற்பத்தி அதிகரித்த பின்னும் இத்தீர்வையை உடனடியாக உயர்த்தாமல் காலத்தைக் கடத்திவிட்டு, விவசாயிகளின் போராட்டம் வெடிக்கவிருந்த சூழ்நிலையில் 10 சதவீதமாக நிர்ணயித்தது. துவரம் பருப்பின் விலை வீழ்ச்சிக்கும் இறக்குமதி அளிக்கப்பட்ட அதீதமான சலுகை முக்கிய காரணமாகும். விவசாயிகளின் நலனைவிட, இறக்குமதியாளர்களின் இலாபம் சரிந்துவிடாமல் காப்பாற்றுவதில்தான் மோடி அரசு அக்கறை காட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆதார விலை அதிகரிக்கப்பட்டாலும் (அந்த அதிகரிப்பு உற்பத்திச் செலவை ஈடுகட்டுகிறதா என்பது தனியொரு விவாதப் பொருள்) விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் சரிவதாகக் குறிப்பிடுகிறது, விவசாயத் துறை அமைச்சகத்தின் அறிக்கை. குறிப்பாக, நெல் விளையும் 18 மாநிலங்களில், ஏழு மாநிலங்களில் மட்டும்தான் நிகர வருமானம் சற்று அதிகரித்திருக்கிறது. நிகர வருமானம் ஆறு மாநிலங்களில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஐந்து மாநில விவசாயிகள் நெல் விளைச்சலில் நட்டமடைந்திருக்கிறார்கள்.
நாபார்டு வங்கியின் துணை அமைப்பான சிறு விவசாயிகள் விவசாய வர்த்தகக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் ஷர்மாவால் தொடங்கி வைக்கப்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளன் நிறுவனம்.
மேலும், கரும்பு, பருத்தி, உளுந்து, சோளம் ஆகிய பயிர்களிலிருந்து விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி இலாபம் சரிவது மோடி ஆட்சியில் மிகவும் தீவிரமடைந்திருப்பதை விவசாய விளைபொருள் உற்பத்திச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் அறிக்கைகளிலிருந்து பெற முடியும்.
விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலைஏற்றம்தான் இந்த வருமானச் சரிவுக்கு அடிப்படை காரணம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் யூரியாவின் விலை 69 சதவீதமும், டி.ஏ.பி. உரத்தின் விலை 300 சதவீதமும், பொட்டாஷ் உரத்தின் விலை 600 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. இவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை வெட்டுவதில் தீவிரமாக இயங்கும் மைய அரசு, அவற்றின் சந்தை விலையைக் கட்டுப்படுத்த ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடுவதில்லை. இதன் காரணமாக அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற ஆதார விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. நிர்ணயிக்கப்படும் குறைவான ஆதார விலையும் வெளிச்சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதில்லை என்ற சூழலில் விவசாயிகளின் வருமானம் சரிந்து, கடன் அதிகரிப்பது தொடர்கதையாகிவிட்டது.
ஏழை விவசாயிகளுக்கு விவசாயத்திலிருந்து வரும் வருமானம் சரிந்துவரும் நிலையில், அவர்களுக்குக் கால்நடை வளர்ப்புதான் கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில் மாட்டைச் சந்தையில் விற்பதற்குத் தடை போட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாக்கப் போவதாக மோடி அறிவித்திருப்பது மோசடியானது, குரூரமானது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, கால் ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரையிலும் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளின் வருமானத்தோடு ஒப்பிடும்பொழுது, 10 ஏக்கர் முதல் 25 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் வருமானம் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களுள் எந்தப் பிரிவு, வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயிகளின் வருமானத்தை மோடி இரட்டிப்பாக்கப் போகிறார்? மேலும், இன்று விவசாய உற்பத்தியிலும், உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிலும் இறங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட விவசாயிகளாக வகைப்படுத்தப்படும் நிலையில், மோடி கார்ப்பரேட் விவசாயிக்காகப் பேசுகிறாரா, கடன்பட்டு நிற்கும் விவசாயிக்காகப் பேசுகிறாரா என்பதை உடைத்துப் பார்க்க வேண்டும்.
விவசாயக் கடனை விரிவுபடுத்துவது, விவசாயக் காப்பீடு திட்டங்களைப் பரவலாக்குவது, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது என்ற ஏழு அம்சத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மோடி அரசு. இவையெல்லாம் புதிய சரக்கல்ல. ஊசிப் போன இட்லியை உதிர்த்து உப்புமாவாக்கித் தரப் பார்க்கிறார், மோடி.
பொதுத்துறை வங்கிகள் விவசாயத்திற்கு வழங்கும் மொத்தக்கடனில், ரூ.25,000 வரையிலும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கும் கடனின் பங்கு 2005-ஆம் ஆண்டுகளில் 23 சதவீதமாக இருந்தது. இப்பங்கு 2013-ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாகச் சரிந்துவிட்டது. இன்னொருபுறத்திலோ, ஒரு கோடிக்கு மேல் வழங்கப்படும் கடன்களின் பங்கு 7.5 சதவீதத்திலிருந்து (2005-இல்) 10 சதவீதமாக (2013-இல்) அதிகரித்திருக்கிறது. எனவே, வங்கிக் கடனை விரிவுபடுத்துவது என்பது புதுப் பணக்கார விவசாயிகள் அல்லது விவசாயத் துறைக்குள் நுழைந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிப் பணத்தை வாரி வழங்குவதாகவே முடியும்.
மன்மோகன் சிங் அரசு நடைமுறைப்படுத்திய பழைய பயிர்க் காப்பீடு திட்டமும் சரி, மோடி கொண்டுவந்திருக்கும் புதிய விரிவுபடுத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டமும் சரி, இரண்டுமே தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசின் நிதியை மானியமாக அள்ளிக் கொடுக்கும் சதி என்பதைப் பல்வேறு தரவுகளோடு நிறுவியிருக்கிறது, மும்பையிலிருந்து வெளிவரும் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எக்கானமி இதழ். குறிப்பாக, பயிர்க் காப்பீடு என்பது அசாதாரணமான இயற்கைச் சீற்றங்களால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்திலிருந்து, அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை அரசு முற்றிலும் கைகழுவிவிட்டு, அவர்களின் தலையெழுத்தைத் தனியார் நிதி நிறுவனங்களிடம் தாரை வார்ப்பதாகும்.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது என்பது இந்திய விவசாயிகள் மீதான பன்னாட்டு விவசாய கம்பெனிகளின் பிடியை மென்மேலும் இறுக்குவது தவிர வேறில்லை.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, வருமானத்தை அதிகரிப்பது என்ற மோடியின் அறிவிப்பெல்லாம் சிறு, குறு விவசாயிகளின் நலனை நோக்கமாகக் கொண்டதல்ல. அது மட்டுமின்றி, இந்திய விவசாயத்தில் பல கோடி சிறு, குறு விவசாயிகள் இன்னும் நீடித்திருப்பதை அனுமதிக்கக் கூடாதென்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள், மோடியின் ஏகாதிபத்திய எஜமானர்கள். இக்குறு, சிறு, நடுத்தர விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் பண்ணைமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள், அவர்கள். இதற்காகவே, குறைவான நிலம், அதிகமான விளைச்சல் (Less land, More crop) என்ற புதிய விவசாயக் கொள்கையை அறிவித்திருக்கிறார்கள்.
தமிழக விவசாயம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது குறித்து மைய அரசு அதிகாரிகள் நடத்திய கண்துடைப்பு ஆய்வு. (கோப்புப் படம்)
மேலும், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (Farmers Producers Organisation) என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி, அதில் குறு, சிறு விவசாயிகளை உறுப்பினர்களாக்கி, அதன் வழியாக அவர்களை விவசாய கம்பெனிகளுக்குக் குத்தகை விவசாயிகளாக மாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசுசாரா நிறுவனங்கள் இந்தியாவெங்கும் இறக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 40 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு, அவை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் செயல்பட்டும் வருகின்றன. தமிழகத்தில் 30 இலட்சம் விவசாயிகளை இச்சங்கங்களில் உறுப்பினராக்குவது எதிர்காலத் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உரம் மற்றும் உணவு மானியம் வெட்டு, உணவுப் பொருள் இறக்குமதிக்குத் தாராள அனுமதி, உணவுப் பொருள் கொள்முதல் சட்டத்தைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகத் திருத்துவது, உணவுப் பதப்படுத்தும் தொழிலில் 100 சதவீத அந்நிய முதலீடை அனுமதிப்பது என ஏற்கெனவே விவசாயத் துறையில் திணிக்கப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள்தான், சிறு விவசாயிகளின் வாழ்க்கையைச் சூதாட்டமாக்கி, அவர்களைப் பெரும் கடன் சுமைக்குள்ளும், தற்கொலைச் சாவுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இப்பொழுது, அவர்களின் துயரத்தைப் போக்குவது, வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற போர்வையில் அவர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது, மோடி அரசு.
இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதன் வழியாக, இந்திய உணவுக் கழகத்தையும் உணவுப் பொருட்களை அரசு கொள்முதல் செய்வதையும் முற்றிலுமாக முடக்குவது, நிறுத்துவது; ரேஷன் கடைகளைக் காட்சிப் பொருளாக்குவது, வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையைத் தாறுமாறாக ஏற்றுவது என்ற தொடர் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இக்கார்ப்பரேட்மயமாக்கம், இதுவரை இந்திய ஏழை மக்களுக்கு அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ரத்து செய்து, அவர்களைப் பட்டினிப் படுகுழிக்குள் தள்ளவல்லது.
நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் தமது இயல்பிலேயே விவசாயிகளுக்கு எதிரான வலதுசாரி பொருளாதராக் கொள்கையைக் கொண்டவர்கள் என்பதாலும், அக்கும்பலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதோடு, நீதிமன்றங்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் பக்கபலமாக இருப்பதால், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளைத் துரித கதியில் எடுக்க விழைகிறார்கள்.
விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது என்பதுதான் இந்த நடவடிக்கையின் பொருள். பண மதிப்பழிப்பு, விலை வீழ்ச்சி, கடன் சுமை, மாடு விற்பனை தடை, மீதேன், நெடுவாசல் என்பன போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற தனித்தனி பிரச்சினைகள் அல்ல. இவை அனைத்தும் கிராமப்புறத்திலிருந்து விவசாயிகளை நெட்டித்தள்ளி வெளியேற்றுவதற்கான வாயில்கள்.
எனவே, விவசாயிகள் இந்த அரசிடம் நீதியோ நிவாரணமோ கோரிப்பயனில்லை. வெளியேற மறுக்கும் விவசாயிகள் இந்த அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மோடி அரசின் நடவடிக்கைகள் இதைவிடக் குறைவானதொரு கோரிக்கையை வைக்க விவசாயிகளை அனுமதிக்கவில்லை.
-ரஹீம்
-புதிய ஜனநாயகம் – ஜூலை 2017

கருத்துகள் இல்லை: