புதன், 1 மார்ச், 2017

நெடுவாசல் .. முட்டாள் / மோசடி அரசுகளை நம்பி நிலத்தை எப்படி கொடுக்கமுடியும்?

நெடுவாசல்போபால் விஷ வாயு விபத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் எல்லாம் ஒரு நொடி நின்று ஈரத் துணி கொண்டு முகத்தை மூடியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவைக் கூட மக்களுக்குப் புகட்டாத இந்த அரசை நம்பி எப்படி எங்கள் விவசாய நிலங்களைக் கொடுக்க முடியும்?/ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த ஓ.என்.ஜி.சி குழாய்...நெடுவாசல் நிஜங்கள்..! #SpotVisit மாலை நேரம். நெடுவாசல் கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு கிராமத்தில் தன் வயலில் குடும்பத்தோடு கடலைப் பறித்துக் கொண்டிருந்தார் விஜயா அக்கா... இங்கன என்ன பிரச்சினை இருக்குன்னு சரியாவே வெளங்கல தம்பி. இந்தப் பக்கத்துல ஏற்கனவே பெட்ரோல் எடுக்குறம்ணு சொல்லி ரொம்ப வருஷத்துக்கு முந்தியே பைப்பெல்லாம் போட்டாய்ங்க. இப்போ திடீர்னு ஏதோ புதுசா ஹைட்ரோ கார்பன் வருதுங்குறாய்ங்க. அது வந்தா தண்ணியில்லாம போயிடுமாமில்ல???. அத விடக் கூடாது தம்பி.  நிலத்தடி நீர நம்பித்தா இங்க எல்லாமே இருக்கு. இதோ எம் பொண்ணு கம்ப்யூட்டர் படிச்சுட்டு எங்கூட கொல்லையில தான் வேலை செய்யுது. எங்களுக்கு விவசாயந்தான்... அத மீறி வாழ்க்கை இல்ல. இந்த மத்திய அரசாங்கம் அதப் புரிஞ்சுக்கிட்டு இடத்த காலிபண்ணிடனும்..." என்று உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.
;விஜயா அக்கா மட்டுமல்ல ஜெயந்தி, திருமாயி, சங்கர், குமார் என நாம் பேசிய பெரும்பாலானவர்களும் இதே கருத்தை தான் முன்வைத்தார்கள். இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான எதிர்ப்பு மனநிலை என்பது தமிழகம் முழுக்கவே பரவியிருக்கிறது. நிச்சயம் இது சரி... கண்டிப்பாக இது எதிர்க்க வேண்டிய திட்டம் தான். ஆனால், நெடுவாசல் பிரச்சினை என்பது என்ன? அந்த மக்களின் கோரிக்கை என்ன? என்பதில் பலவித கருத்துக்கள் பரவி வருகின்றன. அந்த தெளிவின்மை பலவித குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றன.

 உண்மையில் நெடுவாசலில் என்னதான் பிரச்சினை???

"நெடுவாசல்" என்று தமிழகமே தகித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை முதலில் நெடுவாசல் பிரச்சினை மட்டுமே அல்ல. 
கோட்டைக்காடு: 
நெடுவாசலிலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கிறது கோட்டைக்காடு கிராமம். 1991யில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மக்களிடம் வந்து இங்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற விஷயங்கள் இருப்பதாக சொல்லி நிலங்களை குத்தகைக்குக் கேட்கிறார்கள். மத்திய அரசின் நிறுவனம் கேட்பதால் மறுப்பேதும் தெரிவிக்காமல், அந்தப் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுகிறார்கள். 91லிருந்து 94ஆம் ஆண்டு வரை ஓ.என்.ஜி.சி நிறுவனம் பல ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்கிறது. பின்பு, 94ல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறது. பதிக்கப்பட்ட குழாய் இன்னும் அப்படியே இருக்கிறது. ஓ.என்.ஜி.சி கடைசியாக அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னர் குழாயின் உச்சியில் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்ததாகவும், அது கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்ததாக கோட்டைக்காடு பகுதி மக்கள் சொல்கிறார்கள். 
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் புதுக்கோட்டை

மேலும் படங்களுக்கு


94ற்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே குத்தகைக்கு விடப்பட்டிருந்த சில பகுதிகளில் விவசாயம் செய்து கொள்ளலாமா? என விவசாயிகள் கேட்க, அதற்கு எழுத்துப் பூர்வமான அனுமதியை வழங்கியிருக்கிறது ஓ.என்.ஜி.சி. அதன்படி பார்த்தால், குழாய் இருக்கும் பகுதிக்கு ரோட்டில் இருந்த செல்ல ஓ.என்.ஜி.சிக்கு தடம் கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது அந்த வழி தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. தங்கள் பகுதியில் உள்ள இந்த குழாயை பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும், நெடுவாசலில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்று இப்போது கோட்டைக்காட்டிலேயே பந்தல் அமைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள் கோட்டைக்காடு மக்கள்.
வாணக்கன்காடு:
93யில் நிலத்தைக் கேட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வந்த போது, தன் நிலத்தைக் கொடுக்க மறுத்துள்ளார் உரிமையாளர் மாரிமுத்து. நிலத்தின் மூன்றடிக்குக் கீழே இருக்கும் யாவும் அரசின் உடைமை, இதைத் தடுக்க முடியாது என்று கூறி மாரிமுத்து மீது வழக்குப் பதிந்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. பிறகு, பல போராட்டங்களைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தியது நிறுவனம். மூன்றாண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 96யில் பதிக்கப்பட்ட குழாய்களை மூடிவிட்டு சென்றது ஓ.என்.ஜி.சி. இருந்தும் நிலத்திற்கான குத்தகையைத் தொடர்ந்து அளித்து வருகிறது. நெடுவாசல் பகுதியிலேயே மிகவும் அபாகரமான பகுதியாய் இருக்கிறது வாணக்கன் காடு.
2010யில் மூடப்பட்ட குழாயிலிருந்து லேசாக எண்ணெய் வடிய ஆரம்பித்திருக்கிறது. அது நாளுக்கு நாள் அதிகரிக்கவே, நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார் மாரிமுத்து. பின்பு, 2012ல் நிலத்தை ஆய்வு செய்ய வந்தது ஓ.என்.ஜி.சி. ஒரு சில நாட்கள் ஆய்வு செய்துவிட்டுப் போனவர்கள், இன்று வரை அதற்கான தீர்வைக் காணவில்லை. இடையில் மாரிமுத்துவும் இறந்து விட்டார். தற்போது அவரது தம்பி வீரய்யா இதற்காகத் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் புதுக்கோட்டை

மேலும் படங்களுக்கு

 திறந்த வெளியில் எண்ணெய்க் கொப்பளித்து நடவு செய்யப்பட்டிருக்கும் விவசாய நிலத்திற்குள் நுழைகிறது. ஆரம்பக் காலங்களில், அறியாமையில் மக்கள் இந்த எண்ணெயை எடுத்து சமையலுக்கு எரிபொருளாக பயன்படுத்தியிருக்கின்றனர். சில துளிகளை எடுத்துப் பற்ற வைத்தாலே, அது நீண்ட நேரம் எரியும் தன்மைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த எண்ணெயை அப்புறப்படுத்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 
வடகாடு கிராமம், கல்லிக்கொல்லை:
2003யில், 7 ஆயிரம் அடியில் இங்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் மாணிக்கவாசகம் சமீபத்தில் இறந்துவிட்டார். குழாயிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கொட்ட ஒரு தொட்டியும், சூடாகும் குழாயை குளிர்விக்க பயன்படுத்தப்படும் குளிர்ந்த நீரை சேமிக்க ஒரு தொட்டியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் புதுக்கோட்டை

கருக்கா குறிச்சி, கருநல்லாண்டார் கொல்லை:
நெடுவாசலுக்கு வெகு அருகிலிருக்கும் கிராமம். 2007யில் இதன் உரிமையாளர் வீரம்மாளிடம் இருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர். கழிவுகளைக் கொட்டும் தொட்டி, திறந்த நிலையில் கழிவுகளோடு அப்படியே இருக்கிறது. தகரக் கொட்டகை அமைத்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் புதுக்கோட்டை

மேலும் படங்களுக்கு

இப்படி இந்த நான்கு கிராமங்களைத் தொடர்ந்து ஐந்தாவதாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இந்தப் பகுதிகளில் போராடும் மக்களின் கோரிக்கை இரண்டு தான்...
1. நெடுவாசலை சுற்றியிருக்கும் கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழாய்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். தேங்கியிருக்கும், வழிந்துக் கொண்டிருக்கும் கழிவுகளுக்கு ஒரு முடிவு கொண்டுவர வேண்டும். 
2. நெடுவாசலில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. நெடுவாசலில் மட்டுமல்ல, செழிப்பான விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தங்கள் மண்ணின் எந்தப் பகுதியிலும், விவசாயத்தை பாதிக்கக் கூடிய எந்தத் திட்டங்களும் கொண்டு வரக் கூடாது. 
வாதங்களும், பிரதிவாதங்களும்:
ஆதரவுக் குரல்: ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது 90களில் இருந்தே நெடுவாசல் பகுதிகளில் இருக்கிறது. திடீரென இப்போது அதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?
எதிர்ப்புக் குரல்: உண்மை தான். அன்றைய காலகட்டத்தில், அறியாமையின் பொருட்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டனர். ஏன் இன்றும் கூட அந்தக் குழாய்களில் என்ன எடுக்கப்படுகிறது, அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்த எந்த விவரங்களும் நில உடைமையாளர்களுக்கே தெரியவில்லை. வடகாட்டில் எண்ணெய் வழிந்து விவசாய நிலத்தை பாதிக்கிறது. எளிதில் பற்றிக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்த எண்ணெய் பல ஆண்டுகளாக திறந்த வெளியில் அப்படியே இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த இன்றைய தலைமுறையினர் தங்கள் நிலங்களைக் காக்க போராடுவதில் தவறில்லையே? 
போபால் விஷ வாயு விபத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் எல்லாம் ஒரு நொடி நின்று ஈரத் துணி கொண்டு முகத்தை மூடியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவைக் கூட மக்களுக்குப் புகட்டாத இந்த அரசை நம்பி எப்படி எங்கள் விவசாய நிலங்களைக் கொடுக்க முடியும்?
ஆதரவுக் குரல்: எண்ணெய், எரிவாயுக்கள் இருக்கும் இடத்தில் தானே அதை எடுக்க முடியும். விவசாயிகளே கூட இன்று பெட்ரோல், டீசல், கேஸ் இல்லாமல் இருக்க முடியாதே. நாட்டிற்காக சிலர் சில தியாகங்களை செய்வதில் தப்பில்லையே?
எதிர்ப்புக் குரல்: ஒரு திட்டத்திற்கான செலவை இரண்டாக பிரிக்கலாம். பொருளாதார செலவு (Economic Cost) மற்றும் சுற்றுச்சூழல் செலவு (Environmental Cost). பல வளர்ந்த நாடுகளும் சுற்றுசூழல் செலவுகளைக் கணக்கில் கொண்டே திட்டத்தை செயல்படுத்திகின்றனர். முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடுகளை சுவிட்சர்லந்து அரசாங்கம் தத்தெடுப்பதற்கும், அமெரிக்க நிறுவனங்கள் மேட்டுப்பாளையத்தில் மரங்களை வளர்த்து கார்பன் டிரேடிங் செய்வதற்கும் பின்னணியில் இருக்கும் அரசியலைப் புரிந்துக் கொள்ளுங்கள். நெடுவாசல் திட்டத்தின் மூலம் 9ஆயிரம் கோடி ரூபாய்க்கான வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, பல ஆயிரம் மக்களின் வாழ்வாதரமான விவசாயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஹைட்ரோ கார்பனை விட, அரிசியும், கரும்பும், கடலையும், வாழையுமே முக்கியமாகப் படும். 
மக்கள் விரும்பாவிட்டால் இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் பாஜகவினர். மக்கள் இந்தத் திட்டத்தை துளியும் விரும்பவில்லை, வானளவு, கடலளவு வெறுக்கிறார்கள் என்பதை தொடரும் 15 நாட்களுக்கும் மேலான போராட்டத்தின் மூலம் அல்லாமல் வேறு எப்படி பாஜகவினருக்கு புரியவைப்பது என்பது தான் தெரியவில்லை...
- இரா. கலைச் செல்வன். 
படங்கள்: ம.அரவிந் விகடன் 

கருத்துகள் இல்லை: