வியாழன், 16 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் : சசிகலா குடும்பத்தின் மக்கள்விரோத ஆட்சியை அகற்றுவோம் !

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி கே. பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சசிகலா தவிர வேறு யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா தெரிவித்தார். சசிகலா உறவினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவர்கள் யாரும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று சசிகலா உறவினர்களின் ஆட்சி தான் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ளது. ஜெயலலிதா யாரை எல்லாம் ஒதுக்கி வைத்தார்களோ அவர்கள் தான் இன்று கட்சியை இயக்குகின்றனர்.


எம்எல்ஏக்கள் நல்ல முடிவினை எடுக்க வேண்டும். தமிழகத்தின் 7.5 கோடி பேர் எங்களை தான் ஆதரிக்கின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதிமுக அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எங்களையே ஆதரிக்கின்றனர்.

மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓய மாட்டோம், உறங்க மாட்டோம். 1% பேர் கூட விரும்பாத ஆட்சி இன்று தமிழகத்தில் பொறுப்பேற்று இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: