சனி, 18 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் :சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: திமுகவின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 21 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் நேர்மையை நிலைநாட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த அளவுக்கு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 14-6-1996-ல் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
1996-ல் திமுக ஆட்சி வந்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தர வின்பேரில் ஊழல் தடுப்பு துறை விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார். முதல் தகவல் அறிக்கை 18-9-1996-ல் தாக்கல் செய்யப் பட்டது. 4-6-1997-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு திமுக ஆட்சி யில் விசாரணை முறையாக நடந்து வந்தது. ஆனால், 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கை சீரழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
முதல்வராக இருந்த ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தினார். 259 சாட்சிகளில் 64 பேர் அதிமுக ஆட்சியில் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். அதிமுக ஆட்சியில், 3 அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத் துக்கு மாற்றக்கோரி 18-11-2003-ல் உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலா ளர் க.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதனை ஏற்று, இந்த வழக்கு பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தமிழகத்தில் 7 ஆண்டுகள், கர்நாடகத்தில் 14 ஆண்டுகள் என 21 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தற்போது இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகள் எப்படி வழக்கை இழுத்தடித்தார்கள் என்பதை பட்டியலிட்டால் ஆண்டு முழுவதும் எழுதிக் கொண்டே இருக்கலாம்.
வாய்தாக்கள், தடைகள், குழப்பங்கள், மிரட்டல்கள் என அத்தனை வகை யுக்திகளையும், தந்திரங்களையும் கையாண்டு தீர்ப்பை தாமதப்படுத்தி வந்தார்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு மிரட்டல் விடுத்து வழக்கிலிருந்து அவரை ராஜிநாமா செய்ய வைத்தார்கள்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தங்களது வருமானத்துக்கான வழிமுறைகளை திருப்திகரமாக விளக்கிச் சொல்ல முடியவில்லை எனக்கூறி தண்டனையை அறிவித்தார்.
இந்தியாவிலேயே முதல்வராக பதவியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவியை இழந்தவர் ஜெயலலிதா. தமிழக முதல்வரின் காரில் இருந்த தேசியக் கொடி அண்டை மாநிலத்தில் இறக்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய குன்ஹாவுக்கு எதிராக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பில், போயஸ் கார்டன் இல்லத்தில் இவர்கள் ஒன்றாக வசித்தது தர்ம காரியங்கள் செய்வதற்கு அல்ல, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவிக்கவே என்றும், ஜெயலலிதாவுக்கு ஏஜெண்டாக சசிகலா செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
அரசியலுக்கு வருவோர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். ஊழல் செய்து, சொத்துக் குவிக்கும் பேராசைக்காரர்களாக இருக்கக் கூடாது என்பதற்கு மிகச்சிறந்த பாடமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நாளைய சமுதாயமும், நாடும் முன்னேற இந்தத் தீர்ப்பின் வாசகங்களை அரசியல் தலைவர்கள் உற்று நோக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். நீதியின் இந்த வெற்றி கொண்டாடுவதற்கு அல்ல, கடைப்பிடிக்கவே என்பதை உணர்ந்து தமிழகத்துக்கு பெருமை சேர்ப்போம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
hindu

கருத்துகள் இல்லை: