சனி, 18 பிப்ரவரி, 2017

குமாரசாமி தீர்ப்பின் போது விகடன் சொன்னது என்ன ?

போயஸ் தோட்டத்து பூசாரி விகடன் : அன்றும் இன்றும்
நீதி நின்று கொல்லும்!” – இது பிப் 22 2017 தேதியிட்ட ஆனந்த விகடனின் தலையங்கம். உச்சநீதிமன்றமே குற்றவாளிகள் என்று தண்டித்துவிட்டதால் விகடன் நிறுவனம் தைரியமாக ஜெயாவைப் பற்றி எழுதுகிறது. தலையங்கத்தில் இருந்து சில மேற்கோள்களைப் படியுங்கள்:
;தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' என்று அரசியல்வாதிகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பவாதத்துக்கும் பயன்படுத்திய வார்த்தைகள் இப்போது உண்மையிலேயே அர்த்தம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதா மரணமடைந்ததாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அவர் குற்றம் இழைக்காதவர் என்பதால் அல்ல. ஓர் அரசியல் தலைவரின் மரணத்தோடு அவரது அரசியல் தவறுகளும் முறைகேடுகளும் மறைந்து போய்விடாது.ஒரு ரூபாய்தான் சம்பளம்’ என்று ஜெயலலிதா அறிவித்த ஆட்சிக் காலத்தில்தான் இந்த அநீதியான சொத்துக் குவிப்பு நடந்தது என்பதை மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் கூடாது.
ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை, விகடன் தலையங்கம் வரவேற்று எழுதியிருந்தது.
குன்ஹா வழங்கிய தீர்ப்பு, நீதியை அடிப்படையாகக்கொண்டது என்று மனச்சாட்சியுள்ள அனைவரும் அப்போது வாழ்த்தி வரவேற்றார்கள். ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து சேர்க்கலாம்' என்று குமாரசாமி வழங்கிய நவீன’ தீர்ப்போ நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
ஆனால், நீதியின் வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுக்க முடியாது என்பதைத்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்திருக்கிறது.//
சரி, இப்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தவர்கள், குன்ஹாவையும் ஆதரித்திருக்கிறார்கள். எனில் விகடன் கம்பெனி குமராசாமி தீர்ப்பை கண்டித்து எழுதியிருக்க வேண்டுமல்லவா? குறைந்த பட்சம் இப்போது எழுதியிருப்பது போல அதிர்ச்சியாவது அடைந்தார்களா?

“மீதம் இருக்கும் தீர்ப்புகள்!” – இது 20 மே 2015 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் தலையங்கம்! குமராசாமி தீர்ப்பால் ஜெயா விடுதலை ஆனதும் எழுதப்பட்ட தலையங்கம் இது! என்ன சொல்கிறார்கள் படியுங்கள்:
// “சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கட்சியினர் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தங்கள் தலைவியின் வருகையைக் கொண்டாடுவது, அவர்களின் உரிமை. ஆனால் ஓர் அரசாங்கம் என்ற வகையில், இப்போது தமிழ்நாடு அரசு உடனடியாக உண்மையாக செய்ய வேண்டியது என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ‘4 ஆண்டு சிறை,100 கோடி ரூபாய் அபராதம்’ என்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். இடையில் இந்த ஏழரை மாதங்கள் மொத்தத் தமிழ்நாடும் நிர்வாகக் குளறுபடிகளால் ஸ்தம்பித்தது.
மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறுகின்றன.
எதைக் கேட்டாலும் ‘அம்மா வரட்டும்… அம்மா வந்தால்தான்…’ என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11-ம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள், செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள்.//
ஆக குமராசாமி தீர்ப்பு குறித்து விகடன் எதிர்த்து எழுதாதது மட்டுமல்ல, கடுகளவு அதிர்ச்சியும் அடையவில்லை. அதை சரி செய்வதற்காக ஓபிஎஸ் ஆண்ட அந்த குமராசாமி தீர்ப்பால் வந்த ஆட்சியை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்த நாட்களில் தமிழக அரசு செயல்படவில்லை, வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின என்று விளக்குகிறார்கள். அதுவும் ஜெயலலிதா ஆண்டிருந்தால் இந்த முடக்கம் வராது என்று மறைமுகமாக மட்டும் கூறவில்லை. இனியாவது அவர் வளர்ச்சியை குறித்துக் கொண்டு செயல்படவேண்டும் என்று மயிலிறகால் போதனை செய்கிறார்கள்.
அப்போது ஜெயாவின் குற்றம் குறித்தோ இல்லை இதற்கு உச்சநீதிமன்றத்திலாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்றோ ஏன் விகடன் எழுதவில்லை? பயமா? இல்லை பாசாங்கா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா? இந்த செலக்டிவ் அம்னீஷியா கூட ஜெயலலிதா பயன்படுத்திய வார்த்தைதான். சந்தர்ப்பவாத விகடனுக்கு அது கண்டிப்பாக புரிந்திருக்கும்! நீதி, நேர்மை, அறம் போன்ற வார்த்தைகளெல்லாம் நெருக்கடியான நேரத்திலும் நாம் அப்படி வாழ்கிறோமா பேசுகிறோமா என்பவையோடு தொடர்புடையவை! விகடனோ எல்லாரும் தைரியமாக பேசும் போது கூட்டத்தோடு கூட்டமாக ஜெயாவைக் கண்டிக்கிறது. இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகள் பத்திரிகை நடத்தி ஈட்டிய நற்பெயரின் இலட்சணம்!
_________
குற்றவாளி ஜெயா கும்பலை ஆதரிக்கும் சினிமா குற்றவாளிகள்!

ஜெயா-சசி கும்பல் குற்றவாளிகளே என்று நீதிபதி குன்ஹா செப் 27, 2014 அன்று தீர்ப்பளித்தார். அப்போது குன்ஹாவுக்கு எதிராக அதிமுக பொறுக்கிகள் நடத்திய கலவரங்களை அறிவீர்கள். அதில் தமிழ் திரையுலகம் கூடுதல் பொறுக்கித்தனத்துடன் நடந்து கொண்டது. கவிராயர்களும், கலைமாந்தர்களும் நிறைந்திருக்கும் துறை என்பதால் “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்றெல்லாம் பிளக்ஸ் வைத்தார்கள்.
தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் இந்த சினிமா பொறுக்கிகளுக்கு யார் தண்டனை கொடுப்பது?
முழுக்கட்டுரை, படங்களை படிக்க பார்க்க:


கொள்ளைக்காரி ஜெயா விடுதலை ஏன்? நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் ஜெயா-சசி கும்பல் விடுதலை ஆன போது வினவு தளம் உடன் வெளியிட்ட கட்டுரை தலைப்பு இது. இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு மற்ற ஊடகங்கள் குறிப்பாக ஜெயாவுக்கு சொம்படித்த பத்திரிகைகள் ஊழலுக்கு எதிராகவும், ஜெயாவுக்கு எதிராகவும் பேசுவதாக நடிக்கின்றன. குமாரசாமி தீர்ப்பின் போதோ இவர்கள் இதே ஜெயாவை சாதனை நாயகியாக பாராட்டினர்.
ஆனால் குமாரசாமி தீர்ப்பின் போது வினவு மட்டுமே ஜெயாவை கொள்ளைக்காரி என்று அழைத்து தீர்ப்பை விமரிசித்தன. அப்போது ஜெயாவின் காட்டாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இந்த தலைப்பு வைப்பதனால் வரும் அடக்குமுறைகளை எதிர்பார்த்து ஆலோசித்து விட்டே வெளியிட்டோம்.
ஊடக தர்மம், நியாயம், கொள்கை, அறம் போன்றவை மற்ற ஊடகங்களின் காலில் மிதிபடும் பொருட்கள். அதற்கு மெரினாவில் அகற்றப்பட வேண்டிய குற்றவாளியாக கொலுவிருக்கும் ஜெயாவே சாட்சி
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்.

கருத்துகள் இல்லை: