வியாழன், 16 பிப்ரவரி, 2017

BIGO LIVE(18+): டிஜிட்டல் வலன்டைன் டே ... சத்தம் போடாமல் தூள் கிளப்பிய காதலர் தினம் !


இளவட்டங்கள் மிகவும் அமர்க்களமாக காதலர் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான அளவில் ஒன்றுகூடி காதலர் தினம் கொண்டாட்டம் என்று செய்திகளை எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள். ஆனால், நடைபெற்றது உண்மை. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று BIGO LIVE அப்ளிகேஷனில் மட்டும் 70 மில்லியன் யூசர்கள் லாக்-இன் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன BIGO LIVE செய்துவிடுகிறது தெரியுமா? வீடியோ காலிங் வசதி தான் இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம். எவ்வளவோ வீடியோ கால் வசதிகொண்ட அப்ளிகேஷன் இருந்தாலும், BIGO LIVE எந்த விதத்தில் சிறப்பு என்றால், இதில் வீடியோ கால் வசதி மட்டும் தான் இருக்கிறது. விரிவாகப் பார்ப்போம்.


உலகத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாக மாறிவருகிறது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை, வீட்டிலிருந்தபடியே மக்களுக்கான செயல்திட்டங்களைத் திறந்து வைக்கும் முதல்வர் ஆகியவற்றின் வரிசையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்ற பெயரில் பணத்தையே கண்ணில் பார்க்கமுடியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த டெக்னாலஜி புரட்சியில், மற்றவர்களை விடவும் இரண்டு படி முன்னே என்றால் தான், நாளை அவர்கள் முன்னேறும்போது நம்மை பின்னால் தள்ளிவிடமுடியாது என்று பல முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது உலகம். அப்படி சிங்கப்பூரில் உள்ள BIGO TECHNOLOGY PTE. LTD. மூலமாக உருவாக்கப்பட்டது தான் BIGO LIVE அப்ளிகேஷன்.

வீடியோ கால் மூலம் உலகின் பல்வேறு மூலைகளிலும் இருப்பவர்களிடம் பேசுவதற்கு உதவியாக இருந்த அத்தனை அப்ளிகேஷன்களும் அதிகளவில் பணம் வசூலித்துக்கொண்டிருந்த சமயத்தில், இலவச வீடியோ கால் வசதியுடன் அப்ளிகேஷன் உலகையே அதிரவைத்தது BIGO LIVE. வருகிற மார்ச் மாதத்துடன் BIGO LIVE வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. இதுவரை அவர்களது டவுன்லோடு எண்ணிக்கை மட்டும் 100 மில்லியன். டவுன்லோடு செய்பவர்களெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லமுடியாதுதான். ஆனால், கடந்த காதலர் தினத்தன்று 60 மில்லியன் யூசர்களை BIGO LIVE கண்டிருப்பதன் மூலம் இன்ஸ்டால் செய்தவர்கள் எல்லாம் பயன்படுத்துவார்களா? என்ற கேள்வியின் அடிப்படை உடைகிறது.

(பாடகி வர்ஷா திரிபதி, தன் ரசிகர்கள் கேட்கும் பாடல்களைப் பாடியபோது...)
BIGO LIVE கூட ஒரு சமூக ஊடகம் தான். ஃபேஸ்புக் ட்விட்டரில் எழுதுவது, இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ பதிவு செய்வது போன்று லைவில் வீடியோ பார்ப்பதாக உருவாகியிருக்கும் BIGO LIVE ஒரு சமூக ஊடகம் தான். ஆனால், அது சமூகத்தை எந்த அளவுக்கு ஊடுருவிச் செல்கிறது என்பது தான் இங்கு சுவாரஸ்யமாகிறது. முதலில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் அடிப்படையை புரிந்துகொண்டால் தான் அடுத்து சொல்லப்போகும் தகவல்களை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உருவாக்கப்படும்போதே உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கான அப்ளிகேஷனாக உருவாக்கப்படுவதில்லை. முதலில் குறிப்பிட்ட நாட்டு மக்களின் பொழுதுபோக்கையும், வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள், அவற்றின் புகழ் பரவப்பரவ உலகசந்தைக்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன. இதன்படி சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட இந்த BIGO LIVE அப்ளிகேஷன், சிங்கப்பூரில் வெற்றி பெற்று இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் தான் Chat செய்யும் வசதியைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பே ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் மார்கெட்டுகளில் தாய்லாந்து நாட்டில் இந்த BIGO LIVE அப்ளிகேஷன் முதலிடத்தில் இருந்து வருகிறது. நல்ல விஷயம். ஆனால், ஏன்? கலாச்சாரம் மிகுந்த தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் இந்த அப்ளிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுவது ஏன்? அப்ளிகேஷன் இயங்கும் விதத்தைப் பற்றிப் பேசினால் எளிதாக அதை புரிந்துகொள்ளலாம்.

BIGO LIVE அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது மெயில் ஐடி மூலம் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அப்போதைக்கு உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து LIVEஇல் இருக்கும் யாருடனும் நீங்கள் பேசலாம். பேசலாம் என்றால் நேரடியாக அல்ல. அவர்கள் வீடியோவில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களது வீடியோவில் நீங்கள் கமெண்ட் செய்யலாம். உங்கள் கமெண்ட் மூலம் உங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். பெரும்பாலான கமெண்ட்கள், KISS ME. You are HOT என்பதாகவே இருக்கும் என்பதால் இவற்றைக் கடந்துவிடுவோம். உங்களது கமெண்ட்களைப் படித்து வீடியோவில் பேசிக்கொண்டிருப்பவர் பதில் சொல்வார். வீடியோவில் இருவரும் முகம் பார்த்துப் பேச நீங்கள் கோரிக்கை வைக்கலாம். நீங்கள் அவரை வார்த்தைகளினால் இம்ப்ரெஸ் செய்திருந்தால் வீடியோவில் முகம் பார்த்து பேசுவார். சுவாரஸ்யம் அதிகமாகிறதா? இங்கு தான் ஒரு செக்.

வார்த்தைகளினால் யாரையும் இம்ப்ரெஸ் செய்யும் திறமை இருந்தாலும், உலகின் அனைத்து மொழிகளையும் கற்றுணர்ந்தவர்கள் அதிகம் இருக்கமாட்டார்களல்லவா? தாய்லாந்தில் இருப்பவருடனோ, கம்போடியாவில் இருப்பவருடனோ நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் திறன் எடுபடாது. அங்கு தான் BIGO LIVE அப்ளிகேஷன் தனக்கான லாபத்தைப் பார்க்கிறது. நீங்கள் வீடியோவில் பார்த்துக்கொண்டிருப்பவருக்குப் பல பரிசுப் பொருட்களை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் பரிசுப் பொருட்கள் சாதாரணமாகக் கிடைத்துவிடுவதில்லை. அவற்றைப் பணம் கொடுத்து BIGO LIVE மார்க்கெட்டிலிருந்து வாங்கவேண்டும். ரீசார்ஜ் செய்து ஃபோன் செய்வது போலத்தான். நீங்கள் அனுப்பும் கிஃப்ட்களில் மட்டும் அவர் இம்ப்ரெஸ் ஆகிவிடுவாரா? என்பதல்ல கேள்வி. நீங்கள் அனுப்பும் பரிசுப்பொருட்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்பது தான். பரிசுப் பொருட்களை அனுப்பும்போது அவை, உங்கள் வீடியோ ஸ்கிரீனின் இடையில் சொயிங் என்று கிராஸ் ஆகும். இல்லையென்றால் வெடித்து தனது வருகையைத் தெரிவிக்கும். இப்படி இம்ப்ரெஸ் செய்தால் அவர் உங்களுடன் LIVE வீடியோவில் பேச வாய்ப்புண்டு. இந்தப்பரிசுப் பொருட்களினால் அவருக்கென்ன பயன் என்று கேட்கலாமே. நீங்கள் அனுப்பும் பரிசுப்பொருட்களின் மதிப்பு, பரிசைப் பெற்றவரின் பாய்ண்ட்களாக மாறும். அந்த பாய்ண்ட்களை அவர் அப்படியே பணமாக அவரது அக்கவுண்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் பணம் மீண்டும் பணமாக மாறுகிறது. இடையில் இருக்கும் பணப்பரிமாற்றம் BIGO LIVE அப்ளிகேஷனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த அப்ளிகேஷன் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தைவான் சீனா, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் தான்.

கடந்த ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவில் FaceTime மூலம் அமெரிக்கப் பெண்ணுடன் பேசிய ஒருவருக்கு மரணதண்டனை வழங்கியதாக செய்திகள் வெளியாகின அல்லவா? அந்த சவுதி அரேபியாவும் இந்த அப்ளிகேஷனை நிறைய பயன்படுத்துகிறது. FaceTimeஇல் பேசிய அவர் சிக்கியது, அந்த வீடியோவை ரிலீஸ் செய்ததால் தான். இல்லையென்றால் அவருக்கு எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. BIGO LIVEஇலும் வீடியோ சேமிக்கும் வசதியில்லை என்றாலும் அதற்கென இருக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் லைவில் பேசுவது ரெகார்ட் செய்யப்பட்டு யூடியூப் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்படுகிறது. BIGO LIVE Videos என்று யூடியூபில் தேடிப்பார்த்தால் இனி சொல்லப்போவது தவறாகத் தோன்றாது.

BIGO LIVE அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், மற்றவர்களை பொழுதுபோக்கி - மகிழ்வித்து அதன்மூலம் அவர்களிடமிருந்து கிஃப்டுகளைப் பெற்று அவற்றைப் பணமாக மாற்றிக்கொள்வதற்காகத்தான். ஆம், நீங்கள் பாட்டு பாடலாம், நடனமாடலாம், சமைக்கலாம், உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிரலாம், உங்கள் திறமையைக் காட்டலாம் என்று BIGO LIVE அப்ளிகேஷனின் பயன் பற்றி அதை உருவாக்கிய நிறுவனம் பட்டியலிடுகிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் உடை அணிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை மட்டும் அறிவுறுத்தவில்லை. மற்றவரை பாதிக்காத வகையில் நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்று Terms & Condition எப்போதும் சொல்கிறது. ஆனால், குறைந்த ஆடையுடன் அல்லது அதுகூட இல்லாமல் பாட்டு பாடவோ, நடனமாடவோ, சமைக்கவோ கூடாதென BIGO LIVE அப்ளிகேஷனில் சொல்லப்படவில்லை.

(BIGO LIVE மூலம் காதலாகி, அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பது அறிந்து மனைவியாக ஏற்றுக்கொண்டவர்)
உடுத்தும் உடைக்குக் கூட கட்டுப்பாடென வளர்ந்து, செக்ஸ் என்பது ஒரு மர்மமாகவே கடந்து செல்லும் இளவட்டங்களின் காதலர் தினக் கொண்டாட்டமாக இந்த அப்ளிகேஷன் இருந்திருக்கிறது என்பதை அந்த 60 மில்லியன் உணர்த்துகிறது. சொற்ப பணத்துக்காக பார்களிலும், பார்ட்டிக்களிலும் நடனமாடும் பெண்களுக்கு இந்த BIGO LIVE சொர்க்கபூமியாகத் திகழ்கிறது.

நேரம், காலம் என்றெல்லாம் இந்த BIGO LIVE வீடியோக்களுக்கு அளவு கிடையாது. உறங்குவதைக் கூட LIVE-இல் போட்டுவிட்டு உறங்கிவிடுகிறார்கள். காலையில் எழுந்து ஆஃப் செய்துவிடுகிறார்கள். அதையும் சிலர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பெண் உறங்கும்போது எப்படி இருப்பார் என்பதைப் பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். யார் உறங்கினாலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள். கவர்ச்சிக்கு இந்த வீடியோவில் முதலிடமாக இருக்கிறது. குழந்தையிடம் பேசிக்கொண்டிருப்பதை LIVE டெலிகாஸ்ட் செய்துகொண்டிருக்கும் பெண்ணிடம்கூட துணியைக் கழட்டு என்று சொல்வதெல்லாம் நடைபெறுகிறது. பாலியல் தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு BIGO LIVE மிகப்பெரிய வரமாக இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

கடந்த காதலர் தினத்தன்று Be My Valentine Challenge என்று ஒரு போட்டியை நடத்தினார்கள். இதன் நோக்கம், அவர்கள் விரும்பும் பெண்ணிடம் லைவில் புரபோஸ் செய்து காதலிக்க வைக்கவேண்டும். இந்த போட்டிக்குத்தான் அத்தனை கோடி பேர் ஒன்று திரண்டிருக்கிறார்கள். அதற்காக மட்டுமல்லாது, அனைத்து நாட்டிலிருந்தும் வேலண்டைன்ஸ் டே சிறப்பாக பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக மிகவும் நெருக்கமாக கண்காணித்த சில தகவல்களை இங்கே கொடுக்கிறேன்.

இந்தியா தவிர எந்த நாட்டிலும் பெண்கள் முகத்தை மூடுவது கிடையாது. சவுதி அரேபியா தவிர எந்த நாட்டு ஆண்களும் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு பேசுவது கிடையாது. தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து LIVE வரும் பெண்களில் பலர் பார்ட் டைம் வேலையாகவே இதைச் செய்கிறார்கள். இந்த அப்ளிகேஷனின் பெரும்பான்மையாக பெண்கள் இருக்கின்றனர். அதாவது LIVE வருவதில் அதிகம் பேர் பெண்களாக இருக்கின்றனர். அதில் கமெண்ட் செய்பவர்களில் பலர் ஆண்களாகவும், முக்கியமாக இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். எந்த லைவை திறந்து பார்த்தாலும் அங்கே இந்தியப்பெயர் ஒன்று கமெண்டில் தனது ஃபேஸ்புக் ஐடி அல்லது வாட்ஸப் நம்பரைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. டெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனிதன் கலாச்சாரம் என்பதன் பின்னால் ஒளிந்துகொண்டு, அந்தந்த வயதில் தேவையான அறிவைக் கொடுக்கத் தயங்குகிறான். என்ன செய்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் இளைஞர்களை கட்டிவைக்கிறான். விளைவு, அந்த கயிறு அறுந்துபோகிறது. 18 வயது ஆனால் தான் ஃபேஸ்புக் ஐடி பயன்படுத்த முடியும் என்பதில்லை. அதில் வயதைத் தவறாக குறிப்பிட்டு எந்த இணையதளத்தை வேண்டுமென்றாலும் அணுகலாம். ஏன், கொஞ்சம் டெக்னாலஜி புரியாத பெற்றோராக இருந்தால் உங்கள் சர்டிஃபிகேட்டுகளைப் பயன்படுத்தியே உங்களுக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் இக்கால இளைஞர்களால் செய்யமுடியும். ஆனால், எது ஆபத்து? எது தவறு? ஏன் தவறு? என்ற விழிப்புணர்வையும், புரிதலையும் கொண்டுவருவது மட்டுமே இதுபோன்ற அப்ளிகேஷன்களில் இவர்கள் எந்த பாதையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். ஸ்மார்ட்ஃபோனும் இண்டர்நெட்டும் மனிதனின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. சில மாற்றங்களை யார் நினைத்தாலும் தடுக்கமுடியாது. அதிலும் இப்போது டிஜிட்டல் மாற்றம் டெல்லி வரை வந்துவிட்டது. தென் இந்தியாவுக்கு வர எத்தனைக் காலம் ஆகிவிடப்போகிறது?
-சிவா

கருத்துகள் இல்லை: