ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு - ஸ்டாலின் : மாணவர்கள்-இளைஞர்களின் போராட்டத்தால் கிடைத்த வெற்றி... மண் மணக்கும் விளையாட்டு


சிலருக்கு கூவாத்தூர் சொகுசு விடுதிகள் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தனக்கு அலங்காநல்லூர் காளைகளும் அதனுடன் பாசமிகு விளையாடிய காளையர்களை காண்பதில்தான் மகிழ்ச்சி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மண் மணக்கும் விளையாட்டுக் களத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது,
உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மகிழ்ச்சி மடல்.
தமிழக அரசியல் சூழல்களின் போக்கைக் கண்டு மகிழ்ச்சியா? முடங்கிக் கிடக்கும் நிர்வாகத்தைக் கண்டு மகிழ்ச்சியா? சீர்கெட்டுள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமையைக் கண்டு மகிழ்ச்சியா? இல்லவே இல்லை. இந்த மகிழ்ச்சி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மாணவர்கள்-இளைஞர்களின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிக்கான மகிழ்ச்சி. மண் மணக்கும் விளையாட்டுக் களத்தில் அவர்களின் அன்பைப் பெற்ற பார்வையாளனாகப் பங்கேற்று பரிசுகளை வழங்கியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி.

சிலருக்கு கூவாத்தூர் சொகுசு விடுதிகள் மகிழ்ச்சி தரலாம். எனக்கு அலங்காநல்லூர் காளைகளும் அதனுடன் பாசமிகு விளையாடிய காளையர்களும் மகிழ்ச்சி தந்தனர்.தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கழக ஆட்சிக் காலத்தில் தடையின்றி நடைபெற்றன. நீதிமன்ற வழக்குகள்-தடைகள்-உத்தரவுகள் இவற்றையெல்லாம் கடந்து தலைவர் கலைஞர் அவர்களின் அரசு சட்ட பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் காட்டியது.
பின்னர் வந்த அ.தி.மு.க அரசின் அலட்சியமான செயல்பாடுகளும் நீதிமன்ற உத்தரவுகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடையை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அலங்காநல்லூர்-பாலமேடு தொடங்கி தமிழகத்தின் பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் தடைபட்டன. தமிழர் திருநாளும் தமிழ்ப்புத்தாண்டும் இணைந்து வரும் பொங்கல் விழாவில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதே தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகும் என தி.மு.கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஜனவரி 3ஆம் தேதி அலங்காநல்லூரில் கழகத்தின் சார்பில் நடந்த ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கியதுடன், அதில் ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்ற ஆர்வத்தை நேரில் கண்டேன். அதன் பிறகும் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டிய நிலையில் தான், மெரினா-தைப் புரட்சி எனும் வரலாற்றுப் பெருமை மிக்க போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்று, அதனைத் தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக மாற்றினர். மத்திய-மாநில அரசுகள் இணங்கி வந்து ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றின. போராடிய இளைஞர்களையும் மாணவர்களையும் காவல்துறை எப்படி கையாண்டது என்கிற வேதனைக் காட்சி இன்னும் மனதில் தழும்புகளாக இருக்கின்றன.
போராடி கிடைத்த வெற்றியினைக் கொண்டாடும் வகையில்தான் பிப்ரவரி 10ந் தேதி அன்று அலங்காநல்லூரில் உற்சாகத் திருவிழாவாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே, “இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். அதனைப் பார்க்க நான் நேரில் வருவேன்’‘ என அவர்களிடம் தெரிவித்தபோது, வாழ்த்தி வரவேற்று முழக்கங்கள் எழுப்பினர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும், இளைஞர்கள்-மாணவர்களின் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணச் சென்றேன்.
இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது தடைகளைத் தகர்த்து, இரண்டாண்டுகால இடைவெளிக்குப் பிறகு இளைஞர்களின் பேரார்வத்துடன் நடைபெறும் போட்டிகளைக் காணும் ஆர்வத்துடன் சென்றேன். மதுரை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். இலங்கை அமைச்சரான பாஸ்கர தொண்டமான் அளவளாவினார். மாநிலத்தை ஆள்பவர்கள் மல்லுக்கட்டுப் போட்டியில் மூழ்கியிருந்த நிலையில், அரசியல் சாயமில்லாத தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்தன.
வாடிவாசல் திறக்கப்பட்டு சீறி வந்த காளைகளையும், அதன் மீது பாய்ந்து அடக்கிய காளையர்களையும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மனிதனுக்கும் விலங்குகளுக்குமான உறவை விளக்கும் விளையாட்டாக அந்தப் போட்டிகளைக் காண முடிந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றிய நிலையில், இந்தப் போட்டிகள் சமத்துவ ஜல்லிக்கட்டாக நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை கடிதமாக எழுதியிருந்தேன். அந்த விருப்பம் நிறைவேறியதையும் அலங்காநல்லூரில் காண முடிந்தது. சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற விளையாட்டுப் போட்டியாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே! உங்களில் ஒருவனான என்னைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி பேரன்பு காட்டிய மக்கள் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களின் பாச மழையில் நனைந்தபடி ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை ரசித்து மகிழ்ந்தேன். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கே விளையாட்டு காட்டி அவர்களின் பிடியிலிருந்து தப்பித்த காளைகளை வளர்த்தவர்களுக்கும் பரிசு வழங்கும் வாய்ப்பையும் அலங்காநல்லூர் மக்கள் எனக்கு அளித்தார்கள். தடைகளைத் தகர்த்து நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு கிடைத்தவை ஊக்கப் பரிசுகள் தான். அதனை உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டனர். வெள்ளந்தியான மனதுடன் இருக்கும் அந்த மக்களைப் பார்த்த போது, இத்தகைய வீரமிக்க பண்பாட்டு விளையாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேன் ஆஃப் த மேட்ச் என்று பட்டம் வழங்கி பரிசளிக்கப்படுகிறது. அதுபோல நமது மண்ணின் பெருமை சொல்லும் ஏறுதழுவதல் போட்டியில் பங்கேற்கும் வீரமிக்க இளைஞர்களுக்கும் காளைகளை வளர்ப்போருக்கும் அனைவரும் கவனிக்கும்படியான பெருமைமிக்க பட்டங்களும் பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்து, ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: