திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு அதிர்வு ! கர்நாடகா கம்பலாவுக்கும் அனுமதி ! தமிழ்நாடு வாங்கி தந்த வெற்றி !

ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து கம்பாலாவுக்கும் அனுமதி! கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா விளையாட்டுக்கு, அம்மாநில சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது
கம்பாலா போட்டியின்போது எருதுகள் துன்புறுத்தப்படுகின்றன. காயமடைந்த எருதுகள் குறித்து கவலை கொள்வதில்லை. எனவே, கம்பாலாவுக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி மற்றும் நீதிபதி கே.சோமசேகர் ஆகியோர் கம்பாலா பந்தயத்துக்கு கடந்த ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கம்பாலாவுக்கு விதித்த தடையை விலக்கக்கோரி, 'தட்சிண கன்னடா கம்பாலா கமிட்டி' கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், கம்பாலா விளையாட்டைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவொன்றை அமைக்கக் கோரியும், அதுவரை கம்பாலா விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தது.
அதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும் எனக்கூறி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் கூடி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழு நாட்களாக தொடர்ந்த போராட்டம், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியபோது கைவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா மீதான தடையை நீக்குமாறு மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திர, 1960 விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனக் கூறினார். மேலும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யாவும் கம்பாலா விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, கம்பாலா அவசரச் சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவோடு கம்பாலா சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரம்பரியமாக கம்பாலா விளையாட்டு நடைபெற்றுவரும் கர்நாடக கடற்கரை மற்றும் தென் கர்நாடக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: