புதன், 3 ஆகஸ்ட், 2016

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி தொடருவார்; இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடருவார் என்று இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா அறிவித்துள்ளார். பேட்மிண்டன் சங்க சர்ச்சை தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ஒருமனதாக நீக்கப்பட்டு இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அசோக் பஜாஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அறிவித்தார். இதனால் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தில் சலசலப்பு உருவானது. இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் டாக்டர் அகிலேஷ் தாஸ் குப்தா, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் அசோக் பஜாஜ்க்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-


தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தங்களது கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. இதுபோல் சங்க தலைவரை நீங்கள் நீக்க முடியாது. இந்த செயல் முற்றிலும் சட்டவிரோதமானது. இது அகில இந்திய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்துக்கு பார்வையாளரை அனுப்பி வைக்கும் படி இந்திய பேட்மிண்டன் சங்கத்துக்கு நீங்கள் தகவல் எதுவும் அனுப்பவில்லை. சாதாரண ஒரு தீர்மானத்தின் மூலம் தலைவரை பதவியில் இருந்து நீக்கி விட முடியாது. நீக்கம் குறித்த தகவலை நீங்கள் பத்திரிகைகள் மூலம் வெளியிட்டது கடும் எதிர்ப்புக்குரிய செயலாகும். பத்திரிகைகளுக்கு செய்தி அளித்ததை நீங்கள் தவிர்த்து இருக்க வேண்டும்.

அன்புமணி தொடருவார்

அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் அதிகாரபூர்வ தலைவர் என்பதை இந்திய பேட்மிண்டன் சங்கம் அங்கீகரித்துள்ளது. அவர் அந்த பதவியில் தொடருவார். தற்போது நீங்கள் தலைவர் அன்புமணி ராமதாசுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க வருங்கால பணிகளில் ஈடுபடுமாறு ஆலோசனை தெரிவித்து கொள்கிறேன். தங்களது மாநில சங்கம் தொடர்பான எந்தவொரு பிரச்சினை மற்றும் நடைமுறை விஷயங்களில் தலைவரின் அனுமதியுடன் தான் பொதுச்செயலாளர் செயல்பட முடியும் என்பது தான் விதிமுறையாகும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் அன்புமணி ராமதாசுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: