வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சசி புஷ்பாவின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து இருக்கிறது.... உறவினர்கள் மீதும் டார்ச்சர் தொடர்கிறது !

தூத்துக்குடி அருகே உள்ள அடையல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பா அதிமுக-வின் தீவிர விசுவாசி. குறுகிய காலத்தில் அரசியலில் வேகமாக வளர்ந்தவர்களில் சசிகலா புஷ்பாவும் ஒருவர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர், அதிமுக-வின் மாநில மகளிரணி தலைவி, மாநிலங்களவை உறுப்பினர் என்று வளர்ந்து கொண்டே வந்தவர் சசிகலா புஷ்பா. டெல்லி விமான நிலையத்தில், திமுக எம்.பி. திருச்சி சிவாவை திடீரென கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா. இதையடுத்து, போயஸ் கார்டனுக்கு விளக்கம் கேட்க அழைக்கப்பட்டார். திருச்சி சிவாவை அறைந்ததற்காகத்தான் தன்னைப் பாராட்ட முதல்வர் வரச் சொல்கிறார் என்ற சந்தோஷத்தில் போனவருக்கு, அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பு வலியுறுத்த, டெல்லி மாநிலங்களவை வரை அமைதியாக போனவர், திடீரென புயல் அடிக்க ஆரம்பித்தார்.

‘பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில், பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை அதிமுக-வில் இருந்து நீக்குவதாகவும் கட்சி தலைமை அறிவித்தது.
மேலும், ‘அதிமுக அரசால், தமிழகத்தில் உள்ள என்னுடைய குடும்பத்தினருக்கும் ஆபத்து வரலாம்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், ‘தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று திருச்சி துணை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சகிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், ‘எங்களுக்கு முன் ஜாமீன் வழக்க வேண்டும்’ என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வழக்கிலும் இறுதி முடிவெடுக்க, காவல்துறையினர், மேலிட உத்தரவுக்காக காத்திருக்கின்றனர் என்றும் உத்தரவு வந்தவுடன், நடவடிக்கை துரிதமாக இருக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அத்துடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவைத் தாக்கிய வழக்கும் நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம் காம்

கருத்துகள் இல்லை: