செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஸ்டாலின் :சசிகலா புஷ்பாவை அடிச்சதுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்

ஈரோட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகிக்க, கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெயதீசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘’இப்போது திமுகவை நோக்கி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். திமுகவில் இணைவதற்கு அவர்களை கட்சியில் சேர்க்கும் விழாவிற்கு தேதி கொடுக்காத அளவிற்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஆளுங்கட்சியை நோக்கித்தான் பிற கட்சியை சேர்ந்தவர்கள் சேருவது வழக்கம். ஆனால், திமுக இப்போது ஆளுங்கட்சியாக இல்லை. பலமான எதிர்க்கட்சியாகத்தான் உள்ளது. திமுகவில் சேர்பவர்களை பார்த்தால் இணைப்பு விழாவாக மாநாடுகள் போல் வருகிறார்கள். எனக்கே சில நேரங்களில் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வருகிறது.

திமுக தோற்றுப்போகவில்லை. ஒரு சிறு விபத்துதான் ஏற்பட்டிருக்கிறது. 1971ல் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 184.
 அதையும் அதிமுக முறியடிக்க முடியவில்லை. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 89. இந்த பலத்தையும் அதிமுக ஒருபோதும் எதிர்க்கட்சியாக பெற்றதில்லை.

திமுகவை நோக்கி மக்களின் எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளது. ஆளுங்கட்சியான இந்த அரசு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வாய்ப்பு அளித்ததே இல்லை. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கடந்த 2 நாட்களாக அடிவாங்கிய செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், இன்று அடிவாங்கியதாக வந்த செய்தி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று திமுக எம்பியை அதிமுக பெண் எம்பி அடித்தார் என்ற செய்தி. இன்று வந்துள்ள செய்தி - முதலமைச்சர் ஜெயலலிதா அவர் கட்சியின் எம்பியான சசிகலா புஷ்பாவை அடித்தார் என்பது. இதை நான் சொல்லவில்லை. அந்த பெண் எம்பி ஏதோ வெளியில் கூட்டம் போட்டு பேசவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் சபாநாயகர் உட்பட அனைத்துக்கட்சி எம்பிக்களும் அவையில் இருந்தபோது தன்னை முதலைமைச்சர் ஜெயலலிதா அடித்ததாகவும் சசிகலாவும் அடித்ததாகவும் கண்ணீர் மல்க, கதறி பேசியுள்ளார்.

இது ஏதோ சாதாரண விஷயமல்ல. என்னிடம் சென்னையில் விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேட்டப்போது, ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன், நீங்கள் யார் அடித்தார்களோ அவர்களைத்தான் கேட்க வேண்டும். அதே போல் அடிவாங்கியவரையும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது கூறுகிறேன். நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் பாதுகாப்பு கேட்டு கதறியிருக்கிறார் அந்த பெண் எம்பி. முதலைமைச்சர் ஜெயலலிதாவும் உடனிருந்த சசிகலாவும் அடித்தார் என்று கூறியிருக்கிறார். ஆகவே இதற்கு ஜெயலலிதா பதில் சொல்லியே தீரவேண்டும்’’ என்று பேசினார். - ஜீவாதங்கவேல்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: