வியாழன், 4 ஆகஸ்ட், 2016

அங்கு போகாதே! அது அவர்களின் இடம்! பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் சாதி ஒடுக்குமறை.. நேரடி அனுபவம்

thetimestamil.com ;அருணா ஸ்ரீ :இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம்.
இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது.
எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய ஒன்று..
* சுருக்கமாக விவரிக்கிறேன்*
புதுவை பல்கலைக்கழத்தில் , ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் ( course structure of 5 year integrated M .Sc) இந்த வருடம் ஒரு சிறிய புகுத்தல் . 5 வருடத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயப் பாடமாக தேர்வு செய்து முடித்திருத்தல் வேண்டும் ( it is mandatory to finish any language course excluding english within 5 years )

. எனக்கு தெரிந்த junior பெண் ஒருத்தி இது பற்றி ஆலோசனைப் பெற தன்னுடைய துறையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை நாடி இருக்கிறாள்.( அந்த ஆசிரியர் இந்த பெண்ணுடைய வீட்டிற்கு எதிர்வீட்டுகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
“நானும் என் வகுப்பு தோழர்களும் தமிழ் துறையில் ஏதேனும் ஒரு பாடம் தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம் . சரியாக வருமா ?” என்று கேட்டு இருக்கிறாள்.
*அதற்கு அந்த ஆசிரியர் , ” தமிழ் துறையில் எல்லாரும் sc /st பசங்க தான் பொண்ணே இருப்பா . அங்கலாம் போகக் கூடாது. ஹிந்தி மாதிரி எதாது எடுத்துக்கோ ” என்று சிறப்பான அறிவுரை கொடுத்திருக்கிறார். இந்த பெண் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள் . என்னிடம் இது பற்றி சொல்லி வருத்தப்பட்டாள் .
இதே ஆசிரியர் நான் .பி. எஸ்ஸியில் இருக்கும்போது , நானும் என் இசுலாமியத் தோழியும் கையெழுத்து வாங்க சென்ற பொது, என்ன பொண்ணே சாப்பிட்ட என்று கேட்க, என் தோழி, ‘ சாம்பார் சாதம், பீப், முட்டை மேடம் ‘ என்று வெகுளியாய் சொல்லி வைத்தாள். உடனே அவர் முகம் போன போக்கு!! எங்களை மேசைக்கு அருகில் கூப்பிட்டு , அதில் இருந்த காமதேனு படத்தைக் காட்டி , ‘ இது சாமி புரியுதா? இல்லையா? இனிமே என் ரூம் பக்கம் வராதே .. போ போ ” என்று விரட்டாத குறை தான்.
அன்று என் தோழி கலங்கியபோது கூட புரியவில்லை எனக்கு !!
வகுப்பறையில் மற்ற மாநில மாணவர்கள் கிசுகிசுத்த போதும் , எரிச்சலுடன் , ” எல்லாம் quota வில் வந்துவிட்டு சூழ்நிலையை கெடுக்கறீங்க ‘ என்று ஆங்கிலத்தில் திட்டுகிறார் orrisa கார வாத்தியார் இன்னொருவர். அவரும் ‘எஸ் டி ‘ சமூகதைச் சார்ந்தவர் தான். ஏணியை எட்டி உதைக்கும் வகையறா .
# என்ன மசுரு தண்டா உங்க பிரச்சன ?
பொதுவான ஒரு கேள்வி தான். fc /obc /mbc க்கு மட்டும் தான் பல்கலைக்கழகம் என்று ஒரு போர்டு தொங்க விடு முடியுமா உங்களால் ? என்ன திமிர் இருக்கவேண்டும் உங்கள் உடம்பில் ? தமிழ் துறையில் உள்ள obc mbc பிள்ளைகள வெளியில் துரத்தி விட்டு விரல் விட்டு எண்ணுங்கள் எத்தனை sc /st பிள்ளைகள் என்று.
இதற்கு கோபப்படுகிறேனே , அப்போ எனக்கும் ஜாதி வெறி தானே என்று உங்கள் அறிவு உங்களைக் கேட்கலாம். ஆமாம் . எனக்கு ஜாதி வெறி தான். ஏன் தெரியுமா ?
* விடுதியில் அறைத் தோழர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்க வருவார்கள். வந்த ஒரு மணி நேரத்தில் என் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு ‘ நீங்க என்ன மா ? ‘ என்று கேட்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் மெதுவாக எழுந்து தன் பிள்ளையின் படுக்கைக்கு தாவி விடுவார்கள். நடவடிக்கை மாறிவிடும். எங்க வீட்லலாம் /இதுலலாம் என்று தோரணை மாறும். நான் கொடுக்கும் ஊறுகாயைத் தொட்டுக்கொள்ள மாட்டர்கள். போகும்போது , ‘பொருள்லாம் பத்திரம். சேர்க்கை முக்கியம் பாப்பா ‘என்று தன் பிள்ளையிடம் சொல்லிவிட்டு போவார்கள். # வலிக்கும் எனக்கு
* scholarship க்கு sign வாங்க நிற்கும்போது , ‘என்னமா? sc scholarship ஆ ? சரி wait பண்ணு ‘ என்று சொல்லிவிட்டு , தன் வேலையை பார்த்துகொண்டே இருப்பார்கள் . நம்ப மாட்டீர்கள் , தொடர்ந்து 3 நாட்கள் காத்திருந்து , பொறுமை இழந்து உள்ளே போனால் , ‘ என்னமா ? sign ஆ .. குடு குடு. சரி , sc ஆ நீ ? பாத்தா தெரிலையே ‘ என்று மேலயும் கீழுமா ஊடுருவிய போது , ‪#‎எனக்கு‬ வலித்தது .
* விடுதியில் இரண்டாம் ஆண்டு : வாரத்திற்கு ஒருவர் என 3 பேரும் மாற்றி மாற்றி முறை வைத்து அறையை சுத்தம் செய்யும் வழக்கம் அங்கே. ஆனால் ஒவ்வொரு வாரமும் , மற்ற இருவரும் என்னை நடத்திய விதம் , மேலிடம் வரை சென்றால் கூட விஷயம் நமுத்து போய்விடும் என்று வாய் மூடி , அறையை சுத்தம் செய்யப் பழகினேன். இப்போது இருக்கும் மனத்தைரியம் அப்போது இல்லை. ‪#‎வலித்தது‬ எனக்கு .
* உடன் பழகி நேசித்தவன் , பெரும் சண்டையில் , ” உன் ஜாதி கார பொண்ணுங்கள எவனாது கல்யாணம் பண்ணிக்க லவ் பண்ணுவானா ? ஒரேடியா பண்ற ….” என்று ஒருவளிடம் நீட்டி முழக்கியபோது # எனக்கு வலித்தது.
* நாம் கொடுக்கும் பதார்த்தங்களை ‘ இல்லைங்க வேணா . வேற ஆளுங்க சமைக்கறத வாங்குறது இல்ல ‘ னு சொல்லும்போது கூனி குறுகி போகையில் , #எனக்கு வலித்தது.
இதெல்லாம் இந்த நாகரிக நகரத்தில் தான். சொல்ல முடியாத சில அவமானங்களை நான் குறிப்பிடவில்லை. கிராம புறங்களில் மட்டுமே நடப்பதாக நினைத்துக் கொண்டு நமக்கு நாமே மூடி அணிந்துக் கொண்டு அம்மணமாய்த் திரிகிறோம்.
Reservation வேண்டாம் என கொதிக்கும் ரத்தங்களுக்கு ஒரே ஒரு கேள்வி . நான் / நாங்கள் பட்ட/ படும் அவமானங்களை ஒரு நாள் நீங்கள் அனுபவித்திருந்தால் , சத்தியமாக உயிர் வாழ மாட்டீர்கள். ஒரு சமூகமே மலம் தின்று தன் பிள்ளைகளை மேலே தூக்கி விட்டிருக்கிறது. அரைக்கண்ணில் உங்கள் மலங்களை நீங்களே பார்க்கும் ஆட்கள் நீங்கள் . அதை அள்ளி வாயில் வைத்து தின்னும்படி உதைக்கப்பட்டவனின் வலி உங்களுக்குத் தெரியாது. உங்கள் மனைவியை / தாயை ஊரே சேர்ந்து தோலுரிக்கும் போது அதை துடி துடிக்கப் பார்த்து சாகும் வலி உங்களுக்குத் தெரியாது.
எங்கள் மேல் ஜாதி வாடை அடிப்பது தவறென்றால் , உங்கள் மேல் காம வாடையும் காவி வாடையும் கொலை வாடையும் வெறி வாடையும் அடிப்பது பெரும் தவறுதான்.
# சரி. பல்கலைக்கழக விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை: