புதன், 18 பிப்ரவரி, 2015

கண்முன்னேயே ஒரு அரிவாள் வெட்டு! வன்முறையை வளர்த்துவிட்டது யார்? ஒத்திசைவு !

நேற்று ஒரு மனிதரை வெட்டிக் கொன்றதை நேரில் பார்த்துத் தொலைத்து விட்டேன். எங்கள் வீட்டிலிருந்து இருநூறடி தொலைவில் நடந்தது. அடுத்த பத்து நாட்களுக்காகவாவது எதையுமே எழுதாமல் இருந்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பெரிய காரணம் எதுவும் இல்லை- சும்மாவாச்சும் ரெஸ்ட். அடுத்தத் திங்கட்கிழமைக்குப் பிறகாக எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த போதுதான் இந்தச் சம்பவம். நேற்றிரவு ஏழரை மணிவாக்கில் நாய்கள் பயங்கரமாக குரைத்துக் கொண்டிருந்தன. எங்கள் தெருவில் இது வழக்கமானதுதான். தெருவில் மட்டுமில்லை ஏரியா முழுவதுமாக தெருநாய்கள் அதிகம். ஒருவிதத்தில் அவைதான் பாதுகாப்பு வீரர்களும் கூட. இரவு நேரங்களில் புது ஆட்களின் நடமாட்டம் இருந்தால் பத்து நாய்கள் சேர்ந்து மொத்த வீடுகளிலும் விளக்கு எரிய வைத்துவிடும். ஏழரை மணி என்பதால் யாராவது குப்பை பொறுக்குபவர்களைப் பார்த்துக் குரைக்கின்றன என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. சிவராத்திரிக்காக அலுவலகம் விடுமுறை என்பதால் வெளியில் நிறுத்தி வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த போதுதான் சப்தம் காதில் விழுந்தது. ஏதோ ஒரு மனிதனின் அபயக்குரல் அது. 
எங்கள் வீட்டுக்குப் பின்னாடிதான் கத்திக் கொண்டிருந்தார். அவசரமாக ஓடிச் சென்ற போது கீழே விழுந்திருந்தார். தெருவிலேயே ஒன்றிரண்டு பேர்கள்தான் இருந்தார்கள். அவர்களும் அந்த மனிதருக்கு அருகில் வரவில்லை. இறுக்கத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த மனிதரிடம் துடிப்பு முழுமையாக அடங்கியிருந்தது. ஆனாலும் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. குப்புற விழுந்திருந்தார். பாதி முகம் மட்டும் தெரிந்தது. அவர் யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏழரை மணி என்பதால் இருள் படிந்திருந்தது. ஆனால் என்ன நடந்தது என்பது தெரிந்துவிட்டது. அவர் தனது பைக்கில் வந்திருக்கிறார். நான்கு பேர்கள் பாதையை மறித்திருக்கிறார்கள். முகவரி கேட்கிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ பைக்கை நிறுத்தியிருக்கிறார். அவர்கள் ஆயுதங்களை வெளியே எடுக்கவும் அவருக்கு புரிந்துவிட்டது. சுதாரித்துக் கொண்டவர் பைக்கை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார். அவர் பைக்கை விட்டு இறங்கியவுடனேயே முதல் வெட்டு விழுந்திருக்கிறது. அதில் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டு அங்கேயே விழுந்து கிடந்தன. அப்பொழுதும் அவர்களிடமிருந்து தப்பித்தவர் கதறிக் கொண்டு ஓடி வரவும்தான் நாய்கள் குரைத்திருக்கின்றன. 
துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவர் இறுதியாக விழுந்து கிடந்த இடத்தை அடைந்தவுடன் பின் மண்டையிலேயே வெட்டியிருக்கிறார்கள். மண்டை பிளந்து கிடந்தது. நாய்கள் பயத்தில் புதர்களுக்குள் ஓடிவிட்டன. ஆனால் தெருவில் இருந்த சில இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களைத் துரத்தியதாகச் சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இறந்து போனவரின் செல்போன் தெறித்துக் கிடந்தது. சிலர் அவரது முகத்தை பார்த்துவிட்டு அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். சிவா. தண்ணீர் விற்பவர்.
எங்கள் பகுதியில் இன்னமும் மாநகராட்சியின் குடிநீர் கிடைப்பதில்லை. சில வீடுகளில் ஆழ்துளைக் குழாய்கள் உண்டு. மற்ற வீடுகளில் வண்டியில் வாங்கிக் கொள்கிறார்கள். அது மிகப்பெரிய வியாபாரம். நிறைய பிரச்சினைகள் உண்டு என்றாலும் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கில் இலாபம் பார்க்கிறார்கள். எங்கெல்லாம் கப்பம் கட்ட வேண்டுமோ அங்கெல்லாம் கப்பம் கட்டிவிடுவார்கள். அப்படியான வியாபாரத்தில் சிவா ஒரு முக்கியமான வியாபாரி. பல வீடுகளுக்கு அவர்தான் தண்ணீர் கொடுக்கிறார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். முன்பு நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டில் தண்ணீர் பிரச்சினை உண்டு. ஒரு தகவல் கொடுத்தால் போதும். வண்டி வந்துவிடும். 
விலையைக் குறைத்துக் கொள்ளச் சொன்ன போது அவர் சொன்னது ஞாபகமிருக்கிறது. ‘இது ஒரு மாஃபியா சார். விலையைக் குறைச்சா பொழைப்பை ஓட்ட முடியாது...வேணும்னா இருபத்தஞ்சு ரூபா குறைச்சுக் கொடுங்க’ என்றார். உண்மையிலேயே அது மாஃபியாதான். இனி வெயில் காலம் வரப் போகிறது. தண்ணீருக்கான தேவை அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளுக்கு சிவாதான் தண்ணீர் கொடுக்கிறார். அவர் ஏதோவொரு விதத்தில் தொந்தரவாக இருப்பார் எனக் கருதியிருக்கக் கூடும்.
அடுத்த கால் மணி நேரத்தில் போலீஸார் வந்துவிட்டனர். அவரை வெட்டிவிட்டு வீசிச் சென்ற அரிவாள் ஒன்று அருகிலேயே கிடந்தது. ‘மூணு மாசத்துக்கு முன்னாடிதான் தன்னோட உயிருக்கு ஆபத்து இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்காரு..ஏன் தனியா வந்தாரு?’ என்று ஒரு போலீஸ்காரர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கேள்விக்கு அர்த்தமே இல்லை. அடுத்த வீதியில்தான் சிவாவின் வீடு இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளியில் வந்திருக்கக் கூடும். போலீஸார் வரும் வரைக்கும் அவர்களது வீட்டில் இருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டில் மனைவியும் அவரது மகனும்தான் இருக்கிறார்கள். மகனுக்கு ஏழு வயது. போலீஸார் வந்து சிவாவின் அலைபேசியில் குடும்பத்துக்குத் தகவல் கொடுத்தார்கள். இரண்டு போலீஸாரே சென்று அவரது மனைவியை அழைத்து வந்திருந்தார்கள்.
அந்தக் காட்சி மிகக் கசப்பேறியதாகத் தெரிந்தது. மிகச் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்திருந்தேன். ஒட்டகங்களை ஒரு மிகப்பெரிய அறைக்குள் விட்டிருப்பார்கள். குட்டி ஒட்டகங்கள். ஒரு மனிதன் ஒவ்வொரு ஒட்டகத்தின் கழுத்திலும் கத்தியை வைத்து இழுப்பான். ஒரே இழுப்புதான். எந்த எதிர்ப்புமில்லாமல் ஒவ்வோர் ஒட்டகமும் சரிந்து விழும். ரத்தம் பீறிட்டு வெளியேறும். இப்படியே இருபது முப்பது ஒட்டகங்கள் அறுத்துத் தள்ளப்படும். இந்த மனிதனின் மண்டையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது அந்தக் காட்சி நினைவில் வந்து போனது. மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமே இல்லாத ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் திரும்பத் திரும்ப ஏதேனுமொரு சம்பவம் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. சுயநலங்களின் மொத்த உருவமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான். தான் பிழைத்தால் போதும். தனது குழந்தைகளுக்கு சொத்துச் சேர்த்தால் போதும். எதிரில் எவன் வந்தாலும் தீர்த்துவிட மனது கணக்குப் போடத் தொடங்கிவிடுகிறது. அதிகபட்சம் இந்த நான்கு பேரும் அந்த மனிதனைத் தீர்த்துக் கட்ட ஒரு லட்சம் ரூபாய் வாங்கியிருப்பார்களா? ஐந்து லட்சமே கூட வாங்கியிருக்கட்டும். ஆனால் கண்களை நான்கு முறை சிமிட்டுவதற்குள்ளாக ஒரு குடும்பத்தின் தூணை சாய்த்துவிட்டார்கள். காரியத்தை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் தூரத்து பிராந்திக் கடை ஒன்றில் சாராயம் குடித்துக் கொண்டிருக்கக் கூடும்.
அந்தப் பெண்மணி தனது மகனிடம் அழுது கொண்டிருந்தார். ‘ஹோம்வொர்க் நோட்டை நீயே வாங்கியிருக்கக் கூடாதா? உனக்கு வாங்கிட்டு வர இருட்டுக்குள்ள வெளியில் வந்தாரே?’ என்று கதறிக் கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். இனி எந்தக் காலத்திலும் அந்த இரவுக் காட்சி அவனது மனதை விட்டு நீங்கப் போவதில்லை. தலைபிளந்து குப்புறக் கிடந்த தந்தையின் காட்சி அவனுக்குள் எவ்வளவு வன்மத்தை வேண்டுமானாலும் தூண்டிவிடக் கூடும். தனது பைக்கில் அப்பா செருகி வைத்திருந்த அந்த ஹோம்வொர்க் நோட்தான் அவனது கடைசி ஹோம்வொர்க் நோட்டாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரத்தம் இறுகிப் போனதில் நிலத்தோடு ஒட்டியிருந்த சடலத்தை மிகச் சிரமப்பட்டும் தூக்கி ஆம்புலன்ஸூக்குள் போட்டார்கள். இரண்டு போலீஸார் கூட்டத்தை துரத்தத் தொடங்கினார்கள். வீட்டிற்குத் திரும்பிய போது எதுவுமே நடக்காதது போல புதருக்குள் ஒளிந்திருந்த நாய்கள் சாலைகளின் ஓரத்தில் படுத்துக் கொண்டிருந்தன.  nisaptham.com

கருத்துகள் இல்லை: