திங்கள், 16 பிப்ரவரி, 2015

கிரிக்கெட்டில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, சூதாட்டப் பணம் புழங்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்தின் தலைநகரமாக மும்பையில் உள்ள சதர் பஜார் கருதப்படுகிறது. கடந்த போட்டிகளின் போது, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை போலீசார் வேட்டையாடி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மும்பையில் கிரிக்கெட் சூதாட்டத்தை அறவே ஒழிக்க உறுதி பூண்டு, காவல் துறையை முடுக்கி விட்டுள்ளார். ஏற்கனவே, புலனாய்வு அமைப்புகள், நகரில் சல்லடை போட்டு, சூதாட்டக்காரர்களை தேடத் துவங்கி விட்டன.
சந்தேகத்திற்கிடமான பகுதிகளில், போலீசார் ரோந்து சுற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சூதாட்ட தரகர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தீவிர குற்றப்பிரிவு போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது போன்ற கெடுபிடிகள் காரணமாக, மும்பையில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின்
நடமாட்டம் குறைந்து விட்டது. அதே சமயம், அவர்கள் தங்கள் தொழிலை, நாசிக் நகருக்கு மாற்றிக் கொண்டுள்ளதாக, தரகர் ஒருவர் கூறினார். ஒரு பிரிவு, குஜராத்திலும் கடை விரித்துள்ளதாகவும், சிலர், மலேசியா, மகாவ் போன்ற பாதுகாப்பான நாடுகளுக்கு சென்று, அங்கிருந்தபடியே சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

யார் வெல்லுவார்?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தான் கோப்பையை கைப்பற்றும் என, சூதாட்ட உலகம் நம்புகிறது. அதனால், ஆஸ்திரேலியாவிற்கு, 2.40 ரூபாய் சூதாட்ட கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெல்லவே முடியாது என்ற அனுமானத்தில், பாகிஸ்தானுக்கு, 9.50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தியாவிற்கு, 5.50 ரூபாய், தென்னாப்ரிக்காவிற்கு, 4 ரூபாய் வசூலிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சூதாட்ட தரகர் தெரிவித்தார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: