திங்கள், 26 ஜனவரி, 2015

Obama Modi ! அணுசக்தி ஒப்பந்தம்: முட்டுக்கட்டை நீங்கியது!

தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக செய்தியாளர்களை நோக்கி கையசைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி.தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக செய்தியாளர்களை நோக்கி கையசைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டை நிலை நீங்கியது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அதிபர் ஒபாமா தன் மனைவி மிஷெல் மற்றும் உயர்நிலைக் குழுவினருடன்சிறப்பு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி வந்தார்.
அவரை, மரபுகளை மீறி விமான நிலையத்துக்கே நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. ஏற்கெனவே, ஒபாமாவுக்கு இதேபோன்ற வரவேற்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்திருந்தார்.
பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முதல் முறையாக விமானப் படையின் பெண் அதிகாரியான பூஜா தாக்குர் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.  
இது குறித்து அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமையேற்று நடத்தியது பெருமிதம் அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராஜ்காட் பகுதிக்குச் சென்ற ஒபாமா அங்குள்ள காந்தி சமாதியில் மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
3 மணி நேரப் பேச்சுவார்த்தை: அதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்துக்கு சென்ற ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து அளித்தார்.
அப்போது பிரதமர் தனது கையாலேயே கோப்பையில் தேநீரை ஊற்றி ஒபாமாவிடம் அளித்தார். அதை ஒபாமா மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் அணுசக்தி ஒப்பந்தம், இரு நாடுகளிடையே பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். அதேநேரத்தில் அமெரிக்க-இந்திய அமைச்சர்கள் நிலையிலும், அதிகாரிகள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டை நீங்கியது.
இந்த ஒப்பந்தத்தை அமலாக்குவதற்கான சிக்கல்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு, சுமுகத் தீர்வு காணப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இந்திய அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம் குறித்து அமெரிக்க அணு உலை தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டிருக்கும் கவலை தொடர்பான பிரச்னைகளை இரு தரப்பும் எவ்வாறு தீர்வு கண்டன என்ற விவரம் தெரிய வரவில்லை.
கூட்டாக செய்தியாளர் சந்திப்பு: இரு தரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து, ஒபாமாவும் மோடியும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
இரு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம். கடந்த சில மாதங்களில், நமது உறவில் புதிய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் காண்கிறேன்.
மாறி வரும் நமது உறவில் அணுசக்தி ஒப்பந்தம்தான் மையமாகத் திகழ்கிறது.
புதிய பொருளாதார வாய்ப்புகளை அது அளித்துள்ளதோடு, தூய எரிசக்திக்கான நமது வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் பாடுபட்டோம். இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் நமது சட்டத்துக்கும், நமது சர்வதேச கடமைகளுக்கும் உள்பட்டு, வணிகரீதியிலான ஒத்துழைப்பை நோக்கிச் செல்கின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மோடி.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஒபாமா கூறியதாவது:
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இரு பிரச்னைகளில் தீர்வு கண்டு பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். இந்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளோம். நாம் இணைந்து பணியாற்றி நமது உறவை எவ்வாறு மேம்படுத்துவோம் என்பதை உணர்த்தும் முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக இரு நாடுகளும் நம்பகமான முறையில் பாடுபட உள்ளன என்றார் மோடி.
முன்னதாக, இந்தியாவில் அளிக்கப்பட்ட விருந்தோம்பல் தன்னை நெகிழச் செய்வதாக ஒபாமா தெரிவித்தார்.

"3 நவீன நகரங்கள்'ஒபாமாவின் பயணத்தையொட்டி, நம் நாட்டில் 3 நவீன நகரங்களை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, அலகாபாத், ஆஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகியவற்றை நவீன நகரங்களாக மேம்படுத்துவதில் ஒத்துழைத்துச் செயல்பட அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில் அமெரிக்க வர்த்தக, வளர்ச்சி அமைப்பின் பிரதிநிதிகளும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் கையெழுத்திட்டனர்.
ஒபாமாவுக்கு தந்தியை பரிசளித்த மோடி!இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த நவீன நகர மேம்பாட்டுக்கான திட்டமிடல், உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உதவி செய்யும்.
நல்லெண்ண நடவடிக்கையாக, இந்தியாவின் அரசியல் நிர்ணயசபைக்கு அமெரிக்கா கடந்த 1946ஆம் ஆண்டு அனுப்பியிருந்த தந்தியின் நகலை ஒபாமாவுக்குப் பரிசாக அளித்தார் பிரதமர் மோடி.
இந்தத் தந்தியை அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் டீன் ஆச்சேசன், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தாற்காலிகத் தலைவர் சச்சிதானந்த சின்ஹாவுக்கு அனுப்பியிருந்தார்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்துக்கு ஒபாமா வந்தபோது அவரை வரவேற்ற மோடி, மேற்கண்ட தந்தியின் நகலை ஒபாமாவிடம் அளித்தார். இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தப் பரிசை மோடி அளித்துள்ளார். நமது குடியரசு தினத்தில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை: