செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்துபிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்துஜெயலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப்  பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள  குற்றங்களுக்கு இணையான  அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது. இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன.;
 ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான  தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது.
மீண்டும்  அவர்களிடமே மறு சீராய்வு மனுப்போட்டு ஒருமுறை மன்றாடலாம்! மற்றபடி, அவ்வாறான தவறு செய்யும் “நீதியரசர்களை”க் கேள்விக் குள்ளாக்குவதற்கோ, விசாரிப்பதற்கோ, தவறு செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்வதற்கோ வழியேதும் கிடையாது!

“நீதியரசர்கள்” விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளின் தீர்ப்புகளில் மட்டுமல்ல, தாங்களே இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், பாலியல் குற்றங்களில் சிக்கினால்கூட இரகசிய விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவிருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், நீதிபதிகளோ சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் ஒளிந்து கொண்டும் அவர்களுக்குள் கூட்டுச்சேர்ந்து கொண்டும் தப்பித்துக் கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தாக்குதல்களில் இருந்து “நீதியரசர்களை”க் காப்பதன் மூலம் நீதிவழுவாது அவர்கள் செயல்படவேண்டும்; அதனால்,  நடுநிலையான தீர்ப்புகள் வரவேண்டும்; ஒருபக்க சார்பாக தீர்ப்புகள் வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இந்த அரசியல் சட்டரீதியான பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தனிச் சிறப்பான, அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பிருக்கும் துணிச்சலில்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜெயலலிதா – சசிகலா கும்பலின் பிணை கோரும் வழக்கில் பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு நடந்துகொண்டுள்ளார்கள். இவை கண்டு நாட்டின் சட்ட-நீதி வல்லுநர்கள் திக்பிரமை பிடித்தவர்களைப் போல் வாயடைத்துக் கிடக்கிறார்கள். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் சிலர்  சொல்லியிருக்கிறார்கள்: “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பிணை கோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே வாதங்களை வைத்தார்கள். எதிர்த்தரப்பின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை.”
எதிர்த்தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயா-சசி தரப்பு வழக்கறிஞர்களோடு வியாபார பேரக் கலந்தாலோசனையைப் போல பேசி முடித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவித்து விட்டார்கள்.
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை நிராகரிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளைக் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை கோரிய மனுவில் முன்வைத்திருந்தது, ஜெயா-சசி கும்பல். அதனாலேயே பிணை கிடைக்கவில்லை என்று அக்கும்பல் தனது தரப்பு வழக்கறிஞர்கள் மீது சீறிக்கொண்டிருந்த நிலையில், பிணை தவிர வேறு கோரிக்கைகளை முன்வைக்க அஞ்சிக்கொண்டிருந்தது. அதனாலேயே உச்ச நீதிமன்றத்திலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அமர்த்திக்கொண்டது. அவரோ தன் தரப்பினர், “வீட்டுக் காவலில் (வீட்டுச் சிறையில்) இருக்கக் கூடவும்  தயார்; பிணை கிடைத்தால் போதும்” என்று  தாழ்பணிந்து மன்றாடினார்.
ஆனால், அவரே எதிர்பாராமல் “ஐயய்யோ! அதெல்லாம் வேண்டாம்” என்று பதறிய தலைமை நீதிபதி எச்.எல். தத்துவோ பிணை மனுவில் குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்காத கோரிக்கைகளையும் வாரிவழங்க தயாராகவிருக்கக் கண்டார். அதேசமயம், இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு கறாராக  இருப்பதைப்போலவும், குற்றவாளிகள் தரப்பு பணிவுடன் மன்றாடுவதைப் போலவும் வழமையான நீதிமன்ற நாடகங்களில் ஒன்றை அரங்கேற்றினார்கள்.
“ஏற்கெனவே, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. இனிமேலும்  சகித்துக்கொள்ள முடியாது. இனியும் தாமதிக்காமல் மேல்முறையீடு செய்துவிடவேண்டும். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்” எனக் குரலில் மட்டும் “கறார்” காட்டிவிட்டு, குற்றவாளிகள் தரப்புக் கோரியதைவிட அதிகமாகவே அவகாசம் கொடுத்தார், தலைமை நீதிபதி. அதைப் பார்த்தவர்கள் ஏதோ சலுகை காட்டிவிட்டதாக எண்ணக் கூடாது என்பதற்காகவே, திடீரென்று குரலை உயர்த்தி, மேலும் “கறார்” காட்டி, “மேல்முறையீடு செய்வதில் மேலும் ஒருநாள்கூடத் தாமதம் செய்யக் கூடாது. தாமதம் செய்தால் பிணை உத்திரவை ரத்து செய்துவிடுவோம்” என்று எச்சரிப்பதுபோல நாடகமாடினார்.
வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
நீதிமன்ற நடத்தை நெறிமுறைகளுக்கு எதிராக ஜெயாவின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
உண்மையில், சிவாஜி கணேசன் “படவா ராஸ்கல்” என்று செல்லமாகத் திட்டிக் கொஞ்சுவதை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்! அதைப்போலத் தான் இதுவும்! தண்டிக்கப்படுவோம் என்றஞ்சும் குற்றவாளிகள் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் வருவதைத் தள்ளிப்போடும், தாமதப்படுத்தும் உள்நோக்கத்தோடு வழக்கை இழுத்தடிப்பார்கள். அந்த வகையில் குற்றவாளி ஜெயா 185 வாய்தாக்கள் வாங்கி, வாய்தா ராணி என்று பெயர் வாங்கியவர். ஜெயா போன்ற கடுங்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு முடிந்தவரை சிறைத் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேல்முறையீட்டை விரைந்து முடித்து வெளியில் வர எத்தணிப்பார்கள். அத்தகைய எத்தணிப்பில் உள்ள ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக நடந்து கொண்டே, கண்டிப்பு – கறார் வேசங்கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆடிய அவசர அப்பட்டமான அநீதி ஆட்டம்  கேலிக்கூத்தாகவே அமைந்தது.
ஜெயலலிதா-சசிகலா கும்பல் சிறையிலடைக்கப்பட்ட  மறுநிமிடத்திலிருந்து அக்கும்பலின் அடிமை விசுவாசிகள் போட்டிபோட்டுக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட அராஜகம்; தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்பட்டுவிட்ட “அவப்பெயரையும் களங்கத்தையும்” மூடிமறைத்து, நீதியான – சட்டப்படியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இழிவுபடுத்தும் செயலுக்கு அரசமைப்பு முழுவதையும் கேடாகப் பயன்படுத்தியது; பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பொதுமக்களிடையே பயபீதியையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியது; இவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எல்லா பொதுநல முறையீடுகளையும் தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பதன் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு நீதித்துறையே உடந்தையாக மாறிப்போனது. இவற்றுக்காக தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், கண்டுகொள்ளாது கண்மூடிக்கொண்டது. மாறாக, தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் பிணையில் விடுவதில்தான் அவசரமும் அக்கறையும் காட்டியது.
ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக  டிராஃபிக் ராமசாமி தொடுத்த பல பொதுநல வழக்குகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாறாக,  தட்டிக் கழிப்பது, தள்ளிப்போடுவது, தகுந்த பதிலளிக்காமல் மழுப்புவது போன்ற உத்திகளைக் கடைப்பிடித்து குற்றவாளிகளைக் காப்பதிலேயே உயர் நீதிமன்றம் குறியாகச் செயல்பட்டது. இந்த வகையில் ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் வழக்கில் பெயருக்குத் தகுந்தாற் போன்று உச்சத்துக்கே போயிருக்கிறது, உச்ச நீதி மன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் இருக்கும் ஜெயலலிதா முதல்வராகவே இருக்கக்கூடாது; தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தலைமையிலான கட்சி ஆட்சி நடத்தக் கூடாது; தன் மகன் ரோஹிண்டன் நாரிமன் நீதிபதியாக இருக்கும் நிலையில், தந்தையாகிய  ஃபாலி நாரிமன் ஜெயா-சசி கும்பலின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பிணை கோரும் வழக்கில் வாதாடக்கூடாது (அலகாபாத் நீதிமன்றத்தில் உறவினர்களே நீதிபதிகளாகவும் வழக்கறிஞர்களாவும் பணியாற்றுவது தர்மம் ஆகாதென்று இதே உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது!) தகுந்த விளக்கமில்லாமல் ஜெயா-சசி கும்பலுக்கு பிணை வழங்கியது தவறு, அதை ரத்துசெய்யவேண்டும்; ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் பேரம் பேசி இருநூறு கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது, அதை விசாரிக்கவேண்டும்; இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பிணை மனுவை விசாரிக்கக் கூடாது – என்பன போன்று எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் சதித்தனமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
டிராபிக் ராமசாமி
ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசுத் தலைவரிடம் முறையீடு செய்துள்ள டிராபிக் ராமசாமி
நீதிபதி எச்.எல்.தத்து முகத்துக்கு நேராகவே ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரியபோதும் “அந்த ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தானே, கோர்ட் அதைப் பார்த்துக்கொள்ளும்” என அலட்சியமாகவும், திமிராகவும் கூறித் தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால், நீதிபதி எச்.எல்.தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு வெறும் ஆதாரமற்ற பழியோ, அவதூறோ, வதந்தியோ அல்ல; அடிப்படை முகாந்திரம் உள்ள உண்மைதான்  என்பதை அவரது அன்றைய நடவடிக்கைகளே காட்டிக்கொடுத்து விட்டன. ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் மனு மட்டுதான் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வந்திருக்கிறது. பிணை வழங்கியதோடு அதன் பணி முடிந்துவிட்டது. வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அங்கு அதன் அதிகாரத்தின்படியும் அணுகுமுறை – முன்னுரிமைப்படியும்தான் மேற்கொண்டு நடத்தப்பட வேண்டும்.  தண்டனை உறுதிசெய்யப்படுமானால், ஜெயா-சசி கும்பல் மேல்முறையீட்டுக்குத் தன்னிடம் வந்தால்மட்டும், அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட முடியும். ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முறைப்படியும் வரிசைக் கிரமப்படியும் அவ்வழக்குகள் நடந்தால், ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் வருவதற்குள் இந்த எச்.எல்.தத்து ஓய்வுபெற்றுவிடுவார்.
இதைக் கணக்கிட்டுதான் தான் ஓய்வுபெறும் அடுத்த ஆண்டுக்குள் இந்த வழக்கின் மேல்முறையீட்டை தானே முடித்துவைக்க வேண்டும் என்று எச்.எல்.தத்து துடிப்பதாகத் தெரிகிறது. அதனால், இந்த அமர்வு பிணை கோரும் வழக்கை முடிக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது. வழக்கை நடத்த வேண்டிய கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் வசதி-வாய்ப்புகளைக் கலந்தாலோசிக்காமலேயே, தன்னிச்சையாகக் கால அட்டவணையை குற்றவாளிகளுக்கு சாதகமாகத் தானே அவசர அவசரமாக வரையறுக்கிறது. எதிர்த் தரப்புக்கு ஒரு மாதம், அரசுத் தரப்புக்கு ஒரு மாதம், நீதிபதிக்கு ஒரு மாதம் -ஆக மூன்று மாதங்கள், அதிகம் போனால் மேலும் ஒரு 15 நாட்கள் என்று மனக்கணக்குப்போட்டு, ஏப்ரல் 18-க்குள், விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் வழக்கை நடத்தி, மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் முடித்துவிட வேண்டும் என்று தனது வரம்பு மீறி எச்.எல்.தத்து உத்திரவு போட்டுள்ளார்.
இந்த நாட்டு சட்ட-நீதி வரலாறு இதுவரை காணாததொரு  தீர்ப்பு!  இதே வழக்கின் 100 பக்க ஆவணத்தைப் படிப்பதற்கு ஜெயா-சசி கும்பல், அது வழக்கை இழுத்தடித்தபோது மாதக் கணக்கில் அவகாசம் கேட்டுப் பெற்றது. இப்போது அக்கும்பலின் 2.5 இலட்சம் பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவை ஒரு மாதத்திற்குள் படித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்புச் சொல்ல வேண்டுமாம்! இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! ஆனால், அப்போதிருந்து வழக்கைப் பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல; இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து, வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாகக் இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! என்ன ஒரு நீதி!
ஜெயாவின் காலடியில் நீதித்துறை
ஜெ.சசி கும்பலுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! ஆனால், அப்போதிருந்து வழக்கை பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல; இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாக இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! என்ன ஒரு நீதி!
2009-ம் ஆண்டு அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடங்கி கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணா ஹசாரே, கேஜரிவால் முதற்கொண்டு மோடி வரை நாட்டின் முதன்மையான ஊழல் எதிர்ப்புப் போராளிகளாக அவதாரம் எடுத்து ஆட்டம் போட்டார்கள். இதிலும் சந்தர்ப்பவாதமாக நடித்து அவர்கள் நாடகமாடினார்கள்தான். என்றாலும், மக்களை ஏய்ப்பதற்காகவும் சவடாலுக்காவும் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக அதை முன்நிறுத்தி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்புச் சூழலை உருவாக்கி மக்களிடையே பிரமையை விதைத்திருக்கிறார்கள். அந்த நிலைமையிலும் உயர், உச்ச நீதிமன்றங்களும் அவற்றி லுள்ள பார்ப்பன -பிழைப்புவாத நீதிபதிகளும், ஜெயா-சசி போன்ற கிரிமினல் குற்றக் கும்பல்களும் அத்தகைய பிரமைகளைத் தகர்ப்பதையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான  வழக்குகள்  தீர்க்கப்படாமல்இருக்கும்போது, ஜெயா-சசி  கும்பலின் மேல் முறையீட்டு வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் இத்தனை வேகம் காட்டுவது ஏன்?
நீதிபதி எச்.எல்.தத்துவே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். “இது விதிவிலக்கான வழக்கு; பிரத்யேகமான வழக்கு என்பதால் இந்தக் கால வரையறைக்குள் முடித்துத் தரவேண்டுமென்று” உத்திரவு போட்டிருக்கிறார். உண்மைதான்! பிரம்மஸ்ரீ  கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால்  விதிவிலக்கானது,  பிரத்யேகமானதுதான்!
- ஆர்.கே.  'வினவு.com

கருத்துகள் இல்லை: