சனி, 29 நவம்பர், 2014

சாப்ட்வேர் எஞ்சினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3 வடநாட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம், ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் உமா மகேஸ்வரி (22). சென்னை, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, கேளம்பாக்கம் சிறுசேரி தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி, இரவு பணி முடிந்து உமா மகேஸ்வரி வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை பாலசுப்பிரமணியம், கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வந்தனர்.


இதற்கிடையே, பிப்ரவரி 22ம் தேதி சிறுசேரி தொழிற்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள முட்புதரில் உமா மகேஸ்வரி அழுகிய நிலை யில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், அதே பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் உமா மகேஸ்வரியின் ஏடிஎம் கார்டை, மர்ம நபர்கள் பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வடமாநிலத்தை சேர்ந்த ராம் மண்டல் (25), உத்தம் மண்டல் (24), உஜ்ஜல் மண்டல் (25) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், உமா மகேஸ்வரியை கொலை செய்து, அவரது நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் 3 பேரும், நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர் தமீம் பாட்ஷா, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆறுமுகம் ஆஜரானார்கள்.

தீர்ப்பு கூறும் முன், வழக்கறிஞர்களின் கருத்துக்களை கூறலாம் என நீதிபதி ஆனந்தி கூறினார். அப்போது,  இந்த சம்பவம் திடீரென நடந்தது. உள்நோக்கம் எதுவும் இல்லை. குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் தமீம்பாட்ஷா கூறினார்.அதற்கு, ஆட்சேபம் தெரிவித்த அரசு வழக்கறிஞர் ஆறுமுகம், விவாதம் செய்ய வேண்டிய நேரத்தில் பேசாமல், தீர்ப்பு வழங்கும் நேரத்தில் விவாதம் செய் வது சரியானதல்ல என்றார். பின்னர், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்தி, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும், சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் உமா மகேஸ்வரியை கொலை செய்தது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு 7 ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். பின்னர், அவர்களை, போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம்

சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தீர்ப்பு நேற்று வெளியாவதை அறிந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் நீதிமன்றத்தில் திரண்டனர். அவர்கள் கூறுகையில், இந்த தண்டனை குறைவு. அதிகபட்ச தண்டனை கொடுத்து இருந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து இருக்கும். அவரது பெற்றோரும் நிம்மதி அடைந்து இருப்பார்கள் என்றனர்.

கதறி அழுத குற்றவாளிகள்:

வழக்கில் விசாரணை முடிந்து 12 மணியளவில் நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளிகள் 3 பேரும் கதறி அழுதனர். ‘‘நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களுக்கு இந்த தண்டனை வழங்க கூடாது. நாங்கள் பிழைப்புக்காக வெளி மாநிலத்தில் இருந்து வந்தோம். எங்கள் குடும்பம் ஏழ்மையானது. இந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும்‘‘ என கூச்சலிட்டனர். தீர்ப்பின் நகலை அவர்களிடம் கொடுத்து, பதிவேட்டில் அவர்களை கையெழுத்து போடும்படி, நீதிமன்ற ஊழியர்கள் கூறினர். அதற்கு, அவர்கள் 3 பேரும் மறுத்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: