புதன், 26 நவம்பர், 2014

உலக மயமாக்கலை வரவேற்கிறோம்.எனவே உலகம் சம்ஸ்கிருத மயமாக்கலை வரவேற்க வேண்டும்?

முதலீட்டாளர்கள் மாநாடு: கலைஞர் கேள்வி
திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
கேள்வி :- கட்டாய சமஸ்கிருதம், இந்துக்கள் நாடு என்ற பேச்சுகள் நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டனவே?
கலைஞர் :- உலக இந்து மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் “மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நடவடிக்கை சரியானதுதான். அந்நிய மொழி (ஆங்கிலம்) ஒன்று போதும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த நாட்டையே நீக்குவதற்கு ஒப்பாகும்” என்றும்; “800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இந்துக்களின் கைகளில் வந்துள்ளது” என்றும் பேசியிருக்கிறார். அதே மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்த நாடு இந்துக்களின் நாடு. இந்தியாவில் வாழ்பவர்கள் எந்த மதத்தவரானாலும் அவர்கள் இந்துக்களே” என்று பேசியிருக்கிறார்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“இந்தியாவில் இந்திய மொழிகளின் முக்கியத் துவத்தைக் குறைத்து, மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத் திற்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்துவிட்டதால் நாம் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்றுதான்” என்று குறிப்பிட்டிருக் கிறார். மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், “சமஸ்கிருதம்தான் உண்மையில் தேசிய மொழியாகும் என்பதால், இந்தியாவில் அனைவருக்கு மான இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக, சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவேண்டும். சமஸ்கிருதம் பிரபலமடையும் வரை - சாதாரண மக்களின் பேச்சு மொழியாக வரும் வரை, நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். இதுவும் குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்ததே ஆகும்” என்று பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் இயக்கத்தின் “அஜெண்டா” எனச் சொல்லப்படுவதே, இந்து ராஷ்டிரம்,
சமஸ்கிருதம், சரஸ்வதி உள்ளிட்டவை தான். அவற்றை நினைவுபடுத்துவதாகவே அசோக் சிங்கால் மற்றும் மோகன் பகவத் ஆகியோரின் பேச்சுகள் அமைந்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இப்போதைய மத்திய அரசு அனைவருக்குமான அரசு (inஉடரளiஎந ழுடிஎநசnஅநவே) என்று கூறிவரும் நிலையில்; பா.ஜ.க.வின் மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அமைப்புகள் இப்படிப் பேசியிருப்பது, மதச்சார்பின்மை (ளுநஉரடயசளைஅ)யில் நம்பிக்கை கொண்டுள்ளோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. 

மேலும், ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படி மோடி அவர்களைக் கேட்டுக்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய இளைஞர்கள் மற்ற மொழிகளைக் கற்க வேண்டுமென்பதில் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும், இந்திய நிலைமை களுக்கு ஏற்ப இந்தப் பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறார். ஜெர்மன் மொழி தொடர்பாகப் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஜெர்மனி மொழியை நீக்கி, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்தது முறையான நடவடிக்கைதான் என்று தெரிவித்திருப்பதும்; மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி சமஸ்கிருதம்தான் உண்மையில் தேசிய மொழி என்று பேசியிருப்பதும்; முரண்பாடாக உள்ளது.

24-11-2014 அன்று “தி இந்து” தமிழ் நாளேடு, “சமஸ்கிருதமா, சமஸ்கிருத மயமாக்கலா?” என்ற
தலைப்பிட்டு வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “உலகமயமாக்கல் சூழலில் அறிவியல், தொழில் நுட்பங்கள் போன்றவை மொழியைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்திகளாகியிருக்கின்றன. இந்தத் துறைகளில் உலகமெல்லாம் ஆங்கிலத்தின் ஏகாதிபத் தியம் நிலவும் சூழலில், இந்திய மொழிகளை அந்தச் சவாலை எதிர்கொள்ளச் செய்வதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ஒரு பக்கம் உலகமயமாக் கலை ஆரத்தழுவிக் கொண்டே இன்னொரு பக்கம் வேதகாலத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறது இந்த விசித்திரமான அரசு” என்று தெரிவித்திருக்கும் கருத்து அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. இத்தகைய முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து குன்றெனக் குவியும் முன்னர், அவ்வப் போது தெளிவுபடுத்தி, முரண்பாடுகளிலிருந்து விடுபடுவது பிரதமர் மோடி அவர்களுக்கு நல்லது.

கேள்வி :- சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அரசின்
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கேற்பப் பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மாற்றங்களின் காரணமாக ஏற்படும் அதிக விலைச் சுமையை மக்களின்மீது ஏற்றாமல் இருக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் சந்தை விலை சென்னை மாநகரைப் பொறுத்தவரை 863 ரூபாயாக உள்ளது.

மானியமாக ஒரு சிலிண்ட ருக்கு மத்திய அரசு 459 ரூபாய் வழங்குகிறது. பொதுமக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் 404 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இப்படி மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்க, வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். மானியத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்போது மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வசதி படைத்தவர்கள், வசதி குறைந்தவர்கள், வசதியே இல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்க்கும்போது, அவற்றிற்கு நியாயமான அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அப்படி நிர்ணயம் செய்யும் போது, ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தினர் எந்த வகையிலும் பாதிக்கப்படாத அளவுக்கு அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்பதை அருண் ஜெட்லி அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

கேள்வி :- காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநில அரசு புதிதாக இரண்டு அணைகள் கட்டப்
போவதாக செய்யப்பட்ட அறிவிப்பும், அந்தப் பிரச்சினையும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறதே?

கலைஞர் :- காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணை
களைக் கட்டப் போவதாகவும், இதன் தொடர்ச்சியாக கபினி, ஹேரங்கி, கிருஷ்ண ராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளுக்குக் கீழே நான்கு தடுப்பு அணைகள் கட்டி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் போவதாகவும், காவிரி கர்நாடக மாநிலத்திற்குள்ளே ஓடும்போது அதைப் பயன்படுத் திடக் கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளதால் தமிழக அரசோ, தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது என்றும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர் இப்படி அறிவித்ததையொட்டி
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், “கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன் றத்தில் முறையீடு செய்வது அந்த மாநிலத்திற்கு எந்தப் பயனும் ஏற்படுத்தாது. தமிழக அரசு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் மேகதாது அருகே அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் ஆதங்கப்பட வேண்டாம். இரு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை சட்டத்தால் தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அமைச்சரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான அனந்தகுமார் 22-11-2014 அன்று
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு புதிய அணைகள் கட்ட எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மேகதாது திட்டத்தை எதிர்த்து, தமிழக எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக எம்.பி.க்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மேகதாது திட்டம் பொதுமக்களின் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டம் என்பதால் மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்கும்” என்று நம்பிக்கையோடும், மத்திய அமைச்சர் என்ற முறையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்பதை மறந்தும், தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சிக் குழுவினருடன் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி அவர்களையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்து மேகதாது திட்டம் குறித்துப் பேச இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

கர்நாடக அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளும் -
பொதுமக்களும் தங்களுடைய கொந்தளிப்பை உணர்த்திடும் வகையில், 22-11-2014 அன்று முழு அடைப்புப் போராட்டத்தையும், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

போராட்டப் பாதை நீண்டுகொண்டே செல்வதாகச் செய்திகள் வருகின்றன. மேகதாது பிரச்சினை குறித்து, பிரதமருக்கு நமது முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கம் போலக் கடிதம் எழுதியிருக்கிறார்; உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இவற்றைத் தவிர இந்தப் பிரச்சினையில் வேறு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலோ, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திடுக” என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், “நீ யார் சொல்வதற்கு? பிறருடைய யோசனையை நான் ஏன் கேட்க வேண்டும்; எல்லாம் எனக்குத் தெரியும்” என்று எதேச்சாதிகாரத் தொனியில் பன்னீர்செல்வம் பதில் கூறுகிறார். பன்னீர்செல்வத்தின் இப்படிப் பதில் அளிக்கும் அணுகுமுறை எங்கு கொண்டு போய்விடுமோ என்று டெல்டா மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.

கேள்வி :- உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை 2015 மே மாதத்தில் நடத்தப் போவதாக
முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இதைப் பற்றி நான் முன்பே தெரிவித்திருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 2014 அக்டோபர் மாதத்திலேயே சென்னையில் நடைபெற்றிருக்க வேண்டும். செல்வி ஜெயலலிதாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கிலே தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துவிட நேரிட்டதாலும், புதிய முதலமைச்சராகப் பன்னீர் செல்வம் பொறுப்பேற்றதாலும், பொறுப்பேற்ற புதிதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநாட்டை குறிப்பிட்ட படி தன்னிச்சையாக நடத்திடத் தடுமாற்றம் ஏற்பட்டது போலும்! மாநாடு தள்ளிப் போய்விட்டது. 

சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு அடுத்து ஓராண்டே உள்ள நிலையில், 2015 மே மாதத்தில் மாநாடு நடத்தி என்ன பயன் ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை.

தமிழகத் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்திடத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து அமைச்சர் களும், குழுவினரும் வந்து கொண்டே இருக்கின் றார்கள். 2014 ஜனவரி மாதத்தில் கர்நாடக மாநில முதலமைச்சர், கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க வருமாறு கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலே அழைப்பு விடுத்தார். 2014 ஆகஸ்ட் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர், அதே கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத் திலிருந்து முதலீடு செய்தால், “சலுகைகளாக நிலம் மற்றும் மின்சாரம் கொடுப்போம்” என்று கூறி அழைப்பு விடுத்தார். ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் தமிழகத்திற்கு வந்து, அவர்கள் மாநிலத்திலே தொழில்களைத் தொடங்க முன்வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். மேற்கு வங்க முதலமைச்சர் சார்பில் பிரதிநிதிகள் குழுவினர் சென்னைக்கு வந்து, தங்கள் மாநிலத்தில் தொழில் வளம் எப்படியெல்லாம் பெருகியுள்ளது என்று விளக்கி, அங்கே தொழில் தொடங்க வருமாறு தமிழக முதலீட்டாளர்களைக் கேட்டுக் கொண் டார்கள். குஜராத் மாநில அமைச்சர் தலைமையில் குழு ஒன்று சென்னைக்கு வந்து 2015-ல் அங்கே நடைபெற உள்ள தொழில் மாநாட்டுக்கு வரவேண்டு மென்றும், தமிழக முதலீட்டாளர்கள் அங்கே வந்து தொழில் தொடங்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்ததோடு, குஜராத் அரசு தொழில்களைத் தொடங்க என்னென்ன சலுகைகளை வழங்குகிறது என்று மிகப் பெரிய அளவில் இங்கே விளம்பரமும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடனும், அதைப்போல தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் தமிழகத்தைக் குறிவைத்து, தமிழக முதலீட்டாளர் களைக் கவர்ந்து இழுக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்ற நிலையிலேதான், “குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டி வைத்ததைப் போல,” இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் முதலீட்டாளர்களுக்குக் குறிவைத்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறார்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: