புதன், 26 நவம்பர், 2014

நிலக்கரி ! மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? சிபிஐக்கு கோர்ட் கேள்வி

நிலக்கரி ஊழல் தொடர்பாக முன்னாள் நிலக்கரித் துறை மந்திரி மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? என்று சி.பி.ஐ.யிடம் சிறப்பு கோர்ட்டு சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளது.2005–ம் ஆண்டு தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து குமாரமங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது.
அப்போது இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. 

ஆனால், சி.பி.ஐ.யின் இந்த கோரிக்கைக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி பாரத் பராசர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் அவர் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நவம்பர் 10ம் தேதி சி.பி.ஐ. தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், திடீர் திருப்பமாக, வழக்கு தொடரப்பட்ட தனியார் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ. அறிந்து இருப்பதாகவும் எனவே இதனை கவனத்தில் கொள்ளும்படியும் கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பான மேலும், சில ஆவணங்களையும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. 

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ.யின் இந்த அறிக்கையை கோர்ட்டு கவனத்தில் கொள்ள முடிவு செய்யும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ. தயாராக வைத்திருக்கிறதா? என்று நீதிபதி பாரத் பராசர் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு சிறப்பு வக்கீல் சீமா, இது குறித்து இன்னும் சில விசாரணை தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற 25–ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

இன்றைய விசாரணையின் போது, சிறப்பு கோர்ட்டு நீதிபதி பாரத் பராசர், “இவ்விவகாரத்தில் நீங்கள்(சி.பி.ஐ.), நிலக்கரி துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவசியம் என்று நினைக்கவில்லையா? இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என நீங்கள் ஏன் உணரவில்லை? இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட அவருடைய அறிக்கை தேவை என்று நீங்கள் கருதவில்லயா?” என்று சி.பி.ஐ.க்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார் nakkheeran,in 

கருத்துகள் இல்லை: