வியாழன், 27 நவம்பர், 2014

நீதிபதி குன்ஹா பணியிடம் மாற்றம்! தமிழக முதல்வரை மக்களின் முதல்வர் ஆக்கியதற்கு இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1991-96-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மைக்கேல் டி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.  இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கியதற்காக அதிமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிபதி குன்ஹாவை பல்வேறு தரப்பினரும் நேர்மையான தீர்ப்பை வழங்கியவர் என்றும் பாராட்டினர். இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் குன்ஹா தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற (ஊழல் தடுப்பு கண்காணிப்பு ) பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன் இப்பதவியில்தான் குன்ஹா இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பை பெங்களூரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜ் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: