வியாழன், 27 நவம்பர், 2014

ரஜினி (பட வசூலுக்காக) அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்! நல்லகண்ணுக்கு எழாத குரல் ரஜினிக்கு ஏன்?

ஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ரஜினி பட ரிலீஸை ஒட்டி இப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்.
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, வேறு இரண்டு கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

* ரஜினி 'அரசியல்’ செய்யவேயில்லையா?

* ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு வயது கிட்டத்தட்ட 20 என்பதே, ரஜினி ‘அரசியல்’ செய்யவேயில்லையா என்ற கேள்விக்கான பதிலாக உள்ளது. 20 ஆண்டுகளாக, இந்தக் கேள்விக்குப் பதிலே சொல்லாமல், அல்லது குழப்பமான பதில்களைச் சொல்லியே, தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அதிலும் ரஜினியின் புதுப்பட ரிலீஸ்களை ஒட்டி இந்தக் கேள்வி எழுவது ரஜினி செய்யும் ‘அரசியல்’தான். மற்ற எந்த அரசியல்வாதிகளையும்விட இந்த விஷயத்தில் ரஜினி திறமையான அரசியல்வாதிதான்.

சரி... ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய அவசியம் என்ன? ரஜினி வந்துதான் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? இதற்கு இரண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன.

* எல்லாக் கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். கறைபடிந்துபோன அரசியல் சூழலில் ரஜினியால்தான் நல்லாட்சியைத் தரமுடியும்.

* இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் சிலவற்றைப் பட்டியலிடுவோம். ஊழல்மயமாகிப் போன அரசியல், குடும்ப அரசியல், 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று அரசியல் சட்டம் சொன்னாலும் நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னமும் தீண்டாமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் கௌரவக் கொலை செய்யப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சிறு வணிகங்கள் அழிகின்றன. இயற்கை வளங்கள் பெரும் பணக்காரர்களால், பெருமுதலாளிகளால், பெரு நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றன. மின்வெட்டு போன்ற பிரச்னைகளின் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகள் இருக்கின்றன, அரசியல் ரவுடியியல் ஆகி இருக்கிறது.
எந்தப் பாகுபாடுமின்றி எல்லாக் கட்சிகளிலும் கிரிமினல்கள் நிரம்பி வழிகிறார்கள். பெண்கள் என்னதான் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறியிருந்தாலும் சுயமாக முடிவெடுப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒருபுறம் பண்பாட்டுப் பெருமை பேசிக்கொண்டே சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சமூகநீதி பூமியான தமிழகத்தில் இன்னமும் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் முடியவில்லை. இன்னொருபுறம் இட ஒதுக்கீட்டுக்கே வாய்ப்பற்ற தனியார்மயம், தமிழகத்தின் தீர்க்கமுடியாத பிரச்னையான நதிநீர்ப் பிரச்னை, தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஈழப் பிரச்னை, கல்வியும் மருத்துவமும் வியாபாரமாகிப் போன அவலம்... இப்படிப் பல பிரச்னைகளைப் பட்டியலிடலாம்.
இதில் எல்லாம் ரஜினிக்கு என்று ஏதாவது கருத்து இருக்கிறதா? இருந்தாலும் அவற்றை அவர் பொதுவெளியில் பதிவு செய்திருக்கிறாரா? எந்தப் பிரச்னையை ரஜினியால் தீர்க்கமுடியும்? அவரால்தான் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்பதற்கான ஆதாரம் என்ன? மற்ற அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களைவிட தனித்துவமான செயல்திட்டம் எதுவும் அவரிடம் இருக்கிறதா? எல்லாவற்றுக்கும் ‘இல்லை’ என்பதுதான் பதில். ஒரு தனிமனிதனுக்கு சமூகத்தின் அத்தனை பிரச்னைகள் குறித்தும் கருத்து இருக்க வேண்டுமென்றோ அதைப் பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால், முதலில் அவருக்கு இங்கே இருக்கிற பிரச்னைகள் குறித்த புரிதலும் பார்வையும் அவசியம்.

அப்படியானால் ரஜினி பொதுப்பிரச்னைகள் பற்றிப் பேசியதே இல்லையா? உண்டு. மணிரத்னம் வீட்டில் குண்டு வீசப்பட்டபோது, ‘பாட்ஷா’ பட விழாவில் “தமிழகத்தில் வன்முறைக் கலாசாரம் அதிகரித்துவிட்டது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அன்றைய ஜெயலலிதா அரசாங்கம் ரஜினிகாந்துக்குத் தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுத்தன. அதைத் தொடர்ந்துவந்த தேர்தலின்போது, தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த ரஜினி, “இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்றார். பிறகு அவரே ஒரு தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து ‘வாய்ஸ்’ கொடுத்தார். ஆனால் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தோல்வியடைந்தது. 'கருணாநிதிக்காக நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சினிமாக்காரர்களை மிரட்டி அழைத்துவருகிறார்கள்' என்று அஜித் மேடையில் சொன்னார். கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினி, எழுந்து நின்று கைதட்டி, அதை ஆமோதித்தார்.

காவிரிப் பிரச்னையை ஒட்டி நடந்த நடிகர்கள் உண்ணாவிரதத்தில் 'தண்ணி தராதவங்களை ஓட ஓட விரட்டணும்' என்று ஆவேசக்குரல் கொடுத்தார். கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்பு கேட்டார். ஆகமொத்தம், இருபதாண்டு காலத்தில் ரஜினியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடுகள்  இவைதான்.  இந்தப் பிரச்னைகளையும்  கவனித்துப் பார்த்தால், ஏதோ ஒருவகையில் அவை சினிமா தொடர்புடைய பிரச்னையாக இருக்கும். ஒரு துறை சார்ந்தவர், தன் துறை சார்ந்தவரின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் நாளை ரஜினி அரசியலில் குதித்து, முதல்வராகவும் ஆனால் அவர் சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வர் இல்லை. மக்களுக்கான முதல்வர். அப்படியானால் மக்களின் பிரச்னைகள் குறித்து அவர் பேசியாக வேண்டும். ஆனால் இதுவரை ரஜினி அப்படிப் பேசியதில்லை என்பதுதான் நிஜம்.

மேலும் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. மக்களுக்காக உழைப்பவர்கள் எல்லாம் மக்களால் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்படுவதும் இல்லை. தமிழர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தந்தை பெரியார், தேர்தல் அரசியலுக்கு வரவேயில்லை. தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் வாய்ப்புகளையும் புறக்கணித்தார். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் குறித்த பரப்புரைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த நம்மாழ்வார் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பணிகள் நீண்டகால நோக்குடையவை.

சுதந்திரப் போராட்டம், சாதியப் பிரச்னைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி சமகாலப் பிரச்னையான மணல் கொள்ளை எதிர்ப்பு வரை தொடர்ச்சியாகப் போராடிவருபவர் நல்லகண்ணு. தேர்தல் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் எந்த மக்களுக்காகப் போராடுகிறாரோ அந்த மக்களாலேயே தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்படுகிறார் நல்லகண்ணு இந்த மக்களுக்காகச் செய்யாத எந்த ஒன்றை, ரஜினி அரசியலுக்கு வந்து செய்யப்போகிறார்? ‘நல்லகண்ணு வெற்றிபெற வேண்டும்’ என்று குரல்கள் எழாதபோது, ‘ரஜினி முதல்வராக வேண்டும்’ என்று குரல்கள் எழுவதன் அவசியம் என்ன?

இரண்டாவதாக, 'இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இந்த ‘ஏதாவது’ என்றால் என்ன? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், அவர் ரசிகர்கள் கவுன்சிலர்கள் தொடங்கி அமைச்சர்கள் பதவிகள் வரை அமர வேண்டும், அதிகாரிகளின் மரியாதையுடன் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும்.  இதுதானே அந்த ‘ஏதாவது’. யாராவது ‘மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வருவேன்’ என்று சொன்னால் அதை மக்களே நம்பமாட்டார்கள். ஆக ரசிகர்கள் பதவிகளில் அமரவும், பணம் சம்பாதிக்கவும்தான் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அது ஓர் ஊழல்வாதம்தானே. ‘இவ்வளவுநாள் மற்றவர்கள் கொள்ளையடித்தார்கள். இனி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்பது நீதியானதுதானா?

சரி...இப்போது ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தாலும் அவரால் வெற்றிபெற முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம்.

ரஜினிக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரஜினியின் தீவிர ரசிகர்களில் பெரும்பாலோர் நாற்பதைக் கடந்தவர்கள்; ஐம்பதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள். ரஜினிக்கு வயதாகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்களுக்கும் வயதாகியிருக்கிறது என்பது உண்மை. இன்றைய அரசியல் சூழல், புதிய வாக்காளர்களாக உருவாகியிருக்கும் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு - இவற்றையெல்லாம் ரஜினியாலோ அவரது ரசிகர்களாலோ எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ரஜினியைப் போல பலகாலம் இழுத்தடிக்காமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். தொடக்க காலத்தில் மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்க்கப்பட்ட விஜயகாந்த், இன்று கேலிக்குரியவராகப் பார்க்கப்படுகிறார். யூடியூபில் ‘விஜயகாந்த்’ என்று டைப் செய்தால், நூற்றுக்கணக்கான காமெடி வீடியோக்கள் கொட்டுகின்றன. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாரே தவிர, மேலே சொன்ன தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் குறித்து அவருக்குக் கருத்தோ தீர்வோ எதுவும் கிடையாது. விஜயகாந்தைவிட இந்த விஷயத்தில் ரஜினி சிறந்தவர் என்று சொல்வதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவை எடுத்துக்கொள்வோம். இங்கே ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், அங்கே சிரஞ்சீவி மெகா ஸ்டார். ஆனால் அவரால் அரசியலில் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை.  இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாதா என்ன? விஜயகாந்தையும் சிரஞ்சீவியையும் பார்த்தபிறகும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் அவர் ரசிகர்கள் நம்பினால், மற்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள், ரஜினி தன் ரசிகர்களையே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம்.

மேலும் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் எல்லாம் மிகச்சிறந்த நடிகனாக ரஜினி தன்னை நிரூபித்திருந்தாலும் வெற்றிகரமான ரஜினி என்பது ‘பாட்ஷா’ ரஜினியும் ‘படையப்பா’ ரஜினியும்தான். வணிகச்சூழலுக்கு ஏற்றவாறு தன் பிம்பத்தை நிறுவிக்கொண்டவர் ரஜினி. அவ்வப்போது சில ரிஸ்க்குகளையும் அவர் எடுத்திருக்கிறார்தான். அவரின் நூறாவது படமான ‘ராகவேந்திரா’வில் வழக்கமான ஆக்‌ஷன் ரஜினிக்குப் பதிலாக அடக்கமான பக்தி ரஜினியை முன்னிறுத்தினார். குறை சொல்ல முடியாத நடிப்பு என்றாலும் படம் ஓடவில்லை. சரியாகவோ அசட்டுத்தனமாகவோ, தான் ஆன்மிகம் என்று நம்பும் ஒன்றை ‘பாபா’ படமாக எடுத்தார். அதுவும் தோல்வி. 'குசேலன்’ படத்தில் சுந்தர்ராஜனை வைத்து காரசாரமான கேள்விகளைக் கேட்கவைத்தார். அதற்குச் சொதப்பலான பதிலும் அளித்தார். ஆனால் மோசமான பட உருவாக்கத்தால் ‘குசேலன்’ படுதோல்வி. இப்படி சினிமாவில் ரஜினி எடுத்த ரிஸ்க்குகள் எல்லாமே தோல்விகளில்தான் முடிந்தன.

இதைத் தவிர எப்போதும் சினிமாவில் ரஜினி ரிஸ்க் எடுக்க விரும்பியதில்லை. சினிமாவிலேயே ரிஸ்க் எடுக்காத, எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத ரஜினி, அரசியல் என்ற மாபெரும் ரிஸ்க்கை எப்படி எடுப்பார்?

தமிழர்கள் சார்பாக ரஜினியிடம் வைப்பதற்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் இருக்கிறது. ‘ஒன்று அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன் என்று அறிவியுங்கள் அல்லது அப்படியான எண்ணமே இல்லை என்று தெரிவியுங்கள். பன்ச் டயலாக்குகளைப் படத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்’. சுருக்கமாகச் சொன்னால் ரஜினி அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்!’  vikatan.com

கருத்துகள் இல்லை: