ஈராக்கில், கடந்த ஜூன் மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம்
சிக்கிய, இந்திய தொழிலாளர்கள், 39 பேர், பயங்கரவாதிகளால் படுகொலை
செய்யப்பட்டதாக, உயிர் தப்பிய வங்கதேச கட்டடத் தொழிலாளர்கள் பேட்டி
அளித்துள்ளனர். ஆனால், அந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
சுவராஜ் உறுதி செய்யவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.வங்கதேச நிருபரிடம், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாபி இஸ்லாம் மற்றும் ஹசன் கூறியதாவது:
ஈராக்கின்
பல நகரங்களை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜூன் மாதம் பிடிக்கத்
துவங்கியதும், மொசூல் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, இந்தியா மற்றும்
வங்கதேசத்தைச் சேர்ந்த, 91 பேர், உயிரை காப்பாற்றிக் கொள்ள, பாக்தாத்
சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில், எங்கள் வாகனங்களை வழிமறித்த
பயங்கரவாதிகள், நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். அது
போல, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். வங்க தேசத்து
தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; ஹர்ஜீத் என்ற ஒரு இந்து
மட்டும், எங்கள் குழுவில் இருந்தார். வங்கதேசத்து முஸ்லிம்களை தனியாகவும், இந்தியாவைச் சேர்ந்த, 40 பேரை தனியாகவும் பிரித்தனர் பயங்கரவாதிகள். அவர்களுடன், ஹர்ஜீத்தையும் சேர்த்து, அவர்கள் அனைவரையும் தனியாக அழைத்துச் சென்றனர். இந்திய தொழிலாளர்கள், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள், தங்களை, பயங்கரவாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நினைத்திருந்தனர். மறுநாள், அல் - ஜாமியா என்ற இடத்திற்கு இந்தியர்கள், 39 பேரும், வங்கதேசத்து ஹர்ஜீத்தும் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். வெட்டவெளியில் நிறுத்தி, 39 பேரையும் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில், ஹர்ஜீத்தை சில குண்டுகள் உரசியதால், அவர் உயிர் பிழைத்தார்; எனினும், இறந்தது போல, மூச்சை பிடித்தபடி கிடந்தார். ஒவ்வொரு பிணத்தையும், காலால் எட்டி உதைத்து, உயிர் இருக்கிறதா என, பயங்கரவாதிகள் சோதனை செய்த போது, ஹர்ஜீத்தையும் உதைத்துள்ளனர். வலியை பொறுத்துக் கொண்டு, இறந்தது போல கிடந்தார். சில நிமிடங்களில் பயங்கரவாதிகள் அங்கிருந்து சென்று விட, பிணக் குவியலில் இருந்து எழுந்த ஹர்ஜீத், உயிர் தப்பி, எப்படியோ, எர்பில் நகரைச் சென்றடைந்தார். அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த எங்களிடம் சொல்லி அழுதார். இவ்வாறு, ஷாபி இஸ்லாம், ஹசன் ஆகிய இருவரும், வங்கதேச நிருபரிடம் கூறியுள்ளனர். இதன் மூலம், 39 இந்தியர்களும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 40 இந்தியரில் ஒருவர், அவர்கள் பிடியில் தப்பியது குறித்து, முன்னர் செய்திகள் வந்தன.
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறும் போது, ''ஈராக்கில், இந்திய தொழிலாளர்கள், 39 பேரும், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணமாக உள்ளன. இப்போது, வங்கதேச நிருபர் கூறும் தகவலை ஊர்ஜிதப்படுத்த ஆதாரங்கள் இல்லை. இந்திய தொழிலாளர்கள், 39 பேரும் பத்திரமாக மீட்கப்படுவர் என நம்புகிறோம்,'' என்றார்.
நடந்தது இது தான்:
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய பிரதேசமாக அறிவித்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதியை சந்திக்க, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர், பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கடந்த வாரம் ஈராக் சென்றுள்ளார். அவருடன், சில பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். அந்த பத்திரிகையாளர்களில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர், ஜக்விந்தர். அவர், ஈராக்கின் குர்திஸ்தான் தன்னாட்சி பகுதியின் தலைநகர் எர்பில் நகரில், வங்கதேசத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், ஷாபி இஸ்லாம் மற்றும் ஹசன் என்ற இருவரை சந்தித்தார். அவர்களுடன் பேசும் போது தான், இந்திய தொழிலாளர்கள், 39 பேரும், ஜூன் மாதமே, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக