ஞாயிறு, 23 நவம்பர், 2014

காவிரி : ரஜினி அரசியலுக்கு வந்தே விட்டார்! பாரதிராஜாவின் காவிரி போராட்டத்தை என்கவுண்டர் செய்த போதே வந்துட்டார்!

தஞ்சை: காவிரியில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில்  முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஏராளமான இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது.  மறியலில் ஈடுபட்ட வைகோ உள்பட பல ஆயிரம்பேரை போலீசார் கைது செய்தனர்.காவிரி  நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். ஆனால் கர்நாடகா அதன்படி தண்ணீர் தருவதில்லை. அங்குள்ள அணைகள் நிரம்பிய பின் உபரி நீரே தமிழகத்திற்கு வருகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் 2 அணைகள் கட்டி 48 டிஎம்சி தண்ணீரை தேக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தற்போது வரும் உபரி நீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் தமிழகம் பாலைவனமாகி விடும். குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகும்.


அணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அதேசமயம், அணைகள் கட்டுவதற்கான நடவடிக்கையை கர்நாடக அரசுதீவிரப்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் பஸ், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.திமுக, காங்கிரஸ், மதிமுக, வாசன் கட்சி, பா.ம.க. விசி, மமக உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதன்படி இன்று காலை 3 மாவட்டங்களிலும் முழு அடைப்பு தொடங்கியது. பஸ் நிலையம் உள்ளிட்ட  முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சையில் பழைய பஸ் நிலைய பகுதி, பர்மா பஜார், காந்திஜி சாலை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் நிலயங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பட்டுக்கோட்டை,  கும்பகோணம்,  ராஜகிரி, பண்டாரவாடை மேலதிருப்பூந்துருத்தி, பேராவூரணி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.திருச்சியில் இருந்து  சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்று காலை தஞ்சைவந்தபோது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான மதிமுகவினர், விவசாயிகள் ரயிலை மறிக்க முயன்றனர். அப்போது வைகோ உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. பனகல்ரோடு, ஆசாத்ரோடு, அண்ணாசாலை, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன.

 இதுபோல மன்னார்குடி பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவாரூரில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் உள்ள  பெருகவாழ்ந்தான் என்ற இடத்தில் இன்று காலை விவசாயிகள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டூர், விளக்குடி, பரவக்கோட்டை, காரக்கோட்டை உள்பட திருவாரூர் மாவட்டத்தல் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்ரயில்மறியல்: மன்னார்குடியில் இருந்து இன்று காலை  மயிலாடுதுறைக்கு புறப்பட்ட ரயிலை விவசாயிகள், வர்த்தகர்கள் மறித்து தடுத்து நிறுத்தினர்.  போலீசார் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் ராஜேந்திரன், ஞானசேகரன், திமுக நகர செயலாளர் வீரா.கணேசன், முன்னாள் நகராட்சி தலைவர் பழ.மணி,  கோபால், நடராஜன்,  விஜயலட்சுமி, ஆர்வி. ஆனந்த் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

தனியார் டாக்டர்களும் பங்கேற்பு:டெல்டாவில் இன்று நடைபெறும் முழு அடைப்புக்கு திருவாரூர் இந்திய மருத்துவ கழக கிளையும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று அவசர சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படும். மற்ற சிகிச்சைகள் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததால் தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று புறநோயாளிகள் யாரும் வரவில்லை.நாகை:  நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், வேதாரண்யம், கீழ்வேளூர்,  வலிவலம், திருக்குவளை, தேவூர் போன்ற பகுதிகளில் கடையடைப்பு முழு அளவில் நடக்கிறது.  வேதாரண்யம்  வடக்கு வீதி கடைகள் நிறைந்த பகுதியாகும். இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வழக்கமான பரபரப்பு காணப்படவில்லை.

3 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. மறியலில் ஈடுபட்ட பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
உண்ணாவிரதம்:  முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து  மயிலாடுதுறை தாலுகா ஆபீஸ் முன் வணிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் ஏராளமான வணிகர்கள் இதில் பங்கேற்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.5 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டதாக வெள்ளையன் தெரிவித்தார். - /tamilmurasu.org/
தினமலர்.com

கருத்துகள் இல்லை: