செவ்வாய், 25 நவம்பர், 2014

சகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் தற்போது விசாரித்தால் போதும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு சகாயம் கேட்கும் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கனிம வளம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா, மதுரையில் இருந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டுமா என்று தனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று விசாரணை கமிஷன் அதிகாரியான சகாயம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டது குறித்தும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூர்த்தி, ‘சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் நடத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது 19 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து, அவர் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்துள்ளார்' என்றார். இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கிறோம். இந்த விசாரணை கமிட்டி, கிரானைட் முறைகேடு குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரணை நடத்தி, அறிக்கையை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்த உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள், ‘அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி சகாயத்துக்கு குவாரிகள் முறைகேடு தொடர்பான விஷயங்கள் முழுவதுமாக தெரியும். அதனால்தான் அவரை இந்த நீதிமன்றம் விசாரணை நடத்த நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்துள்ளீர்கள். எனவே, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம். அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. சகாயத்தை அவர் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து 4 நாட்களில் விடுவித்து, அவர் தலைமையில் குழுவை அமைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் அரசு செய்து தரவேண்டும். இதில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டாலோ, அவர் கோரும் உதவி கிடைக்கவில்லை என்றாலோ சகாயம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றனர். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. தற்போது நான் விசாரணை நடத்த தயாராக உள்ளேன். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் இதில் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே விசாரணைக் குழுவில் சேர்க்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டுமே சகாயம் தற்போது விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டனர். கிரானைட் முறைகேடு என்பது மிகப்பெரிய விவகாரம், மிகப்பெரிய அளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதால் படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்தலாம் என்றும் நீதிபதிகள் தனது உத்தரவில் குறிப்பிட்டனர். இதுபோல, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வள குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சகாயம் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமியும், பசுமை தாயகம் அமைப்பும் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபரிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பசுமைதாயகம் விரும்பினால் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: