பவா செல்லதுரை
திருவண்ணாமலை ஊர் பெயரைக் கேட்டாலே ஒரு எரிச்சல் வரும். கிரிவலம், விசிறி சாமியார், ரமண ஆசிரமம், மகா தீபம் போன்ற ஆன்மீக சுற்றுலாக்களில் உருண்டு புரளும் அந்த ஷேத்தரம் உண்மையில் ஒரு சபிக்கப்பட்ட ஊர் போலும். அழகான மலைகளும், சுறுசுறுப்பான உழைக்கும் மக்களும் கொண்ட அந்த ஊர் இத்தகைய பக்தி வணிகத்தால் மறைக்கப்படுகிறது. தன்னை பறிகொடுத்தும் வருகிறது.
இந்த எதிர்மறை பட்டியலில் இன்னுமொரு குறிப்பு சேர்ந்திருப்பது நானே விரும்பி செய்த ஒன்று அல்ல.
_____
“ஆவணப் படத்தின் தலைப்பே ‘பவா என்றொரு கதைசொல்லி‘ என்பதுதான்”
‘‘வா செல்லதுரையைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்காங்களாம். விழாவுக்கு வர்றீங்களா?‘‘ நண்பர் ஒருவர் கேட்டார்.

எனக்கு ஒரு கணம் குழப்பம். ஆவணப்படம் அவர் எடுத்ததா? அவரைப் பற்றியதா? ‘‘அவரைப் பத்தினதுதான்‘‘ என்று அழைப்பிதழைக் காட்டினார்.
தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயமோகன், பாலு மகேந்திரா, இயக்குநர் சேரன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் என பெருந்தலைகளின் பெயர்கள் கண்ணில் பட்டன. வலைப்பதிவரான செந்தழல் ரவிதான் ஆவணப் படத்தின் தயாரிப்பாளர். இயக்கம், (காஞ்சனை)ஆர்.ஆர்.சீனிவாசன்.
தமிழ்த் தேசியம், காவி தேசியம், போலி கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், என்.ஜி.ஓ. காரர்கள், பத்திரிகையாளர்கள், சிறுபத்திரிகை இலக்கியவாதிகள், சினிமா படைப்பாளிகள் என பன்முகங்கள் சங்கமிக்கும் அந்த விழா சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு ஞாயிறு நேரத்து மாலையை இலக்கிய வம்புகளால் இட்டு நிரப்பலாம் என்று கிளம்பினேன். பிரசாத் லேப் அரங்கில் நிகழ்ச்சி. செல்லும் வழியில் முகநூலைத் தோண்டிய போது பவா செல்லதுரை எழுதியிருந்த குறிப்பொன்றை படிக்க நேர்ந்தது.
அவருக்கு நடிகர் மம்முட்டி போன் செய்தாராம். ‘‘உங்களைப் பத்தி ஆவணப் படம் எடுத்திருக்காங்களாமே..’’ என்று அவர் கேட்க, ‘‘அதை ஆவணப்படம் என்று முழுமையாக சொல்ல முடியாது. நான் சில கதைகள் சொல்கிறேன். அதை படமாக்கியுள்ளனர். ஆவணப் படத்தின் தலைப்பே ‘பவா என்றொரு கதைசொல்லி‘ என்பதுதான்’’ என்று இவர் சொல்லியிருக்கிறார். ‘‘திரையில் உங்க முகம் மட்டுமே வந்தா நல்லாவா இருக்கும்’’ என்று மம்முட்டி அக்கறையுடன் கேட்க, ‘‘இல்லே… பி.சி.ஸ்ரீராம், மிஸ்கின் போன்றவர்கள் இடையிடையே என்னைப் பத்தி பேசியிருக்காங்க’’ என்று பவா பதில் சொல்லியிருக்கிறார். ‘‘அப்படின்னா என்கிட்ட ஏன் கேட்கலை’’ என்று மம்முட்டி உரிமையுடன் கேட்டிருக்கிறார். கொல்கத்தாவில் இருந்ததால் விழாவில் கலந்து கொள்ளா இயலாமை குறித்தும் வருத்தப் பட்டிருக்கிறார் மம்முட்டி.
‘‘அவர் எவ்வளவு பெரிய நடிகர்? அவர் தன்னை நினைவில் வைத்துக்கொண்டு போன் செய்து இத்தனை தூரம் அக்கறையாக விசாரிக்கிறாரே..’’ என்று வியந்து, விதந்து பவா செல்லத்துரை இதை எழுதியிருப்பதுதான் முக்கியமானது. சரியாகச் சொன்னால் இது ஒரு இலக்கிய மார்க்கெட்டிங் திருப்பணி.
இதுதான் பவா. எல்லோரையும் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். விழாவுக்கோ வீட்டுக்கோ வந்தவர்களையும் பாராட்டுவார். வராதவர்களையும் பாராட்டுவார். தன்னைப் புகழ்பவர்களையும் பாராட்டுவார். உள்ளுக்குள்ளே பழிப்பவர்களையும் பாராட்டுவார். புகழ வாய்ப்பு கிடைக்காதவர்களையும், முன்வராதவர்களையும் கூட பாராட்டுவார். மேற்கண்ட பிரபலங்களும் இத்தகைய இலக்கிய வழிப்பட்ட விளம்பரங்களை பதிலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
காரணம் பவா செல்லத்துரை ஒரு தனிநபரல்ல. தமுஎகசவில் ஒரு முக்கிய தூணாக பங்காற்றியுள்ளார். வம்சி பதிப்பகம் மூலம் சில பல புத்தகங்களை வெளியிடுகிறார். இடதில் இருந்தாலும் கடைக்கோடி வலதுகள் வரை நெருங்கிய நட்பு வைத்திருப்பவர். கலை இரவு எனும் போலிக் கம்யூனிஸ்டுகளின் மொக்கை நிகழ்ச்சியை கண்டு பிடித்த அறிவாளிகளில் ஒருவர். இது போக திருவண்ணாமலையின் கோவில் ஜயர், ஆசிரமத்து நிர்வாகி முதல் பொறியியல் கல்லூரி முதலாளி வரை சகலரோடும் தொடர்பையும், நட்பையும் பேணுபவர். மாதம் ஒன்றோ மூன்றோ இலக்கிய நிகழ்ச்சிகளை உடும்பு வறுவல், காட்டுக்கோழி பிரியாணி சகிதம் நடத்துபவர்.
எனவே இப்பேற்பட்டவருடன் நட்பு பாராட்டுவது இலக்கிய, சினிமா பிரபலங்களுக்கு ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக தேவைப்படுகிறது. இவருக்கும் தன்னைப் போன்ற ‘சாதாரணமானவனை’ பெரும் பிரபலங்கள் கொண்டாடுவதை பிறருக்கு தெரிவித்து தான் சாதாரணமானவன் இல்லை என்று காட்ட வேண்டியிருக்கிறது.
இத்தகைய பரஸ்பரம் பறிமாறப்படும் ஒரு புகழ்ச்சி நிகழ்ச்சி, சினிமா புகழ்ச்சி மேடைகளுக்கு புகழ்பெற்ற பிரசாத் லேப் அரங்கில் நடந்தது பொருத்தமானதுதான். இனி, ஓவர் டூ பிரசாத் லேப்.
பாலு மகேந்திரா
‘‘பவா எழுதிய கதைகளை விட, சொல்லும் கதைகள்தான் மிகச் சிறப்பாக உள்ளன’’
‘பவா என்றொரு கதை சொல்லி‘ ஆவணப் படத்தின் உள்ளடக்கம் குறித்து பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. அரங்கத்தில் அவரை புகழ்ந்து பலர் பேசியதைப் போல, கேமராவிற்கு முன்பாகவும் புகழ்ந்து பேசியுள்ளனர். அப்படி ஆவணப்படத்திலும், வெளியீட்டு அரங்கத்திலும் பேசிய அத்தனை பேருமே… பவாவின் கதை சொல்லும் திறன் குறித்துதான் எக்கச்சக்கமாக புகழ்மாரி பொழிந்தார்கள். ‘‘பவா எழுதிய கதைகளை விட, சொல்லும் கதைகள்தான் மிகச் சிறப்பாக உள்ளன’’ என்று பாலு மகேந்திரா குறிப்பிட்டார். பொதுவில் எழுதும் போது ஒரு செயற்கைத்தன்மையும் திட்டமிட்ட அறிவாளித்தனமும் வந்து விடுவதாக குறிப்பிட்ட பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆவணப்படத்தில் செந்தழல் ரவியும் இதர இலக்கியவாதிகளும் “ம்” கொட்டிக் கொண்டிருக்கும் போது பவா பேசுகிறார், கதை சொல்லுகிறார், ஊர் சுற்றிக் காட்டுகிறார், படம் காட்டி அருஞ்சொற்பொருள் விளக்குகிறார். அத்தனையிலும் அவர் பேசுவதைக் கேட்பதில் நமக்கு எந்த சுவாரசியமும் தட்டுப்படவில்லை. இந்தப் பேச்சுக்குத்தானா இத்தனை பாராட்டு பாலகுமாரா?
முதலில் சென்னைத் தமிழ் என்று துவ‌ங்கினாலும் வட தமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் அந்த தமிழ் பேசப்படும் பகுதியைச் சேர்ந்தவர் அந்த தமிழை பேசவில்லை. பேசவில்லை என்பதோடு வலிந்து பாதிக்கு பாதி ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுகிறார். மிகவும் செயற்கையான பேச்சு அது. பாசாங்குத்தனமான அறிவாளித்தனம், தனது இயலாமையை வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் பாணி பேச்சு. வடிவமே இத்தனை பிரச்சினைகளோடு என்றால் உள்ளடக்கம் இன்னமும் மோசம். அவர் கூற வரும் செய்திகளின் ஆன்மாவை அவர் தரிசித்ததாகவோ இல்லை கண்டு கொண்டு பேசியதாகவோ எதுவும் தென்படவில்லை. களக்காடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய தெருவின் திண்ணைகளில் பேசும் தொந்தி புரளும் பார்ப்பனர்களின் வெட்டி அரட்டை சுவாரசியம் கூட அதில் இல்லை.
ஆவணப்படத்தின் காட்சி ஒன்றில் பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்க அவர்களோடு செந்தழல் ரவியும் உட்கார்ந்து கேட்க, ஜெயந்தி என்றொரு பெண்ணின் கதையை பவா சொன்னார். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரையிலும் தன்னுடன் படித்த ஜெயந்தி என்ற பெண் எப்போதும் முதல் ரேங்க் வாங்குகிறார். ரேங்க் எடுப்பதில் ஜெயந்தியை முந்த வேண்டும் என்று போட்டியிட்டு கடைசி வரையிலும் தோற்றுக் கொண்டே இருக்கிறார் பவா. இந்தக் கதையை நகைச்சுவையாக சந்தானம் பாணியில் சொல்லிக் கொண்டு வந்தார். இதற்கெல்லாம் மாணவர்களும், ரவியும் சிரிக்கிறார்கள்.
கடைசியில், ஜெயந்தியை, 48 வயதான அவரது அக்காள் கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுக்கப் போகும் சோகத்துடன் கதையை முடிக்கிறார். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கிய ஜெயந்தி வாழ்க்கையில் தோற்றுப் போகிறார் என்று, வெற்றி – தோல்வி என இருமை எதிர்வுகளை ஒரு சாதாரண பரபரப்பாக்கி முடிக்கிறார். சிரித்த மாணவர்கள் சிந்தனை ஏதுமின்றி கொஞ்சம் அனுதாபத்துடன் கலைந்திருக்க கூடும்.
பவா செல்லதுரை
வெறுமனே உயிரற்ற சுவாரசியங்கள் கொண்ட, தெரிந்தே துண்டித்துக் கொண்ட பழமையின் மங்கிய வாசம் மட்டுமே ஈர்க்கின்றன.
உண்மையில் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது. மேலும் ஜெயந்தி வாழ்க்கையில் அவளாகவே தோற்கவில்லை. இந்த பார்ப்பனிய ஆணாதிக்க சமூகம்தான் அவளை தண்டித்திருக்கிறது. குற்றமிழைக்காத அவள் ஏன் தண்டிக்கப்பட்டாள் என்பதை விவரிப்பதில்தான் கதையின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. அதை வெற்றி தோல்வி என்று எதுகை மோனை எஃபக்டில் சொல்வதால் மாணவர்கள் பெறுவது ஏதுமில்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் பவாவைச் சுற்றியுள்ள மனிதர்களின் கதைகளில் எவை எந்தக் காட்சிகள் அவரை ஈர்க்கின்றன என்பதுதான். அந்த என்பது என்பது வெறுமனே உயிரற்ற சுவாரசியங்கள் கொண்ட, தெரிந்தே துண்டித்துக் கொண்ட பழமையின் மங்கிய வாசம் மட்டுமே. பர்மா பஜார் செண்டில் அலுப்புற்றவர்களை அந்த பழங்கஞ்சியின் வாசம் சில கணங்கள் வேண்டுமானால் ஆக்கிரமிக்கலாம். ஆறு நாள் பீசா, பர்கர், ஒரு நாள் பழங்கஞ்சி என்பதைத் தாண்டி அதற்கு மரியாதை ஏதுமில்லை.
‘வேட்டை‘ என்றொரு கதை. ஜப்பான் கிழவன் என்ற நரிக்குறவர் வேட்டைக்காரனைப் பற்றிய கதை அது. அவர் வைத்த கண்ணியில் விலங்குகளும், பறவைகளும் சிக்காமல் போனதையும், வேதகாரர்களின் ‘கண்ணி‘யில் ஜப்பான் கிழவன் வீழ்ந்து போனதையும் இணைத்து… கதையில் சொல்ல வருவது என்ன? ‘அவன் பையில் கண்ணிகள் பத்திரமாக இருந்தன‘ என்று ‘வேட்டை‘ கதை முடிகிறதாம். முடியட்டும். கதை வாசிப்பின் மிச்சம் என்ன? ‘நரிக்குறவர்களை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து வீழ்த்தி மதமாற்றம் செய்து ‘வேட்டை‘யாடிவிட்டார்கள்‘‘ என்பதா? எனில், இக்கதையின் இந்துத்துவ சார்பு குறித்து நாம் தனியே விவாதிக்க வேண்டும்.
ஊசி பாசி, காரை, புறா விற்கும் குறவர் இன மக்களை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை விட அவர்கள் எப்படி சுவாரசியமாக வாழ்கிறார்கள் என்பதே பவாவின் கலாபூர்வ கண்டுபிடிப்பு. பழங்குடிகளை நாகரீக சமூகம் அழிக்கிறது என்ற பின்நவீனத்துவ சொல்லாடல் முழு உண்மையை மறைக்கும் பாதிப் பொய். எல்லா குடி மக்களையும் வறுமை என்ற ஒன்று வாய்ப்பு, வசதிகள், அறிவு சரியாகச் சொன்னால் வர்க்கம் காரணமாக விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களிடம் எளிய வாழ்க்கை பண்பு இருப்பதாலேயே, திறமையாக பிரசவம் பார்க்கிறார்கள், அவர்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் தேவையில்லை என்று சுவாரசியமாக கதை சொல்வது நேயமற்றது.
பிறகு ஆவணப்படத்தில் பவா செல்லதுரை சொன்ன கதைகளை கேட்டு முடித்தபோது ஓர் அமானுஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தது போலிருந்தது. காடு, வேட்டை, குறி சொல்பவர்கள், ஆவிகள், இருண்மை மனம், இறுகிப் போன நம்பிக்கைகள்… என அவர் விவரித்தக் கதைகளின் மையச் சரடாக மர்மத் தன்மையே நிரம்பியிருந்தது. அந்த மர்மத்தை விலக்கி உண்மையின் ஒளியை காட்டுவதற்குப் பதிலாக… அவர் மர்மத்தை ரசிக்கிறார்; ரசிக்கக் கற்றுத் தருகிறார்.
கர்ப்பவதியான பெண் ஒருத்தி தனது பிள்ளை இறந்து பிறக்கும் என்று கற்பித்துக் கொண்டு கொடுங்கனவுகளோடு வாழ்கிறார். அதை வாய் பேச இயலாத ஒரு குறி சொல்பவன் அதிகப்படுத்துகிறான். இதை மலிவான ஒரு மர்மப் பட உத்தியோடு அடித்து விடுகிறார் பவா. பின்னர் கிறிஸ்மஸ் நாட்களில் வரும் தேவாலயக்குழு, ஏசுநாதர் பிறந்த கதையை சொல்லி, அந்த பெண்ணின் கொடுங்கனவு மறைவதை காப்பிய சுவையோடு சொல்கிறார் பவா. ஓர் உளவியல் மருத்துவரிடம் சென்று 200 ரூபாயில் முடிய வேண்டிய பிரச்சினையை மர்மம், ஊமையன், குறி, தொன்மம் என்று கொல்வதை நம்மால் ரசிக்க முடியவில்லை. மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் வென்று விட்டாலும், இவரைப் போன்ற இலக்கியவாதிகள் தமது திறனால் கதைகளாக வாழ வைக்க விரும்புகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை இது ஒரு கொலை நடவடிக்கை என்கிறோம்.
பழங்கால மர்ம சடங்குகளை, மூட நம்பிக்கைகளை விமர்சனமின்றி வழி மொழியும் இவரது கதைகளை, செந்தழல் ரவி, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாக கொண்டு வரப் போகிறாராம்.. சபாஷ் ரவி. ஏற்கெனவே கம்ப்யூட்டர் ஜோசியம் எல்லாம் இங்கே வந்து விட்டது. பிறகென்ன இனி பவா செல்லத்துரை சொல்லும் ஜமீன் குளமும், அதில் சுற்றும் ஆவியும் சாகா வரம் பெற்று இணைய வெளியில் கால் பதிக்கட்டும்.
ஜெயமோகன்
“தண்டி தண்டியாக புத்தகங்கள் எழுதியும் நமக்கு ஒரு ஆவணப்படம் இல்லையா”
வணப் படத்தில் ஒவ்வொருவரும் பேசுவதற்கு முன்பு ‘மானிட்டர்‘ பார்ப்பதையும், தயார் ஆவதையும் படம் பிடித்து அதையும் சேர்த்துள்ளனர். இந்த ஒழுங்கற்றத் தன்மை குறித்து பேசிய அனைவருமே சிலாகித்தனர். இது ரொம்பவும் இயல்பாக இருக்கிறதாம். ஜாக்கிஜான் படங்களில், படம் முடிந்ததும் ‘மேக்கிங் ஆஃப் தி ஃப்லிம்‘ என்று போடுவார்கள். நடிக்கும்போது ஏற்படும் தவறுகள் தொகுக்கப்பட்டிருக்கும். அதையே இங்கும் எடுத்து ஒவ்வொருவர் பேசுவதற்கும் முன்பு இணைத்து விட்டால் அது புதுமையாம்… ஒழுங்கிற்கு எதிரான கட்டவிழ்ப்பாம். அப்படின்னா முதலில் அந்த கட்டை உலக அளவில் அவிழ்த்தவர் ஜாக்கிஜான்தான், ஆர்.ஆர்.சீனிவாசன் அல்ல. மேலும் இந்த உத்தி முதல் காட்சிகளிலேயே வரும் போது இது ஒரு செயற்கையான அணுகுமுறை என்று நமக்கு உடனேயே தோன்றுகிறது. இயல்பை இயல்பாக காட்டாமல் இத்தகைய உத்திகளால் செயற்கையாக உருவாக்கும் போது அது இருக்கும் கொஞ்ச நஞ்ச இயல்பையும் கொன்று விடுகிறது.
பொதுவில் கேமரா, பத்திரிகை, ஆவணப்படம் என்று வரும்போது அறிஞர்கள் முதல் மக்கள் வரை ஒருவித செயற்கைத் தன்மையோடு வடிவம், உள்ளடக்கம் இரண்டிலும் பேசுகிறார்கள். அவர்களை பேசவிட்டு, வாதிட்டு, கோபப்படுத்தி உண்மைக் கருத்துக்களை வெளியே கொண்டு வரும் ஆற்றல் இயக்குநருக்கு இருக்க வேண்டும். இங்கே அது இல்லை. அதனால் பவா செல்லத்துரை எனும் அரட்டை மனிதர் குறித்து அறிஞர் பெருமக்கள் செப்பியிருக்கும் கருத்துக்களில் சரக்கோ, முறுக்கோ எதுவுமில்லை.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயமோகனே இதற்கு சாட்சி. ரெண்டு சிறுகதை தொகுப்பு எழுதிய பவா செல்லத்துரைக்கே இத்தனை பிரபலங்களின் துணுக்குகளோடு ஆவணப்படமா என்று அவர் உள்ளுக்குள் குமைந்திருக்க வேண்டும். தண்டி தண்டியாக புத்தகங்கள் எழுதியும் நமக்கு ஒரு ஆவணப்படம் இல்லையா என்று அவர் கேட்டால் அது நியாயமான கேள்விதான். ஆனாலும் அவரது மனக்குளத்தில் உள்ள அவரது ஆவணப்படத்தை கமலோ, மணிரத்தினமோ எடுத்தால்தான் அவர் ஆழ்மனம் சாந்தியடையும்.
“பவா செல்லத்துரை வாழ்க்கையில் பெரிய சோகங்களை கண்டவரில்லை, அதனால்தான் அவர் வாழ்வை மகிழ்வாக எதிர் கொள்கிறார், பேசுகிறார், விருந்து வைக்கிறார்” என்று ஒரு மாதிரி வஞ்சகப் புகழ்ச்சியில் பேசினார் ஜெயமோகன். அவர் உன்னத இலக்கியங்களை படைப்பதற்கு வாழ்வில் அவர் கண்ட பெருஞ்சோகங்களே காரணம் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார். இந்த உள்குத்தை யாரும் கண்டுபிடித்த மாதிரி தெரியவில்லை.
மேலும் அவரது மகனான அஜிதன்தான் தனது முதல் மாணவன் என்பதையும் மேடையில் பகிரங்கமாக அறிவித்தார். விஷ்ணுபுரத்திற்கு என்னதான் வாக்கப்பட்டாலும் அரங்கசாமி போன்ற பக்த கோடிகளுக்கு கூட அந்த முதல் மாணவன் தகுதியில்லை என்பதிலிருந்து இலக்கியம் கூட ஆதீன பட்டத்திளவரசு மூலம்தான் கைமாறும் என்று தெரிகிறது. சரி, குடும்ப வாரிசு இல்லாத இடம் எது என்று நீங்கள் எரிச்சலடைவது தெரிகிறது. இதனால்தான் பவா குறித்த ஆவணப்படத்தில் அவரது அன்பான குடும்பம் ஆவணப்படுத்தப்படவில்லை என்று வருத்தப்படுகிறார் ஜெயமோகன். எனவே ஜெமோ குறித்து ஆவணப்படம் எடுக்கும் போது இந்தக்குறை தீர்க்கப்படும் என்று தெரிகிறது.
நிகழ்ச்சியில் பேசிய பலர் பவா செல்லதுரையே கூச்சப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். பெரும்பாலானோர், ‘எப்போ போனாலும் பவா வீட்டில் பிரியாணி சாப்பிடலாம்‘ என்று சாப்பாட்டு ராமன்களைப் போல அடுக்கியதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இப்படி எந்நேரமும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சாப்பாடு போடும் இல்லம் என்றால் அது சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்‘ வீடுதான். அதன்பிறகு இப்போது பவா செல்லதுரையின் வீடு. ‘பவா வீட்டுக்கு எந்த நேரத்துக்குப் போனாலும் பிரியாணி கிடைக்கும்‘ என்று லெக் பீஸ் தின்ற எச்சிலின் ஈரத்துடன் பேசுபவர்கள், இப்படி கொத்து, கொத்தாக வரும் நபர்களுக்கு எல்லாம் சமைத்துப் போட எவ்வளவு பணம் வேண்டும் என்பதையோ, இது மற்றவர்களால் முடியாதது ஏன் என்பதையோ கொஞ்சம் கருணை கூர்ந்து பரிசீலிக்க கூடாதா?
பவா செல்லதுரை
இலக்கியவாதிகள் அத்தனை பேரும் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஏனெனில் இந்த இலக்கியவாதிகள் அத்தனை பேரும் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா செட் போல ஒரு வீடு, அதற்கு எந்நேரமும் வருகை தந்து கொண்டிருக்கும் சினிமா; இலக்கிய வி.ஐ.பி.கள், அவர்களுடன் அசைவ விருந்து, மா மரத்தடியில் இலக்கியம், மலையோரத்தில் வாக்கிங்… இந்தக் ‘கொடுப்பினை‘ எத்தனை பேருக்கும் கிடைக்கும்? எனில், இந்த இன்பமயமான வாழ்வைப் பார்த்து ரசித்து பங்கு பெறுவது மட்டும்தான் பவா அண்ட் கோவை இணைக்கும் இழையா என்றால், நிச்சயம் இல்லை.
பவாவிற்கு கருணா என்றொரு நண்பர் இருக்கிறார். முழுப்பெயர் கருணாநிதி. எஸ்.கே.பி.கருணா என்று சொல்வார்கள். தி.மு.க. முன்னால் அமைச்சர் கு.பிச்சாண்டியின் தம்பி. திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் முதலாளி. இப்படி கல்லூரி உரிமையாளராக மட்டும் இருந்திருந்தால் அவர் பத்தோடு பதினொன்று. மாறாக, கருணாவுக்குள் ஓர் இலக்கியவாதி உறங்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து எழுப்பிவிட்டவர் பவா செல்லதுரை. ஓர் ஊழல் அரசியல் பணக்கார வாரிசின் இலக்கியத் தாகத்தை இனம் கண்டு கொண்ட பவா, திருவண்ணாமலைக்கு எந்த இலக்கியவாதி வந்தாலும் கருணாவுக்கு அறிமுகப்படுத்துவார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்து இலக்கிய நட்பு வட்டம் இல்லாமல் காய்ந்து கிடந்த கருணாவுக்கு அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஒரு பணக்கார இலக்கிய கோயிந்து பலியாடாக கிடைத்திருக்கிறது என்றால், எழுத்தாளர்களுக்கு அதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஆகவே இந்த நட்பு செழித்து வளர்ந்தது. ‘‘பவா செல்லதுரை ஒவ்வொரு வாரமும், அந்த வாரத்தின் மிகச் சிறந்த பிரியாணியை சாப்பிடுகிறார்‘‘ -  என்று ஆவணப்படத்தில் எஸ்.கே.பி.கருணா சொல்லும் போது பின்னணிக் காட்சியில் ஏராளம் பேர் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். ஜெயமோகனுக்கு அருகில் சாப்பிடும் பவா ‘வெளியே சிலர் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் பிரியாணி போடுங்கள்’ என்று கூறுகிறார்.
ஆவணப்படத்தின் காட்சி ஒன்றிற்காகவே ஒரு பிரியாணி விருந்தென்றால் மற்றதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாகர்கோவிலில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் சுந்தர விலாஸ் இல்லமும் கூட இத்தகைய விருந்து உபசரணைகளுக்கு பெயர் போனதுதான். ஒரே ஒருவித்தியாசம், அங்கே சைவம், இங்கே அசைவம். இது போதாதா இலக்கியவாதிகளுக்கு?
இயக்குநர் சேரன்
‘‘பவாகிட்ட ‘முடியாது’ங்குற வார்த்தையே வராது”
கருணாவின் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்களையும், சினிமாக்காரர்களையும் வரவழைக்க வேண்டுமா? பவா நிறைவேற்றிக் கொடுப்பார். தெரிந்தவர்கள் யாருக்கேனும் பொறியியல் சீட் வாங்க வேண்டுமா? பவாவுக்கு போன் செய்தால் போதும். இயக்குநர் சேரன் இதை நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே சொன்னார்,
‘‘பவாகிட்ட ‘முடியாது’ங்குற வார்த்தையே வராது. ‘என் மனைவி திருவண்ணாமலை கோயிலுக்கு வரணும்னு சொல்றாங்க’ன்னு சொன்னாப் போதும், ‘அனுப்புங்க… நம்ம ஸ்ரீதர் அய்யர் இருக்கார்’னு சொல்லுவார். ரெண்டு பேருக்கு எஞ்ஜினீயரிங் சீட் வேணும்னு சொன்னா, ‘கருணாகிட்டப் பேசிடலாம்’பார். ஷூட்டிங் நடக்கும்போது திடீர்னு பணப் பற்றாக்குறை. பவாவுக்கு போன் போட்டு ‘ஒரு 25 லட்சம் உடனே வேணும்’னு கேட்டா, அதுக்கும் முடியாதுன்னு சொல்ல மாட்டார். ‘கருணா ஆஸ்திரேலியாவுல இருக்கார். பேசிட்டு சொல்றேன்’னு சொல்லுவார். இவரைப் போல ஒரு மனுஷனை நீங்க பார்க்கவே முடியாது” என்று பேசினார் சேரன்.
வாங்கிக் கொடுக்கும் எஞ்ஜினியரிங் சீட்டுக்கு கமிஷன் உண்டா, கல்லூரிக்கு அழைத்து வரும் வி.ஐ.பி.களுக்கு கட்டிங் உண்டா என்பது எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கல்லூரியை முதலாளி கருணா எப்படி ‘உழைத்து’ கட்டினார், மாணவர்கள் எவ்வளவு ‘பீஸ்’ கட்டுகிறார்கள் என்பதை பவா எனும் கதை சொல்லி கதையாக சொல்வாரென்றால் அவர் ஒரு கதை சொல்லி என ஏற்கலாம். கதைகளை மறைத்தால் அதற்கு என்ன பெயர்?
சேரன் பேச்சில் இருந்து தெரிவது என்னவெனில், வி.ஐ.பி.களின் வீட்டம்மாவுக்கு விபூதி வாங்கித் தருவது, ரமணாஸ்ரமத்தை சுற்றிக் காட்டுவது, கிரிவலத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதில் பவா செல்லதுரை கை தேர்ந்தவராக இருக்கிறார். (பாலகுமாரனுக்கு விசிறி சாமியாரை அறிமுகப்படுத்தியது பவா செல்லதுரைதானாம். இதையும் விழாவிலேயே சொன்னார்கள்). இதுதான் வி.ஐ.பி.களை கவிழ்க்கும் கலை.
சொகுசான வாழ்க்கை, எந்நேரமும் நல்ல தீனி, யாரைப் பிடித்தால் காரியம் நடக்குமோ அவர்களுக்கு கூச்சமே இல்லாமல் சோப்புப் போடுவது, தரகு வேலை பார்ப்பது… இதையே 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கும் இந்த நபர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருக்கிறாராம். இவரது நட்பு வட்டம், செயல்பாடு, எழுத்து, பேச்சு… போன்றவைக்கும், கம்யூனிஸத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஆனால், பவா செல்லதுரையின் வீட்டில் தினம் பத்து பேர் பிரியாணி சாப்பிடுவதை ‘கம்யூன் வாழ்க்கை’ என்கிறார் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள். கறிச்சோறு சாப்பிட்டா கம்யூன் வாழ்க்கையா? என்னா ஒரு பொருள்முதல்வாத புரிதல்..?!
இவர்கள் எல்லோரும் எதன் அடிப்படையில் ஒருங்கிணைகின்றனர்? இவர்களை இணைக்கும் கண்ணி எது? ‘இலக்கியம்’ என்று யாராவது சொன்னால், அது பொய் என்பதை இந்த ஆவணப் பட நிகழ்ச்சியே நிறுவிவிடுகிறது. இவர்களை இணைப்பது பச்சையான காரியவாதம். பவா செல்லதுரையின் செல்வாக்கான சினிமா, அரசியல் தொடர்புகள் மற்றவர்களை கவர்ந்து இழுக்கின்றன. அதனால்தான், ‘ஐயாமாரே… உங்கூட்டு உடும்பு கறி சூப்பர்’ என்று கூவுகின்றனர். இந்த அசிங்கமான சொறிந்து விடும் பண்பை இலக்கியம் என்ற பெயரில் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவதுதான் இதில் உள்ள மெய்யான அபாயம். எழுத்தாளன் என்பவன் சுய மரியாதை மிக்கவனாக, மற்ற பிரிவினரைக் காட்டிலும் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவனாக இருந்த காலம் ஒன்று உண்டு. அந்த குறைந்தபட்ச நேர்மையோ, தன்மானமோ இவர்களிடம் இல்லை.
இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடி, அவர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வரும் பாணபத்திர ஓணாண்டிகள்!
-   வளவன் vinavu.com