வியாழன், 28 நவம்பர், 2013

ஜெயலலிதாவின் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் மரணம் !


சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சரோஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா வியாழக்கிழமை வாழப்பாடி, பேளூர், அயோத்தியப்பட்டிணம் உள்ளிட்ட 9 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் அதிமுக வேட்பாளர் சரோஜாவின் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரது மனைவி சாலையம்மமாள் (60) என்பவரும் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக பேளூருக்கு வந்துள்ளார். அங்கே ஏற்காடு தொகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அம்மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி பொறுப்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்ததால், ஜெயலலிதாவை காண்பதற்கு கூட்டம் அலைமோதியது.


இந்த கூட்டத்தில் சிக்கிய சாலையம்மாள் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள வாழுப்பாடி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவசுப்பிரமணியம்nakkheeran.in

கருத்துகள் இல்லை: