திங்கள், 25 நவம்பர், 2013

பாதுகாப்பு இல்லாத 1037 ATM கள் மூடல்

பெங்களூர் நகரில் செக்யூரிட்டி வசதி செய்யப்படாத 1037 ஏடிஎம்கள் நேற்று மாலை முதல் மூடப்பட்டன. போலீசார் விதித்த 3 நாள் கெடு நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ஜேசி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் ஏடிஎம்மில் கடந்த 19ம் தேதி பணம் எடுக்க சென்ற ஜோதி உதயா என்ற பெண் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை 3 மணி நேரத்துக்கு பின்னர் அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது. இதற்கிடையில் பெண்ணை தாக்கிய நபர் வீடியோவில் பதிவாகியிருந்தும் அவரை பற்றிய துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
அவர் ஆந்திராவுக்கு தப்பியதாகவும், ஏற்கனவே ஒரு கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பெங்களூர் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இதற்கிடையில் ஏடிஎம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் பெங்களூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். 3 நாட்களுக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த கெடு நேற்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து செக்யூரிட்டி போடப்படாத சுமார் 1037 ஏடிஎம்களை போலீசார் நேற்று இரவு மூடினர். பெங்களூர் போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. dinakaran,com

கருத்துகள் இல்லை: