வெள்ளி, 26 ஜூலை, 2013

மதிய உணவு ஆசிரியர்களின் வேலை அல்ல ! அலகாபாத் ஹைகோர்ட்

அலகாபாத்: பாடம் நடத்துவது மட்டும்தான் ஆசிரியர்களின் வேலை மதிய உணவுப் பணியை கவனிப்பது அவர்களின் வேலை அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் விஷம் கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளது. மதிய உணவை முதல்வர்கள் சாப்பிட்டு பார்த்த பிறகே, மாணவர்களுக்கு பரிமாற வேண்டும், மதிய உணவு தயாரிக்கும் பணியை முதல்வர்களும், ஆசிரியர்களும் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்று பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, மதிய உணவு பணியை புறக்கணிப்பது என்று பீகார் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு மேற்பார்வை பணியை புறக்கணித்தனர். இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் மதிய உணவை தயாரிப்பது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் அப்பணியை கவனிக்க வேண்டும் என்று மீரட் மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பிரதானசாரியா பரிஷத் என்ற அமைப்பு சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த உத்தரவால், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பணி பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் மேற்பார்வையில் மதிய உணவு பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், விக்ரம்நாத் ஆகியோர் கொண்ட அமர்வு, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி, பாடம் நடத்துவது மட்டும்தான்தான். மதிய உணவு தயாரிப்பதை மேற்பார்வையிடுவது அல்ல. அதிலும், மதிய உணவு பணியை யார் கவனிப்பது என்பதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறை இருக்க வேண்டும். இந்த பிரச்னையில், மாநில அரசு தனது கொள்கையை ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். மறுஉத்தரவு வரும்வரை, தொண்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் மதிய உணவு தயாரிக்கும் பணி நடக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் மதிய உணவை பள்ளி தலைமைஆசியர்கள் சாப்பிட்டு பார்த்துவிட்டுதான் மாணவர்களுக்கு பரிமாறவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: