புதன், 24 ஜூலை, 2013

எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று சொல்வதில் அதீத ஆர்வம்

தனிப்பட்ட முறையில் எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று சொல்வதில் அதீத ஆர்வமுடைய முதல்வர், நான் பொறாமைப்படுகிறேன், ஆதங்கப்படுகிறேன் என்று கடைந்தெடுத்த பொய் சொல்கிறாரே” என, கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல, எனக்கு ஆதங்கமோ, அரசியல் காழ்ப்போ, பொறாமையோ, விரக்தியோ நிச்சயமாகக் கிடையாது. ஆனால், முதல்வருக்குதான், எப்போதும் தன்னால் தான் நடந்தது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆர்வமும், ஆசையும் உண்டு. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ‘என் தலைமையிலான அரசு, என் தனிப்பட்ட முயற்சி, முதல்வரின் உத்தரவு’ என்று தான் கூறிக் கொள்வார். அதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. பெருமை. சட்டசபையில் கூட, அரசின் எந்த அறிவிப்பாக இருந்தாலும், 110வது விதியின் கீழ் முதல்வர் தான் படிப்பார்; வேறு எந்த துறை அமைச்சருக்கும் அந்த அனுமதியே கிடையாது. அ.தி.மு.க., சார்பில் யாராவது ஒரு போஸ்டர் அல்லது விளம்பரத் தட்டிகளை வைக்க விரும்பினால் கூட, தங்கள் புகைப்படங்களை வெளியிடக் கூடாது. முதல்வரின் படம் மட்டும் தான் வெளி வரும். இப்படி இருக்கும்போது, நான் பொறாமைப்படுகிறேன், ஆதங்கப்படுகிறேன் எனக் கூறுவது கடைந்தெடுத்த பொய். ‘என்.எல்.சி., நிறுவன பங்குகளை, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளத் தயார்’ என, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், நெய்வேலி தொழிலாளர்களின் ஒற்றுமையான, ஒட்டுமொத்தப் போராட்டம் காரணமாகவே, மத்திய அரசு தானாகவே முன் வந்து என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்ப பெற்றிருக்கும். இது உண்மையா? இல்லையா?
இந்த வாய்ப்பு முதல்வர் எழுதிய அவசரக் கடிதம் காரணமாக, தவறிப் போய் விட்டது என்பது தான் பலரின் கருத்து” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: