புதன், 24 ஜூலை, 2013

குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அவகாசம் கோருகிறது சிபிஐ

டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோர திட்டமிட்டிருக்கிறது. 2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ அண்மையில் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடந்தது என்கவுன்ட்டர் அல்ல. போலி என்கவுன்ட்டர்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் கடத்தி அடைத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அந்தக் குற்றப் பத்திரிகையில் கூறியதுடன் இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் அதில் தெரிவித்திருந்தது. மேலும் அந்த முதலாவது குற்றப்பத்திரிகையில் ஐபி எனப்படும் மத்திய உளவு அமைப்பின் குஜராத் அதிகாரியான ராஜேந்திர குமாருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜேந்திரகுமாரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருக்கிறது என்பது சிபிஐ தரப்பு கருத்து. இதனால் சிபிஐக்கும் ஐபிக்கும் இடையே பெரும் மோதல் உருவாகி உள்ளது. ராஜேந்திரகுமார் இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதன் பின்னரிடம் அவரிடம் விரிவான விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம்
கோர சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: