வியாழன், 14 பிப்ரவரி, 2013

Valentine's Day காதலர்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை ; போலீஸ் எச்சரிக்கை

சென்னை: காதலர் தினத்தன்று காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவோர், பணம் பறிக்கும் கும்பல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் பூக்கள், பூச்செண்டுகள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். சில காதல் ஜோடிகள் கடற்கரை, சினிமா தியேட்டர், பூங்காக்கள், வணிக வளாகங்களில் திரள்வார்கள். இதனால், அங்கு கூட்டம் அலை மோதும். வெளிநாட்டு கலாசாரம் இந்தியாவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. எனவே, கலாசார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தின கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் காதலர் தினத்தில் ஒன்று சேர்ந்திருக்கும் ஜோடிகளை சிலர் அடித்து விரட்டுகின்றனர். அதுபோன்றதொரு சம்பவம் சென்னையில் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர். காதலர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தனியாக இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்போர் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது இடங்களில் அத்துமீறி நடக்கும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னையில் காதல் ஜோடிகள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: