புதன், 13 பிப்ரவரி, 2013

All are Kin கமலின் ஹாலிவூட் ஆங்கில படம்: டைட்டில் ரெடி!


Viruvirupu
விஸ்வரூபம் பட ரிலீஸூக்கு 24 அமைப்புகளும், புரட்சித் தலைவியும் சிக்கல்கள் கொடுப்பதற்கு முன்னரே, கமலின் ஹாலிவூட் படம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. விஸ்வரூபம் படத்தை பார்த்த ஹாலிவூட் தயாரிப்பாளர் பேரி எம் ஆஸ்போர்னுக்கு, விஸ்வரூபத்தில் கமல் என்ற நடிகரைவிட, கமல் என்ற இயக்குனரை அதிகம் பிடித்துப் போனதில், கமல் டைரக்ஷனில் ஆங்கிலப் படத்தை தயாரிக்க விரும்பி, பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிரபலமான லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பட சீரீஸின் தயாரிப்பாளர் இவர்தான்.
விஸ்வரூபம் பட பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னரே, கமல் சொன்ன ஒன்லைன் ஓகேவாகி, படத்தின் காஸ்ட்டிங்கூட ஓரளவுக்கு முடிவாகி, சில ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு விட்டன.
படத்துக்கான ஒர்க்கிங் டைட்டில் முடிவானது. ‘All are Kin’ என்பதுதான் டைட்டில். இந்த டைட்டில் கமலின் கைவண்ணம். ‘யாவரும் கேளிர்’ என்பதை ஆங்கிலப்படுத்தியதில் வந்ததே, ‘All are Kin’.
இதை ஒர்க்கிங் டைட்டில் (working title) என்று சொல்வார்கள். அநேக ஆங்கிலப் படங்கள் எடுக்கப்படுவது இப்படித்தான். படம் ரிலீஸ் ஆகும்போது, இந்த ஒர்க்கிங் டைட்டிலே, நிஜ டைட்டில் ஆகும், அல்லது மாறும். உதாரணமாக சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பான்ட் படம் Skyfall தயாரிப்பது என்று முடிவானதும் வைக்கப்பட்ட ஒர்க்கிங் டைட்டில், ‘Bond 23’ என்பதுதான்.
அந்தப் பெயரிலேயே 2010-ம் ஆண்டு படத்தின் ஆரம்ப வேலைகள் நடந்தன. ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. படம் தொடர்பான செய்திகளிலும், இந்த ‘Bond 23’ டைட்டிலே பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி வைக்கப்பட்ட பிரஸ் கான்பிரன்ஸிலேயே, Skyfall என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
அதுபோல, கமலின் ஆங்கிலப் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஒர்க்கிங் டைட்டில், ‘All are Kin’.
விஸ்வரூபம் படத்தின் பிரச்னைகள் உச்சக்கட்டம் அடைந்தபோது கமல், தனது இல்லத்தில் வைத்த செய்தியாளர் சந்திப்பில், “நான் நாட்டை விட்டே போய்விடுவேன்” என்று சொன்னதன் பின்னணியில் இருந்தது இந்த பட விவகாரம்தான். இதன் டைரக்ஷனுக்காக கமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
கமலுக்கு, ஆங்கிலத்தில் படம் எடுப்பதிலும் சிக்கல் கிடையாது. அமெரிக்காவில் தங்கியிருப்பதிலும் சிக்கல் கிடையாது. அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது, “அடுத்த ஜனாதிபதியாக ஒரு ஸ்கர்ட் போட்ட பெண்மணி வரவேண்டும்” என்று சொன்னால்கூட படத்துக்கு சிக்கல் கிடையாது! அந்த நாட்டு அரசியல் அப்படி!!
பாவம், புரட்சித் தலைவிதான், இங்கே கமலை மிஸ் பண்ணுவார்!

கருத்துகள் இல்லை: