ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

சுஜாதா வென்ற சினிமாவில் தோற்கும் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன்

 nisaptham.com
கடல் படம் வெற்றியடையவில்லை போலிருக்கிறது. கொஞ்சம் வருத்தம்தான். மணிரத்னம் தோற்றுப் போனார், ராதாவின் மகள் துளசி மொக்கையாக இருக்கிறார் அல்லது கார்த்திக் மகனுக்கு நல்ல ஓபனிங் கிடைக்கவில்லை போன்ற டுபாக்கூர் காரணங்களினால் வருத்தம் இல்லை. சினிமாவில் ஜெயமோகன் இன்னொரு முறையும் தோற்றிருக்கிறார். அதுதான் கமறுகிறது. இலக்கியம் தெரிந்தவர்கள் இது போன்ற Common man சமாச்சாரங்களில் நின்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் கோட்டை விட்டுவிடுகிறார்கள். ஜெயமோகன் என்றில்லை, எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இலக்கியவாதிகள் பணியாற்றிய பெரும்பாலான படங்கள் குப்புற விழுந்துவிடுகின்றன. ஜெயமோகனையோ அல்லது எஸ்.ராமகிருஷ்ணனையோ அவர்களின் நாவல் வழியாக தேடிப்பார்ப்பதில் ஒரு ‘த்ரில்’இருக்கிறது. ஆனால் அவர்கள் பணியாற்றிய படங்களில் அவர்களைத் தேடிப்பார்த்தால் துக்கம் அல்லது எள்ளல்தான் மிஞ்சுகிறது. வருடத்திற்கு வெறும் ஐந்நூறு ரூபாய் செலவு செய்து நிசப்தம்.காம் என்ற ‘டொமைன்’ வாங்கிவிட்டால் சர்வசாதாரணமாக “அவர்கள் தோற்றுவிட்டார்கள்” என்று எழுதித் தொலைத்துவிடுகிறேன். அதே சமயம் சினிமாவில் தனது அடையாளத்தை பதிப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியமில்லை என்பதையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனாகவோ அல்லது தேவயானியின் கணவர் ராஜகுமாரனாகவோ இருந்துவிட்டால் சினிமாவில் முத்திரை படைப்பது சாத்தியம் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் எல்லோரும் மென்று தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?
நாவல் எழுதும் போதோ அல்லது சிறுகதை எழுதும் போதோ எழுத்தாளனுக்கு எந்த அழுத்தமும் இல்லை. லட்சக்கணக்கான பிரதிகள் விற்க வேண்டும் என்றோ கோடிக்கணக்கில் ராயல்டி வர வேண்டும் என்றோ அவன் எதிர்பார்ப்பது இல்லை. அதே போல கதாபாத்திரத்தைப் பற்றியோ, கதையின் போக்கு பற்றியோ அவனைத் தவிர வேறு யாரும் தலையிடுவதில்லை. தான் விரும்பியதை அவனால் எழுதிவிட முடிகிறது. ஆனால் சினிமாவில் அப்படியிருக்க முடிவதில்லை. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டும் தயாரிப்பாளரில் ஆரம்பித்து தனது வாழ்க்கையை அடமானம் வைத்திருக்கும் டைரக்டர், தன்னை சூப்பர் ஸ்டாராக்கிக் கொள்ள விரும்பும் நாயகன் வரை அத்தனை பேரும் அரித்து எடுப்பார்கள். இவர்களுக்காக வளைந்து போவதுதான் நடக்கிறதேயொழிய ஜெயமோகனும், எஸ்.ராவும் இந்த அழுத்தங்களை மீறி தங்களின் அடையாளத்தை சினிமாவில் பதிக்க முடியும் என்று தோன்றவில்லை. தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சில Myth உண்டு. இலக்கியவாதிகள் என்பவர்கள் படு சீரியஸான முகத்துடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அவர்கள் வெகுஜனப்பத்திரிக்கைகளை திரும்பிக் கூட பார்க்கக் கூடாது, சினிமாவில் பணியாற்றக் கூடாது என்பது வரை சகட்டுமேனிக்கு மூடநம்பிக்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.என்னளவில் சினிமாவில் அல்லது வெகுஜன ஊடகங்களிலோ செயல்படுவது பாவச்செயலோ அல்லது தீண்டத்தகாத காரியமோ இல்லை.  விரும்பினால் வெளிப்படையாக முயற்சிக்கலாம். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் தமிழில் பெரும்பாலான படைப்பாளிகள் இவை போன்ற எல்லைகளுக்குள் தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு Confined Space களில் இயங்கும் சூழலை மீறித்தான் ஜெயமோகனும் அல்லது எஸ்.ராவும் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் ஜெயிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில்“சுஜாதா வென்றிருக்கிறார்” என்று யாராவது கையை உயர்த்தக் கூடும். அவரை இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் என்பதால் அவரை விதிவிலக்காக(Exceptional case) வைத்துத்தான் விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சுஜாதாவின் எழுத்துக்கள் நேரடியானவை அதே சமயம் அப்பட்டமானவை. இந்த எளிய, நேரடியான, அப்பட்டமான எழுத்துமுறையைத்தான் தனது ஆயுள் முழுவதும் பயிற்சி செய்திருக்கிறார். ஆனால் ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இன்னொரு கரையில் நிற்பவர்கள். தாங்கள்  எழுதியது போக எழுதாமல் தவிர்த்தவைகளை வாசகர்கள் தங்களின் சுய அறிவு மூலம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் எழுதுபவர்கள். இதுதான் இவர்களுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என புரிந்து கொள்ள முடிகிறது. 
தமிழ் சினிமா எப்பொழுதும் நேரடியானதாகவும் அப்பட்டமானதாகவுமே இருந்திருக்கிறது. தமிழ் சினிமா எதிர்பார்க்கும் அந்த நேரடித்தன்மையை சுஜாதாவால் கொடுக்க முடிந்த அளவில் சொற்ப சதவீதத்தையே ஜெ அல்லது எஸ்ராவால் கொடுக்க முடிகிறது. சினிமா கோருகிறதே என்பதற்காக தங்களை நேரடித்தன்மைக்காக மாற்றிக் கொள்ள முயலும் இடத்தில்தான் ஜெயமோகனும் எஸ்.ராவும் தங்களின் அடையாளத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. 
கீழே இருக்கும் சங்கதியும் இவர்களின் தோல்விக்கு பின்னால் இருக்கக் கூடும் என நம்புகிறேன்.
சுஜாதா தனது ரிடையெர்ட்மெண்ட் காலத்தில்தான் சினிமாவில் மிக அதிகமாக வசனம் எழுதினார். அந்தக் காலத்தில் அவர் இதனை ரிலாக்ஸ்டாகவும் அனுபவித்தும் செய்திருக்கக் கூடும். அப்பொழுது  பணமும் அவருக்கு அத்தனை பிரதானமானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஜெமோவுக்கும், எஸ்ராவுக்கும் இது வெற்றிக்களை எதிர்பார்க்கும் வயதாகவும், பணத்திற்கான தேவைகள் அடங்கிய பருவமாகவும் இருக்கிறது. இவற்றிற்கான  பதட்டங்களால் தங்களையும் அறியாமல் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: