ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலேயே செயல்படுகிறார்

கமலின் பிற படங்களைவிட இந்தப் படம் சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இந்தப் படத்தின் அரசியல் கமலின் முந்தைய படங்களை மட்டுமல்ல… பிற தமிழ், இந்தியப் படங்களைவிடப் படு மோசமாக, அபாயகரமாக இருக்கிறது. ஒருவர் தன்னை எந்த அடையாளத்துடன் பிணைத்துக்கொள்கிறார் என்பதுதான் அவருடைய கருத்துகளையும் படைப்புகளையும் தீர்மானிக்கும்.
இதன்படிப் பார்த்தால், கமல் தன்னை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் அமெரிக்க நலன் விரும்பியாகவும் இருக்கும் இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது. இப்படியான அரசியல் பார்வை ஒருவருக்கு இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பார்வையை வைத்துக்கொண்டு, தன்னைக் கலைஞன் என்றும் உலகளாவிய தீவிரவாதம் பற்றி மனிதாபிமான முறையில் பேசுபவன் என்றும் சொல்லிக்கொள்ளக்கூடாது. எலும்புத் துண்டு வீசபவன் காட்டுகிற திசையில்தான் எனக்கு குரைக்கத் தெரியும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு இதைச் செய்யலாம். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள். வேசைத்தனம் செய்துவிட்டு பத்தினி வேடம் போடக்கூடாது. tamilpaper.net

உலகத் தீவிரவாதம் என்பது அல்கொய்தா, தாலிபன்களால் மட்டுமே நிகழ்த்தப்படவில்லை. அமெரிக்கா இதைவிடக் கூடுதல் அட்டூழியங்களைச் செய்துவருகிறது. ஆஃப்கானிய பிரச்னையை எடுத்துக்கொண்டால், கொலையும் செய்துவிட்டு, சவப்பெட்டியையும் அன்பளிப்பாக அனுப்பிவைக்கும் செயலைத்தான் அமெரிக்கா செய்துவருகிறது. உலக தீவிரவாதத்தைப் பற்றிப் படமெடுப்பவர் நிச்சயம் இந்த அம்சத்தையும் படத்தில் காட்டியிருக்க வேண்டும். ஏதாவது ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம், நம் தாக்குதலில் நூறு ஆப்கானியர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னதும் வெறும் நூறுதானா என்று எகத்தாளமாகக் கேட்பதையும் காட்டியிருக்கவேண்டும்.
ஒவ்வொருமுறை குண்டு வீசிவிட்டு பாவ மன்னிப்பு கேட்பதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பாவம் செய்வதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்ள வழியுண்டா… அப்படி இருந்தால் இன்னும் உற்சாகத்தோடு தாக்க ஏதுவாக இருக்கும் என்று பாதிரியாருடன் ஒயின் அருந்தியபடியே ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல் சிரித்துப் பேசி மகிழ்வதாக ஒரு காட்சி எடுத்திருக்கவேண்டும். ஏனென்றால் அந்த அராஜகத்தைத்தான் அமெரிக்கா செய்துவருகிறது.
அடுத்ததாக தன்னை இந்தியன் என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறார் கமல். ஆனால், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுபோல் இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலேயே செயல்படுகிறார். தாலிபன், அல்கொய்தா தீவிரவாதம் பற்றிப் படம் எடுத்தால் தமிழக முஸ்லீம்களுக்கு ஏன் மனம் புண்படுகிறது என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், கடந்த இருபது முப்பது வருடங்களாகத் திரைப்படங்களில் இஸ்லாமியர் சித்திரிக்கப்பட்டுவரும் விதம் குறித்து சமூக அக்கறை உள்ள ஒரு படைப்பாளி சிந்தித்தாகவேண்டும். நான் உங்கள் நண்பன்தான். உங்களை நான் தீவிரவாதியாகச் சொல்லவில்லை என்ற சால்ஜாப்புகள் எல்லாம் செல்லுபடியாகாது. இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்தப் போக்கை இஸ்லாமியர் அல்லாதவர்களும்தான் எதிர்க்கிறார்கள். எனவே இது வெறும் மிகையான அரசியல் செயல்பாடு மட்டுமே அல்ல. நாம் சொல்வது சரியாக இருந்தால் மட்டும் போதாது. அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதையும் பார்க்கவேண்டும்.
தமிழக வஹாபிய முஸ்லீம்கள் இந்தப் படத்தை எதிர்த்துச் செய்த செயல்கள் அனைத்துமே கண்டிக்கத் தக்கவையே. ஆனால், அவர்கள் செய்த தவறுகள் கமல் செய்த அநியாயத்தை இல்லாமல் ஆக்கிவிடாதே. ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியர்களிடத்திலும் அல்கொய்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இருந்திருப்பார்களே. அதையும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா… ஏன் தமிழக சாதிப் பிரச்னையைப் பற்றிப் பேசவில்லை… ஏன் இலங்கைத் தமிழர் வேதனையைப் பற்றிப் படம் எடுக்கவில்லை… ஏன் இந்தியாவில் மலிந்திருக்கும் ஊழல் பற்றிப் படம் எடுக்கவில்லை என்றெல்லாம் கமலைப் பார்த்துக் கேட்க முடியாது. ஏனென்றால், தேவர் மகன், தெனாலி, இந்தியன் போன்ற காவியங்கள் மூலம் இதைப் பற்றியெல்லாம் அவர் ஏற்கெனவே பேசியாகிவிட்டது. எனவேதான், புதிய களம் தேடி ஆஃப்கானிஸ்தானில் குதித்திருக்கிறார்.
அதாகப்பட்டது, கமல்ஜி ஒரு இந்திய ராணுவ/உளவு வீரர். அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தரும் போர்வையில் நிஜாம் அகமது காஷ்மீரி என்னும் பெயரில் போகிறார். அங்கு அல்கொய்தாவினர் சில அமெரிக்க வீரர்களைக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். கமல் சார் அதி நவீன டிடெக்டர் கருவி மூலம் அமெரிக்க ராணுவத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்கிறார் (இந்தக் கருவியை ஒரு பாகிஸ்தானிய போதை மருந்து வியாபாரியின் பைக்குள்ள ரகசியமாக ஒளித்து வைத்திருப்பார்).
அமெரிக்க ராணுவம் வந்து தீவிரவாதிகளையும் மக்களையும் மூர்க்கத்தனமாக துவம்சம் செய்யும். அந்த ஆபரேஷன் முடிந்ததும் டிடெக்டர் கருவியை செயல் இழக்கச் செய்யும்படி தன் உதவியாளரிடம் கமல் சொல்லியிருப்பார். ஆனால், அதற்கு முன்பே பாகிஸ்தானியின் பையில் அது இருப்பதை அல்கொய்தாவினர் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த பாகிஸ்தானியை அடித்து கொல்வார்கள். நாம் செய்த செயலுக்கு நம் சகோதரர் (?) மாட்டிக்கொள்ள வேண்டிவந்துவிட்டதே என்று கமல் பதைபதைப்பார்.
அமெரிக்க ராணுவம் குண்டு மழைபொழிந்து ஆப்கானிஸ்தானிய அப்பாவிகளைக் கொல்லும்போதும் கலங்கவே செய்வார். அமெரிக்க ராணுவத்துக்கு உளவு வேலை பார்த்தபோது அவர்கள் வந்து தீவிரவாதிகளை மயிலிறகால் வருடி, பூச்செண்டால் அடித்துத் திருத்துவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ… இதை உமர் என்ற அல்கொய்தா தீவிரவாதி கதாபாத்திரம் மூலம் சொல்லவும் செய்வார். அதாவது அமெரிக்க ராணுவத்தினர் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள் என்று அந்தக் கதாபாத்திரம் சொல்லும்.
அந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் பலம் அதிகரித்ததும் தன்னுடைய உளவாளி வேடத்தைக் களைந்துவிட்டு, அல்கொய்தாவில் இருக்கும் பிற தீவிரவாதிகளைக் கொன்று தள்ளிவிட்டு, அமெரிக்காவுக்குப் போகிறார். வெறுமனே போகலை… கதக் நடனக் கலைஞர் வேடத்தில் நியூயார்க்கைக் காப்பாற்றுவதற்காகப் போகிறார்.
இந்தியாவில் இருக்கும் நியூக்ளியர் ஆன்காலஜி மாணவியான நிருபமா எப்படியாவது அமெரிக்காவில் பிஹெச்.டி. படிக்கவேண்டும் என்று துடிக்கறார். கதக் நடனக் கலைஞரான கமல் சார் (இப்போது அவருக்குப் பெயர் விஸ்வம்) பெண் தன்மை மிகுந்தவர், வயதானவர் என்பது எல்லாம் தெரிந்த பிறகும் அவரைத் திருமணம் செய்துகொண்டால் அமெரிக்கா செல்ல வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்பதால் அந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.
ஆனால், அமெரிக்கா போன இடத்தில் தன்னுடைய எஜமானரான (?) தீபக் என்பவருடன் ஸ்நேகம் ஏற்பட்டுவிடுகிறது. விஸ்வத்தை டைவர்ஸ் செய்துவிட்டு தீபக்குடன் வாழ முடிவெடுக்கிறார். அந்தத் திருமணமே பிஹெச்.டி. படிக்க அமெரிக்கா போகவேண்டும் என்பதற்காக செய்ததுதான். போதாத குறையாக கமல் சார் பெண் தன்மை மிகுந்தவராக, வயதானவராக வேறு இருக்கிறார். இவையே அவரை விவாகரத்து செய்வதற்குப் போதுமான காரணங்கள்தான். இருந்தும் கதை அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்பதற்காக கணவனுக்கு வேறு கள்ளத் தொடர்பு இருக்கிறதா என்று உளவு பார்க்க பீட்டர் என்பவரை நியமிக்கிறார் நிருபமா.
அந்த பீட்டர், விஸ்வத்தைப் பின் தொடர்ந்து வந்தபடியே இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்துவிடுகிறார். அவர்கள் அவரைக் கொன்றுவிடுகிறார்கள். ஆனால், பீட்டரின் டைரியில் நிருபமா பற்றியும் அவர் வேலை செய்யும் நிறுவனம் பற்றியும் தகவல் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவரான தீபக் தீவிரவாதிகளுடன் ஏற்கெனவே தொடர்பு உடையவர். எனவே, அவர்களுக்கு சந்தேகம் வருகிறது.
தீபக் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நிருபமாவையும் அவருடைய கணவன் விஸ்வத்தையும் தீவிரவாதிகளிடம் பிடித்துக்கொடுத்துவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். ஆனால், தீவிரவாதிகளோ நிருபமாவையும் விஸ்வத்தையும் பிடித்துவைத்துக் கொண்டு தீபக்கைக் கொன்றுவிடுகிறார்கள். இருவரைச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தகவலை தீவிரவாதிகளின் தலைவன் உமருக்குத் தெரிவிக்கிறார்கள். பிடிபட்டவனின் புகைப்படத்தை மின்னஞ்சலில் அனுப்பும்படிச் சொல்கிறார் உமர். அவர்களும் அனுப்புகிறார்கள். அதைப் பார்த்ததும் உமர் அதிர்ச்சியில் உறைகிறார்.
ஏனென்றால் பிடிபட்ட விஸ்வம் வேறு யாருமல்ல… இந்த உலகில் உயிருடன் இருப்பவர்களிலேயே அதி பயங்கரமான ரகசிய உளவாளி. அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தருவதற்காக இந்திய ரா அமைப்பினால் அனுப்பிவைக்கப்பட்டவர். உமர் தன் ஆட்களுடன் விஸ்வம் இருக்கும் இடத்துக்கு வருவதற்குள் விஸ்வம் தன்னைச் சிறைப்பிடித்தவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு தப்பித்துவிடுகிறார்.
இதை எப்படிச் செய்கிறார் என்று கேட்பவர்கள் துப்பாக்கி, அலெக்ஸ் பாண்டியன் பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், கதாநாயகனை வில்லன் கட்டிவைத்து அடித்தால் நாயகனோ அல்லது அவருடைய ஆதரவான ஏதாவது கதாபாத்திரமோ வில்லனைப் பார்த்து, கட்டை அவிழ்த்துவிட்டு அடிச்சுப் பாருடா என்று சவால் விடவேண்டும். வில்லனும் அப்படியே செய்வான். கட்டு அவிழ்ந்ததும் அடுத்தவிநாடியே கதாநாயகன் விஸ்வரூபம் எடுப்பார். இது தமிழ் சினிமாவின் இலக்கணம். இங்கும் அப்படியே கமல் விஸ்வரூபம் எடுக்கிறார். ஆனால். இந்த ட்விஸ்ட் இந்தப் படத்தில் முந்தைய படங்களைவிடச் சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது.
படத்தில் இந்த கதக் நடனக் கலைஞர் பகுதிதான் முதலில் வருகிறது. அதன் பிறகுதான் ஆஃப்கானிய காட்சிகள் ஃபிளாஷ்பேக்காக வருகின்றன. அது முடிந்ததும் கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. அதன்படி அல்கொய்தா தலைவன் உமர் நியூயார்க் நகரத்தை முப்பது வருடங்கள் புல்லு பூண்டு கூட முளைக்க முடியாத அளவுக்கு ஒரு அணு குண்டால் தகர்க்கத் திட்டமிடுகிறான். அது எப்படியென்றால், புறாக்களின் காலில் சீசியம் என்ற அணுக்கதிர் வீசும் தனிமத்தைக் கட்டிப் பறக்கவிடவேண்டும். அமெரிக்க ராணுவம் அந்த புறாக்களைத் தங்களுடைய கைகர் கவுண்ட் கருவியால் சோதித்துப் பார்த்துவிட்டு அல்கொய்தாவினர் வெத்துவேட்டு மிரட்டல்தான் விடுத்திருக்கிறார்கள் என்று அசால்டாக இருப்பார்கள். அந்த நேரத்தில் அதி பயங்கர அணு குண்டை வெடிக்க வைத்து நியூயார்க்கை நிர்மூலம் ஆக்கிவிடவேண்டும்.
இந்த ரகசிய திட்டத்தை அல்கொய்தாவுக்கு பயிற்சி கொடுத்த காலகட்டத்தில் கமலிடம் உமர் சொல்லியிருப்பார். அமெரிக்காவில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதைப் பார்த்து கமல் சுதாரித்துவிடுவார். ஏமனில் இருந்து அப்பாஸி என்பவன்தான் அந்த வெடி குண்டை வைக்கப் போகிறான் என்பதைத் தெரிந்துகொண்டு அவனுடைய இருப்பிடத்தைச் சுற்றி வளைத்து அவனைக் கொன்றும்விடுவார்கள். ஆனால், அவன் தயார்நிலையில் வைத்திருக்கும் வெடி குண்டை எப்படிச் செயல் இழக்க வைப்பது..? வெடி குண்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் செல்போனுக்கு யாராவது போன் செய்தால் அது வெடித்துவிடும். பாம் ஸ்குவாட் வந்து அதைச் செயல் இழக்க வைக்க ஐந்து நிமிடமாவது ஆகுமாம். அதாவது வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கத்தான் அந்த தீவிரவாதியையே சுற்றி வளைக்கிறார்கள்.
ஆனால், பாம் ஸ்குவாட் மட்டும் கடைசியில்தான் வருமாம். பச்சை ஒயரா… சிவப்பு ஒயரா… எதைக் கட் பண்ண? என்ற விஜயகாந்த படக் க்ளைமாக்ஸ் நினைவுக்கு வருகிறதா… கூல்… கமல் சார் விஜயகாந்தைவிட அறிவுஜீவி அல்லவா… க்ளைமாக்ஸில் புதுமையைப் புகுத்துகிறார். வெடிகுண்டைச் செயல் இழக்கவைக்க என்ன செய்வதென்று யாருக்கும் தெரியாமல் தவிக்கிறார்கள். க்ளைமாக்ஸ் பரபரப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, நாயகி நிருபமா என்ன செய்கிறார் என்றால், சுமார் ஒன்றிலிருந்து இரண்டு அடி மட்டுமே உயரம் (ஆழம்) கொண்ட மைக்ரோவேவ் ஓவனை எடுத்துவந்து சுமார் மூன்று அடிக்கு மேல் உயரமாக இருக்கும் அந்த வெடிகுண்டுக்கு மேலாக ஃபாரடே ஷீல்டுபோல் கவிழ்க்கிறார். ஸ்பிரிங் பாம் போலிருக்கிறது. அப்படியே அதற்குள் அடங்கிவிடுகிறது. பிரச்னை அதோடு தீர்ந்தது. சிரிக்காதீர்கள். நான் ஜோக் அடிக்கவில்லை. வசூலில் உலகையே புரட்டிப்போடும் படத்தின் க்ளைமாக்ஸ் இதுதான். யதார்த்தம் கரை புரண்டு ஓடுகிறதா… கால்களை ஸீட்டின் மேல் வைத்துக்கொள்ளுங்கள்.
இதைவிடப் பெரிய காமெடி என்னவென்றால், அமெரிக்காவில் அணுகுண்டு வைக்கப் போகிறார்கள் என்பது அமெரிக்க உளவுத்துறைக்கு முன்பாக இந்திய ரா ஏஜெண்டான கமல்சாருக்குத் தெரிந்த உடனேயே ஹிலாரி கிளிண்டன் இந்திய பிரதமருக்கு போன் போட்டு பாராட்டிவிடுகிறார். இந்திய பிரதமர் உடனே கமல் சாருக்கு போன்போட்டு பாராட்டிவிடுகிறார். இவையெல்லாமே அணுகுண்டைக் கண்டுபிடித்து பெரிய மொறத்தைப் போட்டு மூடிக் காப்பாற்றுவதற்கு முன்பாகவே இந்த அனைத்து பாராட்டுகளும் வந்துகுவிந்துவிடுகின்றன.
அப்படியாக நியூ யார்க் நகரம் அதாவது உலகமே காப்பாற்றப்பட்டுவிடுகிறது. இனி மேல் பாலாறும் தேனாறும் உலகில் ஓடும் என்று நாம் சந்தோஷமாக ஸீட்டை விட்டு எழுந்திருக்கும்போது, கமல் சார் இன்னொரு ட்விஸ்ட் வைக்கிறார். அதாவது தீவிரவாத உமர் அல்லது யோக்கியரான தான் என்ற இருவரில் யாராவது ஒருவர் இறந்தால்தான் இந்த போராட்டம் முடிவுக்கு வரும்; அதுவரை இந்த உலகம் நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார். அடுத்த விஸ்வரூபம் இந்தியாவில் என்ற எச்சரிக்கை வேறுவிடப்படுகிறது.
இந்தப் படத்தில் கெட்ட முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் நல்ல முஸ்லீம்களும் கோடைக்கால மேகம் போல் ஆங்காங்கே தென்படுகிறார்கள். அமெரிக்க ராணுவத்தில்கூட சில முக்கிய பதவிகளில் இருப்பது முஸ்லீம்கள்தான். அப்பறம் இந்திய ஜேம்ஸ்பாண்ட் கமல் சார் இந்த அவதாரத்தில் ஒரு முஸ்லீமாகத்தான் நடிக்கவும் செய்திருக்கிறார். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடும் ஒரு அப்பாவிப் பெண் மேல் அமெரிக்க வீரர் தவறுதலாகச் சுட்டுவிட்டதும் சே தப்பு பண்ணிட்டோமே என்று வருந்துகிறார். ஆஃப்கானியர்களுக்கு மருத்துவ உதவி செய்வது கிளாரா என்ற அயல்நாட்டினர்தான்.
அல்கொய்தாவினர் தொழுகை நடத்தி முடித்ததும் ஒன்று யாரையாவது தூக்கில் போடுகிறார்கள். அல்லது கழுத்தை அறுக்கிறார்கள். அப்புறம் முஸ்லீம் தீவிரவாதம் என்பது உலகம் முழுவதும் பரவியிருப்பதை விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிராமணர்கள் சிக்கன் சாப்பிடுவதுண்டு என்பதை, பாப்பாத்தி சிக்கனை நீ டேஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லும்மா என்ற வசனத்தின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று வள்ளுவர் சொன்னதை நக்கலடிக்கிறார். ஒரு அற்ப துணைக்கதாபாத்திரம் இறந்துபோய்விட்டிருக்கும் நிலையில் அவர் செய்த ஒரு தவறைப் பற்றிப் பேசும்போது அதுதான் அவர் செத்துட்டாரே. விட்டுவிடுங்கள் என்று நிருபமா சொல்ல, அப்படியானால், ஹிட்லர் கூட இறந்துவிட்டார். அவர் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்துவிடமுடியுமா என்று தன் அசட்டு அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்துகிறார் (நல்லவேளையாக இது போன்றவை இந்தப் படத்தில் குறைவு)
கமல் உலக அரசியலைப் பற்றிக் கொஞ்சமாவது படித்திருந்தார் என்றால், வெளிப்படையான இஸ்லாமிய தீவிரவாதத்தைவிட தந்திரமான சர்ச் தீவிரவாதமே (அமெரிக்க – ஐரோப்பிய) இந்த உலகுக்கு மிகப் பெரிய அபாயம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்.
காலனிய ஆதிக்க காலத்தில் ஒவ்வொரு நாட்டையும் பிடித்து அங்கு பிரிவினைவாதக் கருத்துகளை விதைத்து மக்களை சண்டையிட்டு மடிய வைத்தார்கள். இப்போது உலகமயமாக்கல் காலகட்டத்திலும் அதே திருப்பணி இன்னும் தந்திரமாக இன்னும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பிரிவினைவாதக் குழுக்களையும் அதிருப்தி குழுக்களையும் சிறுபான்மையினரையும் கருத்தியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தூண்டிவிடுவது ஒருபக்கம். இன்னொரு பக்கத்தில் ஒவ்வொரு அரசையும் இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்று என்ற போர்வையில் ராணுவமயமாக்க வைப்பது… இப்படியாக சதுரங்கத்தின் இரண்டு பக்கத்திலும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றுக்கான வலுவான களத்தை சர்ச் உருவாக்கித் தருகிறது.
ஹோட்டல் ருவாண்டா என்றொரு படம். ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து பெரும் ரத்தக் களறியை ஏற்படுத்தியது அமெரிக்க ஐரோப்பிய ஐநா கூட்டமைப்புகள்தான். ஆனால், அந்தப் படத்தில் முழுக்க முழுக்க அவர்கள் ரட்சகர்களாகவே காட்சிப்படுத்தப்படுவார்கள். வியட்நாமை அடியோடு நிர்மூலமாக்கிய அமெரிக்கா, அங்கு ஏதோ ஒரு பழங்குடியினர் ஒரு பாரம்பரிய விழாவுக்கு ஒரு யானையைக் கொண்டுவரும் படி கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பழங்குடிகளின் நம்பிக்கையைக் காப்பதுபோல ஆபரேஷன் டம்போ டிராப் என்றொரு படம்.
யதார்த்தத்தில் ஒவ்வொரு தேசத்தையும் அடியோடு அழித்துவிட்டு கதைகளிலும் திரைப்படங்களிலும் தங்களை ரட்சகர் போல சித்திரித்துக் கொள்வதில் அமெரிக்கர்களுக்கு நிகர் அவர்களே. இந்தப் படத்தின்மூலம் அமெரிக்கர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடித்திருக்கிறார் கமல்.
இந்தியாவில் இந்தப் படம் இந்து – முஸ்லீம் இடைவெளியை அதிகரிக்கும் என்பதை யூகித்திருக்கவேண்டாமா..? 100 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு தேசம் ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்று திரண்டுவிட்டால் அதை நம்மால் வெற்றிகொள்ள முடியாது என்பதற்காக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் நாசகாரக் கும்பலுக்கு கைப்பாவையாகச் செயல்படுகிறோமே என்ற புரிதல் இருக்கவேண்டாமா?
இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் இந்தியனாக ஒருவர் செய்ய வேண்டியது என்ற தெளிவு இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் நமக்கு மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது.  பிரிட்டிஷார் நம் நாட்டை அடிமைப்படுத்தியபோது இந்துக்களும் முஸ்லீம்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடியிருக்கிறார்கள். அதுபற்றி ஒரு படம் கூட நம்மால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போர், நாஜிக் கொடுமைகள் என ஐரோப்பிய அமெரிக்க திரைப்படங்கள் தங்களுடைய வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை நேர்மையாக, கலைஅழகுடன் பதியவைத்திருக்கின்றன. வலிமை மிகுந்த ஒரு எதிரியை எளிய மக்கள் கூட்டம் எதிர்க்கும் போது பின்பற்ற வேண்டிய ஆக்கபூர்வமான போராட்டமுறை எது என உலகுக்கே கற்றுத் தந்தவர்கள் நாம். ஆனால், அதைப் பற்றி ஒரு படம்கூட நம்மால் இதுவரை உருப்படியாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நம்முடைய கலையை, வரலாற்றைப் பதிவு செய்வதை விட்டுவிட்டு அடுத்தவரின் தாளத்துக்கு ஏன் ஆடவேண்டும்?
கலை சுதந்தரம் என்றால் என்ன..? சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு அடியாளாக இருக்கும் உரிமையா அது? சுதந்தரம் பெற்ற பிறகு நாம் நமது அதிகார – அரச வர்க்கங்களின் நிர்வாகத் திறனின்மை காரணமாக பல்வேறு அவமானங்களுக்கும் அதிருப்திகளுக்கும் ஆளாகி வருகிறோம். மதவாத, சாதிய சக்திகள் இந்த அதிருப்தியைத் தங்கள் அரசியல் சார்ந்து பெரிதுபடுத்திவருகின்றன. இன்றைய நிலையில் ஓர் இந்தியக் கலைஞன்  செய்ய வேண்டிய காரியம், ஒற்றுமையை வலியுறுத்துவதுதானே. தொழில்நுட்பத் திறமை, கலைத் திறமை இவையெல்லாமே இருந்தும் அரசியல் தெளிவு இல்லையென்றால் என்ன பயன்?
கமல் படம் எடுக்கக் கற்றுக் கொண்டுவிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நல்ல படம் எடுக்க எப்போது கற்றுக் கொள்வார்?

கருத்துகள் இல்லை: