வியாழன், 24 ஜனவரி, 2013

சிரிப்பு தான் வருகிறது! அலெக்ஸ் பாண்டியன் - சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

அலெக்ஸ்பாண்டியன் பலவித புரமோஷன்களால் ரசிகர்களிடையே ஏகத்தும் எதிர்பார்ப்பை கிளப்பியது . டிரெய்லரின் மூலம் அலெக்ஸ்பாண்டியன் கமர்ஷியல் மசாலா படம் என்பதை உணர்ந்த ரசிகர்கள் டிரெய்லரே இப்படி இருந்தால் படம் எப்படியிருக்கும் என்ற அதிர்ச்சியுடன் தான் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். சமீபகாலமாக தெலுங்கு ரசிகர்களை குறிவைத்திருக்கும் கார்த்தி, தெலுங்கு படங்களையே மிஞ்சும் அளவிற்கு அலெக்ஸ்பாண்டியனில் அசத்தியிருக்கிறார். படம் துவங்கிய முதல் பத்து நிமிடங்கள் ஒரே ஆக்‌ஷன் பிளாக் காட்சிகள் தான். கார்த்தி அடிக்கும் அடியில் அடியாட்கள் காற்றிலேயே பறந்து கொண்டிருக்க, அனுஷ்காவும் கார்த்தியும் ரயிலின் மேல் ஓடி பக்கா ஆக்‌ஷன் காட்சியை ரசிகர்களுக்கு எவ்வித தடங்கலுமின்றி கொடுக்கிறார்கள். அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை கார்த்தி எப்படி குறுக்கு வழியில் சென்று பிடிக்கிறார் என்பது கடைசி வரை உடைக்கப்படாத சஸ்பென்ஸ். ரயில் டிக்கெட் விலையையும் ஏற்றிவிட்ட சமயத்தில் ஏன் இந்த ரயில் சேஸிங் சண்டை என்ற கேள்விக்கு பதிலாக துவங்குகிறது கதை?

அமெரிக்காவிலேயே தடை செய்யப்பட்ட ஒரு மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்ய முயற்சி செய்கிறது வில்லன் கூட்டணி. இந்த தேசத் துரோகத்திற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரது மகளை கடத்தி சம்மதம் வாங்கி விடலாம் என்று திட்டம் தீட்டுகிறது வில்லன் கூட்டணி. திட்டத்தை செயல்படுத்த ஜெயிலிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறவர் அலெக்ஸ் பாண்டியனான கார்த்தி. வில்லன்கள் திட்டத்தின்படி கார்த்தி அனுஷ்காவை கடத்தும்போது தான் அந்த ரயில் சேஸிங் காட்சி. ஆக்‌ஷன் பிளாக் சண்டைக் காட்சியில் சுய நினைவை இழக்கும் அனுஷ்காவை காப்பாற்றவும், சில நாட்களுக்கு தலைமறைவாக இருக்கவும் கார்த்தி செல்லும் இடம் சந்தானத்தின் வீடு. 


சந்தானத்தின் மூன்று தங்கைகளிடமும் குறும்பு செய்யும் கார்த்தியிடம் அடி வாங்கியும், பஞ்ச் டையலாக் பேசியும் ரசிகர்களை  ஆசுவாசப்படுத்துகிறார்  சந்தானம். காமெடியுடன் நகரும் கதையில் லோக்கல் ரவுடிகள் அறிமுகமாகி மறுபடியும் விண்வெளி நிகழ்ச்சி(கார்த்தி அடிக்கும் அடியில் பறப்பது தான்) நடத்துகிறார்கள். பழைய நினைவுகளை திரும்பப் பெறும் அனுஷ்கா, கார்த்தியிடம் ‘நீங்க மிகப்பெரிய தவறுகளை செய்கிறீர்கள் அலெக்ஸ்பாண்டியன்’ என்ற தொணியில் உண்மையை விளக்குகிறார். ஏதோ பதவி போட்டி என நினைத்தால் நாட்டிற்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்கிறார்களா? என்ற அதிர்ச்சியில் திருந்திவிடுகிறார் கார்த்தி. வில்லன்களும் துரத்த, முதலமைச்சர் ஆட்களும் துரத்த ஒளிந்து ஓடும் கார்த்தி, அனுஷ்கா கடைசியில் முதலமைச்சரின் உதவியாளரிடம் தஞ்சம் அடைகிறார்கள். மிகப்பெரிய திருப்புமுனையாக!உதவியாளரும் வில்லன் கூட்டணியில் ஒருவராக இருக்க அவர்களிடமிருந்து அனுஷ்காவை காப்பாற்றி, அவர்களை அழித்து நாட்டை எப்படி கார்த்தி காப்பாற்றுகிறார் என்பது தான் கிளைமேக்ஸ். 


நாம் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா படத்தை பார்த்து கைகொட்டி சிரித்திருக்கிறோம். பாலகிருஷ்ணாவே கைகொட்டி சிரிப்பார் என்றால் அது அலெக்ஸ்பாண்டியன் தான். படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென நாம் வந்திருப்பது சிறுத்தையா? சகுனியா? அலெக்ஸ்பாண்டியனா? என்று டிக்கெட்டை எடுத்து பார்க்கத் தோன்றுகிறது. ‘டீசல் விக்குற விலைல இவ்ளோ கார்ல ஏண்டா துரத்திகிட்டு வர்றீங்க’ என்று சந்தானம் கேட்கும் போது ‘ நம்ம மைண்ட் வாய்ஸ் சந்தானத்திற்கும் கேட்டுவிட்டதோ?’ என்று ரசிகர்கள் திடுக்கிடுவது உறுதி. ’சிக்ஸ்பேக் இருக்கோ இல்லையோ நல்ல பிளாஷ்பேக்  வெச்சிருக்கடா’ என்பன போன்ற சந்தானத்தின் வசனங்கள் இருக்கையில் உட்கார வைக்கிறது. 


கமெர்ஷியல் படத்தில் லாஜிக் எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தால், இயக்குனர் பொறுப்பாக முடியாது. சந்தானம் செய்யும் காமெடிகளையெல்லாம் காணாமல் போகச் செய்கிறார் கார்த்தி. பாலத்திலிருந்து ரயில் மீது குதிப்பதும், ரயிலிலிருந்து நீரில் குதிப்பதும், நூறு கார்களில் வரும் அடியாட்களை துவம்சம் செய்வதும், ஆயிரம் குண்டுகளில் ஒரு குண்டு கூட கார்த்தி மீதும் அனுஷ்கா மீதும் படாததையும் பார்க்கும் போது விரல் வைக்க மூக்கு தான் இல்லை. கமர்ஷியல் படம் தான் என்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய முதலமைச்சர் மகளுக்காக அந்த காண்டிராக்டில் கையெழுத்து போடுவது நெருடல். 

அலெக்ஸ் பாண்டியன் - சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சிரிப்பு தான் வருகிறது http://cinema.nakkheeran.in

1 கருத்து:

ReeR சொன்னது…

நல்ல விமர்சனம்...
நன்றி. www.padugai.com Thanks