வியாழன், 24 ஜனவரி, 2013

விஸ்வரூபம் தமிழக அரசு திடீர் தடை


visvarupamசென்னை: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால், அந்த படத்தை வெளியிட கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் போட்டு காட்டினார். படத்தை பார்த்த அமைப்பினர் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

மேலும் விஸ்வரூபம் படம் மிலாதுநபி விழாவான 25ம் தேதி திரையிடப் படுகிறது. இது முஸ்லிம் களை வருத்தமடைய செய்துள்ளது. அதனால், அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். மேலும் சில முஸ்லிம் அமைப்புகள் உள்துறை செயலாளர் ராஜ கோபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தன.

அந்த மனு மீது விசாரணை நடத்தும்படி டிஜிபிக்கு உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட எஸ்பிகளிடம் டிஜிபி விளக்கம் கேட்டார். மாவட்ட எஸ்பிகளும், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதனால், படத்தை அடுத்த 15 நாட்களுக்கு திரையரங்கில் வெளி யிட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை கொடுத்தனர்.

இதைதொடர்ந்து திரையரங்கில் அடுத்த 15 நாட்களுக்கு விஸ்வரூபம் படத்தை வெளியிட வேண்டாம். அந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என திரையரங்க உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் சார்பில் நேற்று அறிக்கை அனுப்பப்பட்டது. கமல் அலுவலகம் முற்றுகை: முன்னதாக, தேசிய லீக் கட்சி தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடக்கூடாது என கோஷமிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முற்றுகையிட்ட 30 பேரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: