வியாழன், 24 ஜனவரி, 2013

வீரமணி For விஸ்வரூபம்! இஸ்லாமிய மக்களுக்கு தி.க. தலைவர் வேண்டுகோள்

Viruvirupu
“பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம் இது”
“பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம் இது”
விஸ்வரூபம் பட பிரச்சனையில் இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சனையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவராலும் ‘உலக நாயகன்’ என்றழைக்கப்படும் பெருமைமிகு நடிப்புத்துறை கலைஞர் கமலஹாசன், தமிழ் நாட்டின் அரிய கலைச் செல்வம். சிறுவயதிலிருந்து இன்றுவரை வளர்ந்துள்ள ஒப்பற்ற கலைத்துறை மாற்றுச் சிந்தனையாளர், மனிதநேயர், பகுத்தறிவாளர்.
அவர் பல வகையில் புதுமையைப் புகுத்த எண்ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமையையே கெட்டியாகப் பிடித்துள்ள நம் நாட்டவருக்கு இயல்பேயாகும்.
அவரது ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்: இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்து கொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.
அடிப்படையில் நண்பர் கமலஹாசன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார் மீதும் வெறுப்பு கொள்பவர் அல்ல.
எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர்.
இன்று அவர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக் கூடாது.
பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம், பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம். எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்பதோடு, சமூகத்திலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு இடமின்றி நடந்து கொள்வதே அவசர அவசியம். இது தான் இரு தரப்பினருக்கும் நமது அன்பு வேண்டுகோள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: