வியாழன், 6 செப்டம்பர், 2012

Kerala: தமிழர்களுக்கு நிலம் கொடுக்கக் கூடாது."மூணாறு,தேவிகுளம்

தமிழர்கள் அடர்த்தியாய் வாழும் கேரள பகுதிகளிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்க மலையாள அரசு (கேரள அரசு) முடிவு செய்திருக்கிறது. அதற்கான செயல் திட்டத்தில் குதித்திருக்கிறார்கள் மலையாள அதிகாரிகள்.
இதற்கிடையே, "செந்நீர்' எனும் தலைப்பில் சமூக சிந்தனையாளரும் எழுத்தாளருமான அன்வர் பாலசிங்கம் எழுதி "கொற்றவை' பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட "செந்நீர்' (மூணாறு மலைச்சரிவுகளின் கொடுங்கதை) என்ற நூல், கேரள அரசை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.
காரணம், தனது நூலின் முன்னுரையில், ""தேவி குளமும் பீர்மேடும் மூணாறும் முல்லைப்பெரியாறும் வழிவழியாய் தமிழ்க்குடியின் அசையாச் சொத்துக்கள். விட்டுக்கொடுத்து விட்டோம். விட்டுத்தான் கொடுத் திருக்கிறோம். யாருக்கும் எழுதிக் கொடுத்துவிட வில்லை. பல்கிப் பெருகியிருக்கும் எங்கள் சந்ததி களுக்கு தங்கள் முன்னோர்களின் சொந்த பூமியிலே பந்தம் இருக்கிறது. அதனால்தான் முல்லைப் பெரியாறை மீட்டெடுக்க லட்சம் பேர் திரண்டார்கள், திரளுவார்கள்... திரண்டே தீருவார்கள். இது அவர்களின் உரிமை. அதுவும் பூர்வீக உரிமை. மூணாறு என்பது சுற்றுலாத்தலமல்ல. அது எம் முன்னோர்களின் நினைவிடம். தேவிகுள மும் பீர்மேடும் முல்லைப் பெரியாறும் அவ்வாறே தான்'' என்று குறிப்பிட்டி ருக்கிறார் அன்வர் பாலசிங்கம்.
இந்த வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்கள் மூணாறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த போஸ் டர்களால் டென்சனான மலையாள போலீஸ் அதையெல்லாம் கிழித்தெறிந்ததுடன் மூணாறு, பீர்மேடு நகரங்களில் தமிழர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் தடை விதித்துக் கொண்டிருக்கிறது.


இது பற்றி எழுத்தாளர் அன்வர் பால சிங்கத்திடம் பேசியபோது,’’""கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள 4 தாலுக்காக்களில் தேவிகுளம் தாலுக்காவும் பீர்மேடு தாலுக்காவும் பெரியது. தேவிகுளம் தாலுக்காவில் அடங்கியுள்ளது மூணாறு நகரம். இந்த 2 தாலுக்காவிலும் தமிழர்கள்தான் பெரும்பான்மையினர். எங்கெல்லாம் தமிழர்கள் அடர்த்தியாக இருக்கிறார்களோ அவர்களை வெளியேற்றுவதுங்கிற முடிவில் இருக்கிறது கேரள அரசு. தமிழர்களை துரத்தியடிக்க வேண்டுமெனில் மலையாளிகள் கையாளுகிற ஒரு டெக்னிக்... சரணாலயம் அமைப்பதுதான். இப்படித்தான் மூணாறு - உடுமலைப்பேட்டை போகும் வழியில் அங்கிருந்த தமிழர்களை அப்புறப்படுத்த 1984-லேயே சின்னாறு இந்திராகாந்தி தேசிய சரணாலயம் என்று அறிவித்து அப்பகுதியிலிருந்த தமிழர்களை விரட்டியடித்தனர். இப்போது அதே டெக்னிக்கை பயன்படுத்தி தற்போது நீலக்குறிஞ்சி-வட்டவடை கோவிலூர் பகுதிகளை இணைத்து நீலக்குறிஞ்சி சரணாலயம், போடிமெட்டு-சாந்தம்பாறை இடைப் பட்ட பகுதிகளை இணைத்து மதிகெட்டான்சோலை சரணாலயம், காந்தலூர்-குண்டலைக்கு இடைப்பட்ட பகுதிகளை இணைத்து பாம்பாடும் சோலை சரணாலயம் என 3 சரணாலயங்களை அமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சரணாலயம் அமைய உள்ள பகுதிகளில் தமிழர்கள்தான் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் காலம் காலமாக தமிழர்கள் ஏலக்காய் மற்றும் காய்-கனி பயிரிட்டு விவசாயம் செய்துவருகின்றனர்.

சரணாலயம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலே அந்த பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்கிற வகைக்குள் அடங்கி விடும். அதன்பிறகு சரணாலயம் அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அரசு அதிகாரிகளால் ஆர்ஜிதம் செய்யப்படும். அப்படி ஆர்ஜிதம் செய்வதற்காக அங்குள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில்தான் தற்போது கேரள அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த சரணாலயங்கள் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகளை துவக்கி யிருக்கிறார்கள். இந்த பணி முழு வீச்சில் துவங்கும் போது அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்து''’ என்கிறார்.

இந்த சூழலில், தமிழர் விரோத போக்கை கையாளும் கேரள அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் விவசாய சங்கத்தினரும் மூணாறில் பேரணியை நடத்தினர். அதில் பலத்த ஆவேசக் குரல்கள் எதிரொலித்தன. இதுகுறித்து இடுக்கி மாவட்ட விவசாய சங்க தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது,’""இடுக்கி மாவட்டத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள்தான். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உரிமைகளை விட்டுக் கொடுத்ததினால் இன்றைக்கு கேரளாவில் வாழக்கூடிய தமிழர்கள், மலையாளி களிடம் அகதிகளாக இருக்கிறார்கள். இடுக்கிக்கு வந்த முதல்வர் உம்மன்சாண்டி மலையாளிகளுக்கு மட்டும் வாழும் உரிமைக்கான நிலப்பட்டாக்களை கொடுத்துவிட்டு, தமிழர்களுக்கு கிடையாது என கூறிவிட்டுப் போய்விட்டார்.

நிலப் பட்டாக்களும் வீட்டடி மனைப் பட்டாக்களும் தமிழர்களுக்கு கொடுத்துவிட்டால் வாழும் உரிமை யை பெறும் அவர்கள், முல்லைப் பெரி யாறு விவ காரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசி வருவது போல.... எதிர் காலத்தில் "இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணை' என குரல் கொடுப்பார்கள் என்று ஒரு செயல் திட்டத்தை வகுத்துக்கொண்டதினால் தமிழர்களுக்கு வாழும் உரிமையை தர மறுக்கிறார் உம்மன்சாண்டி. மலையாள அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்''’’என்கிறார் ஆவேசமாக.

விடுதலை சிறுத்தைகளின் இடுக்கி மாவட்ட செயலாளர் ஜெயபால், ""தமிழர்களை அப்புறப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் சி.பி.எம். கட்சியின் மூணாறு எம்.எல்.ஏ. ராஜேந் திரன், "குடியிருப்பு பகுதிகளிலிருந்து தமிழர்கள் காலி செய்ய வேண்டும்' என மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கேரள தமிழர்களின் வாழ்வியல் ஆய்வாளரான தமிழர் அன்வர் பாலசிங்கம், செந்நீர் எனும் நூலை எழுதி சமீபத்தில் ரிலீஸ் செய்தார். அந்த விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டு இடுக்கி திரும்பினேன். அந்த புத்தகம் தொடர்பான போஸ்டர்கள் மூணாறு முழுக்க ஒட்டப் பட்டிருந்தது. அதையெல்லாம் போலீஸார் கிழித் தெறிந்தனர். இந்த சூழலில், எங்கள் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பேரணிக்கு அனுமதி கேட் டோம். ஆனால், மூணாறு போலீஸார் "தமிழக தலைவர் களைப் பற்றியோ, தமிழர்களுக்கு ஆதரவாகவோ பேசக் கூடாது. முழக்கங்கள் போடக்கூடாது. மலையாளத்தில் தான் பேச வேண்டும்' என்றார்கள். இப்படி ஒரு அனு மதி தேவையில்லை என்று கூறிவிட்டோம். இதனைத் தொடர்ந்து, தமிழர்கள் பொதுக்கூட்டம் போடவும் பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி, தமிழர்கள் தமிழில் பேசவும் தடை கொண்டுவரப் படலாம்''’ என்கிறார் ஆக்ரோஷமாக.

எம்.எல்.ஏ.ராஜேந்திரனிடம் பேசியபோது, ""குடியிருப்புவாசிகள் யாரையும் நான் காலி செய்யச் சொல்லவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமையோடு வாழ் கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே தலித் பஞ்சாயத்து தலைவரையே வெட்டி கொன்ற நாடாச்சே தமிழகம். இப்பவும் மேல் ஜாதியிடம் கீழ் ஜாதி கையைக்கட்டிக் கொண்டும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும்தான் தமிழகத்தில் போக முடிகிறது. ஆனா, இங்கு அப்படி இல்லை'' என்றார். மேலும், தமிழர்களை இழிவு படுத்துகிறவிதமாக மலையாளி களை உயர்த்தியே பேசினார் ராஜேந்திரன்.

இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.மணியை தொடர்புகொண்டு பேசியபோது,’’ ""தற்போதைய சி.பி.எம்.எம்.எல்.ஏ. ராஜேந் திரன் எப்போதும் தமிழர்களை தரக்குறைவாக பேசு வதையே வழக்கமாக வைத்திருப்பவர். தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை தமிழர் கள் இப்போதுதான் உணரத் துவங்கியிருக்கிறார்கள். தமிழர்களின் வாழும் உரிமைக்காக அவர்களுக்கு வீடு மற்றும் நிலப் பட்டாக்களை பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்''’என்கிறார்.



இதுபற்றி இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரெவின்யூ டிபார்ட்மெண்டில் பணிபுரியும் தமிழ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது,’""தமிழக எழுத்தாளர் ஒருவர் செந்நீர் என்கிற புத்தகத்தை எழுதியிருக் கிறார். அதில் மூணாறும் முல்லைப்பெரியாறும் தேவிகுளமும் பீர்மேடும் தமிழர்களின் சொந்த பூமி என்பதை வரலாற்று நிகழ்வாக நாவல் பாணியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தை கைப்பற்றிய மூணாறு பகுதி உளவுத்துறை அதிகாரி சுப்ரமணியம், அதை மாநில உளவுத்துறை அதிகாரி அபுபக்க ருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதையடுத்த நான்காவது நாள் புத்தகத்தை எழுதியவர் மூணாறில் இருந்தால் கைது செய்யுங்கள் என உத்தரவு போடப்பட்டது. அந்த உத்தரவை ஏற்று, மூணாறு முழுக்க லாட்ஜ்களிலும் ரெசார்ட்டுகளிலும் தேடி அலைந்தது மூணாறு போலீஸ். ஆனா, அவர் மூணாறில் இல்லை. இந்தச் சூழலில், உளவுத்துறை அதிகாரி அபுபக்கர் ஒரு ரிப்போர்ட்டை அரசுக்கு கொடுக்கிறார். அதில், "மூணாறு உள்ளிட்ட தேவிகுளம் தாலுக்காவில் தமிழர்களுக்கு நிலம் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் முல்லைப்பெரியாறு போல மூணாறும் சென்ஸிட்டிவ் இஷ்யூ வாக மாறிவிடுகிற அபாயம் ஏற்படும். மூணாறிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை கேரள அரசு இனி நம்பக்கூடாது. சரணாலயங் களுக்காக அரசாங்கம் கையகப் படுத்தும் நிலங்களை விரைந்து கையகப்படுத்த வேண்டும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் கேரள அரசு சீரியஸாக இருக்கிறது. தமிழர்களை கேரளாவிலிருந்து அப்புறப்படுத்த இதை நீண்டகால செயல்திட்டமாக கையிலெடுத்திருக்கிறது அரசு''’’என்றார்.

இதே நேரத்தில் எழுத்தாளர் அன்வர் பாலசிங்கத்தை மொழிவழி பிரிவினைவாதி என்று பிரகடனப்படுத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறு மூணாறு போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளது மாநில காவல்துறை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’""என்னை பிரிவினைவாதி என்று முத்திரை குத்தி கைது செய்ய துடிக்கிறது மலையாள அரசு. தமிழர்களுக்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். அதற்காக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தாலும் அஞ்சப் போவதில்லை''’’என்கிறார் பாலசிங்கம்.

போராளி பாலசிங்கத்துக்கு இன உணர்வுள்ள தமிழர்கள் துணையாக இருப்பார்கள்.

-ஆர்.இளையசெல்வன், சக்தி
thanks nakkeeran +sheik Mohamed ,thiruvananthapuram

2 கருத்துகள்:

Vadivel சொன்னது…

"Anwar balasingam avarkalukku epodum thunaiyaaga nirpen"- Valvtithurai VADIVEL. cell:9345905733

Vadivel சொன்னது…

"Anwar balasingam avarkalukku epodhum thunaiyaaga nirpen"- Valvetithurai VADIVEL. cell:9345905733