வெள்ளி, 7 செப்டம்பர், 2012

உச்ச நீதிமன்றம்: காவிரியில் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டீர்கள்?

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 "காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசை எதித்து தமிழக அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பல ஆண்டுகளாக நடத்தாமல் இருக்கும் காவிர் நதிநீர் ஆணையக் கூட்டத்தை நடத்தக் கோரி மேலும் ஒரு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதையடுத்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது. இதற்கிடையே கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தும், கபினி அணை நிறைந்தும் அம்மாநில அரசு மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.
இதையடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணையைத் திறக்கும் வகையில் 2 டிஎம்சி தண்ணீரை தினந்தோறும் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனு நீதிபதிகள் ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் மற்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் கடுமையாக விவாதித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரியில் பிவிலிகுண்டு வரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டது என்பதற்கான விளக்கத்தை வரும் திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: