சனி, 8 செப்டம்பர், 2012

போதிதர்மர்: நீங்கள் என்பது உங்கள் அனுபவமே

போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.
எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.
குய் நாட்டின் Zhu Jiang ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் Ghuang Cho எனும் நகருக்கு போதிதர்மரின் கப்பல் வருகிறது என்று தகவலறிந்து, அவரை வரவேற்க குய் நாட்டு அரசனும், க்ஷியாங் ஆங் (Xiang Ang) நாட்டு மன்னனும் காவலர்கள், சுமைதூக்கிகள், புத்த பிக்குகள் அடங்கிய பெரிய குழுவுடன் அத்துறைமுகம் நோக்கிச் சென்றனர்.
போதிதர்மர் தனது சீடர்கள் புடைசூழ, பௌத்த புனித நூல்கள் நிரம்பிய பெரும் பைகளைச் சுமக்கும் அடிமைகளுடன் மிகப்பெரிய குழுவாக இந்தியாவில் இருந்து பெரிய கப்பலில் வருவார் என எதிர்பார்த்துத்தான் இப்பேற்பட்ட படையை ஏற்பாடு செய்திருந்தனர் மன்னர்கள். ஏனென்றால் அதற்கு முன் சீனா வரும் பிக்குகள் அனைவரும் அப்படித்தான் வந்திறங்கியிருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே ஒரு கப்பலும் துறைமுகம் வந்து நங்கூரமிட்டது. அதிலிருந்து பெரும் ஜனக்கூட்டம் ஏதும் இறங்கவில்லை. ஒருசிலர் மட்டும் இறங்கினர். அவர்களும் பார்ப்பதற்கு வியாபாரிகளைப்போல் தெரிந்தனர். மன்னர்களீன் வீரர்கள் சென்று அவர்களிடம் போதிதர்மரைப் பற்றி விசாரித்தனர்.
‘ஓ! போதிதர்மரா? அதோ!’ அவர்கள் காட்டிய திசையில் கையில் கம்பும் முதுகில் ஒரு சிறு மூட்டையுமாக பரதேசியைப் போன்ற ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இவரா? தன்னந்தனியே வந்திருக்கும் இவரா போதிதர்மர்!
‘ஐயா, தாங்கள் தான் பல்லவ நாட்டில் இருந்து வரும் பிரபல புத்த பிக்கு போதிதர்மரா?’ – குழுத் தலைவன் அவரிடம் சென்று விசாரித்தான்.
‘ஆம், என் பெயர் போதிதர்மன்தான். அதுவும் என் குரு ப்ரஜ்னதாரா சூட்டியது. நானும் பல்லவ நாட்டிலிருந்துதான் வருகிறேன். ஆனால் நீங்கள் தேடும் அந்தப் ‘பிரபலமான’ பிக்கு நான் இல்லை.’ – எந்த அலட்டலும் இல்லாமல் அவர்களிடம் தெரிவித்தார் போதிதர்மர்.
திரளான சீடர்களோ, பெட்டி பெட்டியாக பௌத்த நூல்களோ எதுவும் இல்லாமல் தனியனாக, ஒரு சாதாரணப் பரதேசியைப்போல் வந்திறங்கிய போதிதர்மர் அவர்களுக்கு புதுமையாகத் தோன்றினார். சரி, புனிதப் புத்தகங்களை அவர் மனப்பாடம் செய்து மனத்தில் வைத்திருக்கவேண்டும் என்று எண்ணி அனைவரும் அவர்முன் மண்டியிட்டு வணங்கிவிட்டு தங்கள் தலைநகருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மக்கள் அலைகடலெனத் திரண்டு போதிதர்மரை வரவேற்றனர். அன்றையதினம் சொற்பொழிவு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திறங்கிய கையுடன் மக்களும் மன்னனும் போதிதர்மரை தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டினர். அவரும் சம்மதித்து மேடையேறினார்.
மேடையில் ஏறிய போதிதர்மர், வாய் திறக்கவே இல்லை. ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை. சில மணி நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தார். பின்னர், அவர்களிடமிருந்து விடைபெற்று ஊருக்குள் நடையைக் கட்டினார். அவர் வாயிலிருந்து அமுதமொழிகளைக் கேட்போம் என்ற ஆவலுடன் அவரை எதிர்பார்த்துக் குழுமியிருந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.
இதனால் ஆங்காங்கே மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது, சிலர் கோபத்துடன், வேறு சிலர் நையாண்டிச் சிரிப்புடன், மற்றும் சிலர் லேசான புரிதலுடன் அங்கிருந்து நகர்ந்தனர்.
மேற்கண்ட சம்பவம் போதிதர்மரை பிரபலப்படுத்தியது. அவர் திமிர் பிடித்தவர், தலைக்கனம் மிக்கவர், எதுவும் தெரியாதவர் என்னும் பெயரையும் எடுத்துத் தந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஷூ ஜியாங் நகரம் வணிகத்துக்குப் பெயர்பெற்றது. அங்கு வணிக நிமித்தமாக பல்வேறு இந்திய வியாபாரிகள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு அப்பிரதேசத்தின் காண்டனீஸ்  மொழி நன்றாகத் தெரியும். அவர்கள் மூலமாக காண்டனீஸ், மாண்டரின் இரண்டையும்  போதிதர்மர் கற்றிருப்பார் என்பது ஜோஸெப் அரெண்டாவின் (Joseph Aranda) கணிப்பு.
இதற்குப்பின் நடந்ததாக ஒரு நிகழ்வு சீனர்களிடம் செவிவழிக்கதையாக உலவுகின்றது. இதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் இந்த நிகழ்வுதான் கோவன் வழிக் கதைக்கு அடித்தளம் என கருதப்படுகிறது. கோவன் என்றால் என்னவென்று பிறகு பார்ப்போம். முதலில் அந்த நிகழ்வு.
ஊருக்குள் சென்ற போதிதர்மர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இவர் அமர்ந்த மரத்தடி நோக்கி ஒரு புத்த பிக்கு வந்தார். அவருடன் நூற்றுக்கும் மேலான சீடர்கள் பின்தொடர்ந்தனர். அவர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு சொற்களையும் அவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டே வந்தனர்.
‘அழகாவும் சுத்தமாகவும் இருக்கும் நல்ல மணம் படைத்த தாமரை அசுத்தமான கெட்ட நாற்றமுடைய சேற்றில்தான் பூக்கிறது. அதைப்போல் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மனச்சுத்தம் இல்லாமல் கெட்டவர்களாக இருந்தாலும் நம்மால் மனச்சுத்தம் உள்ளவராகவும் நல்லவர்களாகவும் மலரமுடியும்!’ என்று அந்த பிக்கு கூறிக்கொண்டே நடந்தார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த போதிதர்மர், ‘நல்ல மண்ணால் மட்டுமே நல்ல வேளாண்மையை அளிக்கமுடியும். சேறு பார்ப்பதற்கு அசுத்தமாகத் தெரிந்தாலும், அதனுள் இருக்கும் நல்லதன்மைதான் நல்ல தாமரை பூக்க உதவுகிறது’ என்று ஒரு போடு போட்டார். அந்த புத்த பிக்குவின் முகம் தொங்கிப் போனது. மிக்க சினத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவரது சீடர்களும் அவர் பின் ஓடினர்.
இத்துடன் அந்நிகழ்வு முடிகிறது.
இதன் பின் போதிதர்மர் அப்பகுதியில் இருந்த ஹெனான் (Henan) போன்ற பெரும் பெரும் பௌத்த மடங்களுக்குச் சென்றார். அங்கு பிக்குகளும் அவர்தம் மாணவர்களும் செய்த தியானத்தை கடுமையாக விமரிசித்தார். அவர்களது சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் குறைகள் கண்டு கேள்விகள் கேட்டார். புத்தர் கண்ட தியானம் இதுவல்ல என்று கண்டித்தார்.
இதன் விளைவாக, ‘இந்தியாவிலிருந்து வந்த பிக்கு பௌத்தம் தெரியாமல் இருக்கிறார். நம் தியானத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார்.’ என்ற வருத்தம் பௌத்தர்கள் மத்தியில் பரவியது.
இப்படியிருக்கையில்தான் மன்னன் ‘வே’ (Wei, வூ என்றும் சொல்லலாம்) தன் அரண்மனைக்கு வருகை தரும்படி போதிதர்மரை அழைத்தான். அவனது அழைப்பை போதிதர்மர் ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு காடுகளையும் மலைகளையும் கடந்து போதிதர்மர் ‘வே’யின் நாட்டுக்குள் பிரவேசித்தார். தனது மிகப் பெரும் அரண்மனையின் நுழைவாயிலுக்கே வந்து மன்னன் ‘வே’ போதிதர்மரை வரவேற்றான். உள்ளே அழைத்துச் சென்று உணவளித்து மகிழ்ந்தான். பின்னர் சற்று நேர ஓய்வுக்குப் பிறகு, இருவரும் உரையாடத் தொடங்கினார்கள்.
மன்னன் போதிதர்மரிடம், ‘ஐயா, நான் இந்தப் பிராந்தியத்தின் அரசனாவேன். புத்த மதத்துக்குச் செய்யும் தொண்டாக பல்வேறு இடங்களில் மடங்களையும் சிலைகளையும் நிறுவியுள்ளேன். அவற்றை வரும் வழியில் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதுபோக பௌத்த நூல்கள் பலவற்றைப் பிரதியெடுக்கவும், மடங்களில் தங்கியுள்ள பிக்குக்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் அளிக்கவும் பெரும் பொருள் தந்து உதவியும் செய்துள்ளேன். என்னைப்போல் பௌத்தத்தைப் போற்றும் மன்னன் ஒருவன் எனக்கு முன்பும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை என்று இங்கு இருக்கும் பிக்குகள் என்னைப் பாராட்டுவார்கள்.’
‘ஓ! அப்படியா?’
‘புத்த மதத்தொண்டாக இன்னும் நிறைய செய்திருக்கிறேன். இவ்வாறு நான் செய்த தொண்டுக்காக எனக்கு என்ன பலன் கிடைக்கும்?’
‘ஒன்றும் கிடைக்காது!’
‘எவ்வளவு நற்செயல்கள் செய்தாலுமா?’
‘நீ எவ்வளவு நற்செயல்கள் செய்தாலும் கடும் நரகத்தைத் தவிர உனக்கு எதுவும் கிட்டாது.’
இந்தப் பதில் மன்னனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியும் ஒரு மனிதன் இருப்பாரா! நான் மன்னன் எனத் தெரிந்தும் இத்தனை துணிச்சலுடன் பேசும் இந்த மனிதனைப் போன்ற ஒருவனை இதுவரை நாம் பார்த்ததில்லையே! வியப்புடன் மீண்டும் தொடர்ந்தான்.
‘போதிதர்மரே, எனக்குப் பல காலமாகவே ஒரு சந்தேகம் உள்ளது. கேட்கலாமா?’
‘தாராளமாக…’
‘புத்தர் என்று ஒருவர் உண்மையிலேயே உலகத்தில் இருந்தாரா? ஏன் கேட்கிறேன் என்றால் நம் காலத்தைச் சார்ந்த யாரும் அவரைத்தான் நேரில் பார்த்ததில்லையே!’
‘இல்லை, அப்படி யாரும் உலகத்தில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர் யாரென்று கொஞ்சம் சொல்ல முடியுமா?’ – போதிதர்மரின் மேற்படி கேள்வி மன்னனை வியப்பில் ஆழ்த்தியது.
‘கௌதம புத்தர். நம் மதத்தை தோற்றுவித்தவர். நம் கடவுள். அப்படித்தான் சொல்கிறார்கள். அப்படி ஒருவர் இல்லையா?’
‘கௌதம புத்தர். அப்படி ஒருவர் நிச்சயமாக இல்லை.’
‘என்ன இல்லையா?!’
‘ஆம்.’
‘அப்படியா, தாங்கள் யார் என்றேனும் உங்களுக்குத் தெரியுமா?’, மன்னன் முகத்தில் ஏளனப் புன்னகை.
‘தெரியாது’
ஏற்கெனவே போதிதர்மருடைய மௌனச் சொற்பொழிவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ‘வே’, போதிதர்மர் தனக்கு அளித்த எதிர்மறை பதில்களால் சினமுற்றான்.
‘அப்படியா, மிக்க நன்று. என் அரண்மனைக் கதவுகள் உங்கள் வெளியேற்றத்துக்காகவே திறந்திருக்கின்றன. என் சினம் எல்லை மீறும்முன் தயவுசெய்து வெளியேறி விடுங்கள். மீண்டும் இங்கு வரும் எண்ணம்கூட உங்களுக்கு தோன்றிவிட வேண்டாம்.’
அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை போதிதர்மர். மேற்கு திசையை நோக்கி அமைதியாக வெளியேறினார்.
போதிதர்மர் ஏன் இவ்வாறு எதிர்மறையாக பதிலளித்தார் என்று சற்றுப் பார்ப்போம்.
முதல் கேள்விக்கான பதில்:
தான் செய்த புத்தமதத் தொண்டுக்காக தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று கேட்ட மன்னன், தான் செய்த தொண்டை பெருமிதமாக போதிதர்மரிடம் கூறினான். இது அவனது ‘தற்பெருமை’யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுவே அவனுக்கு யாதொரு பலனும் இல்லை, நரகத்தைத் தவிர என்று போதிதர்மர் கூறியதற்கான காரணம்.
இரண்டாம் கேள்விக்கான பதில்:
கௌதம புத்தர் என்று ஒருவர் உலகில் இருந்தாரா?
‘நாம் புத்தரைப் கண்ணால் பார்த்ததில்லை, யாரோ கூறியதால் தான் கௌத்தமர் இருந்ததாக நம்புகிறோம். எனவே புத்தர் என்பவர் கற்பனையாகக் கூறப்பட்ட உருவமாகவும் இருக்கலாம் அல்லவா? தாங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? இருந்தாரா? இல்லையா? பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லையா?’, இதுவே மன்னனது மனத்தில் ஓடிய பெருங்கேள்வி என்பதை அவன் வெளிப்படுத்திய ஒரு வரிக் கேள்வியிலேயே அறிந்துகொள்வார்கள் போதிதர்மர் போன்ற மகான்கள்.
இது மன்னனுக்கு புத்தர் மீதிருந்த ‘நம்பிக்கை ஊசலாட்டத்தை’ தெளிவாகச் சுட்டுகிறது. ஆகையால்தான் ‘புத்தர் இல்லை’ என்று ஏளனமாக பதில் அளித்தார் போதிதர்மர். ‘நீ அடிப்படையிலேயே தள்ளாடுகிறாய் மகனே‘ என்று கூறாமல் கூறுகிறார்.
மூன்றாம் கேள்விக்கான பதில்:
தாங்கள் யார் என்றேனும் உங்களுக்குத் தெரியுமா?
‘இல்லை’ என்ற போதிதர்மரின் பதில் ஒரு மாபெரும் தத்துவத்தை உள்ளடக்கியது.
‘உலகில் உள்ள பொருள் அத்தனையும் மாயை’ எனும் தத்துவம்தான் அது. நான் என்பதே இல்லாத நிலையில் எப்படி நான் யார் என்பதைக் கூற இயலும்?
‘நீங்கள் என்பது உங்கள் பெயரா? இல்லை உடலா? இல்லை மனமா? இல்லை உயிரா?’
இக்கேள்விக்கு போதிதர்மரின் பதில் ‘நீங்கள் என்பது உங்கள் அனுபவமே. அனுபவம் என்பதும் ஒரு மாயையே, ஆக ’நான்’ என்பதே மாயை’ அழியக்கூடிய அனைத்தும் மாயை. தனித்தமிழில் ‘அனைத்தும் பொய்த் தோற்றம்’. போதிதர்மர் தோற்றுவித்த ’ஜென்’ தத்துவம் (மெய்யியல்) இந்தக் கருத்தை அழகிய முறையில் படம் பிடிக்கிறது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: