சனி, 8 செப்டம்பர், 2012

நகை, பணம் புதைக்கப்பட்டதாக தகவல் பிஆர்பி நிறுவனத்தில் புல்டோசர் மூலம் தோண்ட உத்தரவு

மதுரை தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் நகை, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி, புல்டோசர்கள் வைத்து தோண்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி நிறுவனங்களில் அதிகாரிகள் கடந்த 35 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆளில்லாத சிறிய ஹெலிகாப்டர் பயன்படுத்தியும் ஆய்வு நடந்து வருகிறது. மதுரை அருகே இடையப்பட்டியில் உள்ள ஸ்டாக்யார்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அளவிடும் பணியில் 100க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். துணை தாசில்தார் லைனல் ராஜசேகரன் கற்களை ஆய்வு செய்தார். அப்போது கற்களை அடுக்கி ரகசிய அறை உருவாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறைக்குள் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் சிறிய பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அதற்குள் சென்று பார்த்த போது, சிறிய அளவிலான மூன்று இரும்பிலான லாக்கர் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  அதிகாரிகள் லாக்கரை உடைத்து ஆய்வு செய்தனர். அருகிலேயே இரும்பு பெட்டி ஒன்றும் இருந்தது. அதை திறந்து பார்த்த போது ஏராளமான ஆவணங்கள் இருந்தன. அதில் 500க்கும் அதிகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தேர்வு விடைத்தாள்கள் இருந்தன. இதற்கிடையே, தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை பிஆர் பழனிச்சாமி பதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே தெற்குத்தெருவில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஏராளமான நகை, பணப் புதையல்கள் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து தெற்குத்தெருவில் புல்டோசர் வைத்து தோண்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள் ளார். இப்பணி நேற்றே ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், பிஆர்பி குவாரி ரகசிய அறையில் இரும்புப்பெட்டியில் கட்டுக்கட்டாக காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் கிடைத்ததால், அது தொடர்பாக கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் தெற்குத்தெரு பிஆர்பி நிறுவனத்தில் புல்டோசர் மூலம் தோண்டும் பணி நடைபெறவில்லை.  இன்று அல்லது திங்கட்கிழமை புல்டோசர் மூலம் தோண்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இன்று கீழவளவில் உள்ள குவாரிகள் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.

கருத்துகள் இல்லை: