திங்கள், 3 செப்டம்பர், 2012

முகமூடி. சாருநிவேதாவின் வாந்தியோ வாந்தி

பாலாவின் ‘அவன், இவன்’ படத்தைப் பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியாமல் ஓடி வந்த போதே இனிமேல் தமிழ்ப் படம் பார்க்கக் கூடாது என்ற முடிவு எடுத்தேன்.  இருந்தாலும் அந்த முடிவுக்கு அவ்வப்போது ’ட்ரபிள்’ வந்து விடுகிறது.  முகமூடி படத்தை நான் முதல் காட்சியாகப் பார்த்த ஒரே காரணம், அதன் இயக்குனர் மிஷ்கின் பத்திரிகைகளில் கொடுக்கும் பேட்டிகள்தான்.  தன்னை ஏதோ ஒரு குரஸவே ரேஞ்சில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை சகட்டுமேனிக்குத் திட்டுவது; எல்லாம் குப்பை, எதுவுமே சரியில்லை என்பது…  பாலாஜி சக்திவேல் எடுத்த ’வழக்கு எண்…’ என்ற அசட்டுத்தனமான படம் ஓடவில்லை என்றதும் மிஷ்கின் ஒரு விழாவில் தமிழ் ரசிகர்களைத் திட்டித் தீர்த்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.  அவரிடம் உதவி இயக்குனராகச் சேர விரும்பி, அவரால் மறுக்கப்பட்டு வருபவர்கள் சொல்லும் கண்ணீர்க் கதையை வைத்து என்னால் ஒரு நாவலே எழுத முடியும்.  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேரும் மடையர்கள்; தான் ஒரு ஜீனியஸ் என்பதாகவே அவருடைய பேட்டிகள் அனைத்தும் அமைந்திருப்பதைப் பார்க்கிறேன். 
ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அதெல்லாம் தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் பப்ளிஸிட்டி ஸ்டண்டுகள் என்று.  அந்த பப்ளிஸிட்டி ஸ்டண்டை நம்பியே முகமூடி முதல் ஷோவுக்குப் போனேன்.
குப்பை.  இதற்கு மேல் முகமூடி பற்றி எழுதுவது அனாவசியம்.  குப்பை.  அவ்வளவுதான்.  இதற்கு மேல் எழுதுவதற்கு இந்தப் படத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை.  கருந்தேள் இந்தப் படம் பற்றி பத்து பக்கத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.  அதாவது, இந்தப் படம் ஆக மொக்கை என்று.  இருந்தாலும் மிஷ்கின் மீது இன்னும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதாம். அதுசரி, எனக்குக் கூடத்தான் மன்மோகன் சிங் வாய் திறந்து ஏதாவது பேசுவார் என்று நம்பிக்கை இருக்கிறது.  என்ன செய்ய?
இந்தக் குப்பைப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டாம் என்றே எண்ணி இரண்டு நாட்கள் வாளாவிருந்தேன்.  இருந்தாலும் இந்தக் குப்பையை முன்வைத்து சில விஷயங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  எனக்கு ரமணி சந்திரனின் கதை மீது எந்தப் புகாரும் இல்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.  அவர் என்றைக்கும் “நான் Gabriel Garcia Marquez தரத்தில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டதில்லை.  நந்தலாலாவுக்கு மிஷ்கின் கொடுத்த பேட்டிகளைப் படித்திருக்கிறீர்களா?  சரி, முகமூடிக்கு அவர் அப்படிப்பட்ட பேட்டியெல்லாம் கொடுக்கவில்லை.  ஆனால் எம்ஜியார் ஃபார்முலாவில் ஒரு பொழுதுபோக்கு என்கிறார்.  எம்ஜியார் உயிரோடு இருந்திருந்தால் மிஷ்கினின் கதை கந்தலாகி இருக்கும்.  எம்ஜியார் படம் மாதிரி ஒரு படம் எடுக்க மிஷ்கினால் இந்த ஜென்மத்தில் முடியும் என்று தோன்றவில்லை.  ஏனென்றால், முகமூடி கிராமத்தில் பள்ளிக்கூடச் சிறுவர்கள் போடும் ட்ராமா மாதிரி இருக்கிறது.  ஜீவாவின் தாத்தாக்களான கிரிஷ் கர்னார்டும் இன்னொருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் ஒரு உதாரணம்.  பாவமாக இருந்தது ஐயா.  பரிதாபம்.  ஜீவாவின் பேட்மேன் உடையலங்காரம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.  தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு கோமாளித்தனமான உடை அலங்காரம் காண்பிக்கப்பட்டதில்லை.  வடிவேல் பெரிய பிஸ்தா மாதிரி தொடை தட்டிக் கொண்டு காமெடி பண்ணுவார் இல்லையா, அந்த மாதிரி இருக்கிறது ஜீவாவின் பேட்மேன் அவதாரம்.  பேண்டுக்கு வெளியே சிவப்புக் கலர் ஜட்டியை மாட்டிக் கொண்டால் சூப்பர் ஹீரோ.
பல இடங்களில் படத்தைப் பார்த்த போது உவ்வே உவ்வே என்று அருவருப்பு உணர்ச்சி ஏற்பட்டது.  குறிப்பாக, மிஷ்கினுக்குப் பிடித்தமான லோ ஆங்கிள் ஷாட்டில் ஹீரோயினைக் காண்பிக்கும் போது அவருடைய மூக்கின் உட்புறம் தெரிகிறது.  ஐயா, இப்படியெல்லாமா காசு கொடுத்து படம் பார்க்க வருபவர்களை டார்ச்சர் செய்வீர்கள்?  இப்படி ஒரு முகத்தை மிஷ்கின் எங்கேயிருந்து பிடித்தார் என்று தெரியவில்லையே?
சரி, இப்படியே 50 பக்கம் எழுதிக் கொண்டு போகலாம்.  வேஸ்ட்.  அப்படி என் சக்தியை விரயமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.  ஆனால் ஒன்று.  ரமணி சந்திரன் அவருடைய பாணியில் ஒரு pulp கதையைத் தருகிறார்.  அதன் இடையே ஷேக்ஸ்பியரை அவர் மேற்கோள் காட்டுவதில்லை.  ஆனால் மிஷ்கின் தன்னுடைய ஸ்கூல் ட்ராமா படத்தின் இடையிடையே சாக்ரடீஸீன் மேற்கோள், கௌதம புத்தர் என்று காட்டி ஏன் ஜங்கள் பிங்கள் வேலை செய்கிறார்?  மிஷ்கினுக்கு சாக்ரடீஸின் பெயரும், கௌதம புத்தரின் பெயரும் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவா?  ஐயா இயக்குனர்களே, இனிமேல் நீங்களும் படத்தின் இடையில் மிஷல் ஃபூக்கோவின் மொட்டைத் தலையையும், பிளேட்டோவின் படத்தையும் காட்டுங்கள்.  ஃபூக்கோவின் மேற்கோளுக்கு எஸ். ராமகிருஷ்ணனை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
யுத்தம் செய் படத்தில் என் விரலைக் காட்டி இலக்கிய சேவை செய்த மிஷ்கின் முகமூடியில் கி.அ. சச்சிதானந்தனின் முழு உருவத்தையும் காட்டி இருக்கிறார்.  மௌனியின் புத்தகத்தைப் போட்டு தமிழ்நாட்டில் எந்த அங்கீகாரமும் பெற்றிருக்காத சச்சிக்கு இது ஒரு மகா கௌரவம்.  பாரத ரத்னா அவார்டுக்கு சமமான அங்கீகாரம் இது.  இதை நான் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.  இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் கன்னித் தீவு பெண்ணா பாடலை டிவியில் பார்க்கின்ற போது என் விரல்களின் நடிப்பைப் பார்த்து உடனே எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள்.  சச்சி சிறிது நாட்கள் தன்னுடைய மொபைலை switch off-இலெயே வைப்பது நலம்.  இல்லாவிட்டால் வரும் போன் கால்களுக்கு பதில் சொல்லி மாளாது. மிஷ்கினின் அடுத்தடுத்த படங்களில் எம்.டி. முத்துக்குமாரசுவாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன் போன்றவர்களின் நடிப்பையும் பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன்.
டாஸ்மாக்கில் பாடும் பாடலும் ஆடலும்… ஒருவருக்கு ஒரே படத்திலா இப்படி ஒரு கற்பனை வறட்சி வரும் என்று நம்ப முடியவில்லை.  ஷாட்டுக்கு ஷாட் அஞ்சாதே பார் பாடல்!
முகமூடி அதிக பட்சம் ஒரு வாரம் ஓடலாம்.  அதில் சந்தேகம் இல்லை.  ஆனால் இப்படிப்பட்ட டப்பா படங்களை எடுப்பவர்கள் தமிழ்நாட்டின் கலை உலக மேதைகளாக அங்கீகரிக்கப்படுவதுதான் எனக்கு மிகப் பெரும் துயரத்தைத் தருகிறது.  இந்தத் திரைக்கதையை UTV போன்ற ஒரு பெரும் நிறுவனம் எப்படி சினிமா எடுக்க முடிவு செய்கிறது?  எப்படி இது போன்ற இயக்குனர்களுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது?  ஒன்றுக்கு இருக்கப் போனால் கூட இந்த இயக்குனர்களின் பின்னே 15 உதவி ஆட்கள் போகிறார்கள்…    ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் பார்த்தால் வலது காலைப் பிடித்து விட ஐந்து பேர், இடது காலைப் பிடித்து விட ஐந்து பேர். இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது?  இயக்குனரின் அலுவலகம் அம்பானியின் அலுவலகம் போல் ஜொலிக்கிறது.  ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தேசத்திலிருந்து தருவிக்கப்படுகிறது.  ஆனால் அவர் எடுப்பதோ ஸ்கூல் ட்ராமா தரத்தில் இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன், முகமூடி என்ற ஒரு படம் டப்பாவுக்குள் போனாலும் கூட இந்த இயக்குனர்கள் தமிழ்நாட்டில் அவதார புருஷர்களைப் போல் நடமாடிக் கொண்டிருப்பது எப்படி? இந்த அதிகாரத்தையும், பண பலத்தையும் கொடுப்பது எது?  இதற்கான பதிலில்தான் தமிழ்நாட்டின் கலாச்சார வறுமை பற்றிய பிரச்சினைக்கும் பதில் இருக்கிறது.
இறுதியில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.  நான் இந்த விமர்சனத்தை ஒரு புத்திஜீவியாக, எழுத்தாளனாக எழுதவில்லை. அதற்கு இந்தப் படத்துக்குக் கிஞ்சித்தும் தகுதி இல்லை.  நான் இதை ஒரு சராசரி பார்வையாளனாகவே பார்த்தேன்.  அன்பா வா படத்தை இதுவரை ஒரு பதினைந்து முறையாவது பார்த்திருப்பேன்.  ஆனால் ஒருபோதும் அலுக்கவில்லை.  இப்போதும் என்னால் அதை படு ஜாலியாகப் பார்க்க முடியும்.  ஆனால் முகமூடி? கொடுமையான சித்ரவதை.  இந்தச் சித்ரவதையை ஒவ்வொரு பார்வையாளனும் உணர்கிறான். சாருநிவேதாவின் வாந்தியோ வாந்தி

கருத்துகள் இல்லை: