புதன், 5 செப்டம்பர், 2012

இலங்கையர் தாக்குதலுக்கு ஜெயலலிதா தான் காரணம்:

சென்னை: தமிழகம் வரும் இலங்கை பயணிகள் மீது நடந்த தாக்குதலுக்கு  ஜெயலலிதா தான் காரணம் என்று திமுக தலைவர் கலைஞர்  குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலே ஆளுகின்ற அதிமுக அரசு, இலங்கையிலிருந்து விளையாடுவதற்காக வந்த கால்பந்து வீரர்களையெல்லாம் திருப்பி அனுப்பியதாலும், அவர்களை விளையாடுவதற்காக அனுமதித்த தமிழக அரசு அதிகாரி ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததாலும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோயில்களுக்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகள் மீது பரவலாகத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, பொதுவாக கிரிக்கெட் ஆடுபவர்கள் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து செல்வதும், அங்கேயிருந்து இங்கே வருவரும் வாடிக்கையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஷயங்கள் என்று பதிலளித்தேன்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது வேறு; விளையாட்டு வீரர்கள் அங்கும் இங்கும் மாறிமாறி கலந்து கொள்வது என்பது வேறு.
இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தமிகத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் பல இடங்களிலே நடைபெற்ற காரணத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேற்று விடுத்த வேண்டுகோளில், இலங்கை மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாகவும், மதரீதியாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், தொழில் ரீதியான பயிற்சிக்காகவும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவு என்பார்களே, அதைப்போல நீண்ட காலமாக இருந்து வருகின்ற உறவு. இதில் திடீரென்று விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதும் இரண்டு நாடுகளுக்கும் உள்ள உறவைக் கெடுக்கக்கூடிய ஒன்றாகும்.
ஏனென்றால் இலங்கையில் இன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அங்கே தற்போதுள்ள சூழ்நிலையில் வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர். அவர்களை மேலும் கொடிய துன்பங்களுக்கு ஆட்படுத்துகின்ற நிலையை இங்கே உள்ள நாம் ஏற்படுத்தி விடக்கூடாது. இலங்கையர்
தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கை மக்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் அறிக்கை விடுத்துள்ளது.
இந்த பிரச்சனை குறித்து மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, இந்தியா- இலங்கை இடையே வரலாற்று ரீதியான இன ரீதியான கலாசார நாகரிக உறவு நிலவி வருவதை எடுத்துக்காட்டி, இந்தியா வரும் இலங்கைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலைக்கெதிரான தீர்மானம் ஐ.நா. மன்றத்தின் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 14ம் தேதியன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தலைமையில் தொழில்நுட்பக்குழு ஒன்று, இலங்கைக்குச் சென்று, போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்திப்பதுடன், மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், போர்க்காரணமாக அந்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்யவும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை நாமே உருவாக்குவது என்பது, இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு மேலும் இன்னலையும், மறுவாழ்வுப் பணியிலே குந்தகத்தையும் ஏற்படுத்துகின்ற செயலாகவே அமைந்து விடும்.
எனவே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த மரபு வழி வந்தவர்கள் நாம் என்பதாலும், சிங்களப் பேரினவாதத்திற்கும், அதன் மனித நேயத்திற்கும்- மனித உரிமைகளுக்கும் எதிரான செயல்களையும் தான் நாம் தொடர்ந்து கண்டித்து வருகிறோம் என்பதாலும், தமிழர்கள் எந்த தேசிய இனத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்பதாலும், இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் தொழில் காரணங்களுக்காக தமிழகத்திற்கோ, பொதுவாக இந்தியாவிற்கோ வருகிறவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எனவே தமிழக மக்கள் எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும், தூண்டுதல்களுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி காக்குமாறும், அரவணைப்போடு நடந்து கொள்ளுமாறும் மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் விடுக்கின்ற வேண்டுகோளாகும். உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்துவிடுகிற செயல்களுக்கு பின் விளைவுகள் கடுமையாக ஆகிவிடக்கூடாது அல்லவா? வாழை இலை முள் மீது பட்டாலும், அல்லது முள் வாழையிலையில் பட்டாலும் சேதம் வாழை இலைக்குக்குத் தானே என்பதை மறந்திடக்கூடாது!
இவ்வாறு கலைஞர்  கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: