வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இந்தியாவிற்குள்ளேயே பாஸ்போர்ட், விசா! தாக்கரேக்களின் இனவெறி!

உத்தவ் தாக்கரே
காராஷ்டிர மாநிலத்திற்குள் நுழையும் பீகாரிகள் இனிமேல் அனுமதிச்சீட்டு பெற்றுதான் வர வேண்டும் என்கிறார் சிவசேனாவின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே. தனது பங்காளி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரேயுடன் சேர்ந்து இனவெறியைக் கக்கும் வேலையை உத்தவ் துவங்கியுள்ளார்.
“மராட்டியத்தில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு பீகாருக்கு போய் பதுங்கி விடும் குற்றவாளிகளை எங்களது போலீசு கைதுசெய்ய வந்தால் நிதிஷ்குமாரின் அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தவறினால் அடுத்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவரை ஆதரிக்க மாட்டோம்” என்று மிரட்டுகிறார் உத்தவ். முதலில் வங்க தேசத்திலிருந்து ஊடுருவும் முசுலீம்களால்தான் பிரச்சினை என்ற இக்கும்பல் தற்போது மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் பிற மாநில உழைக்கும் மக்கள்தான் பிரச்சினை என்கிறது.

1970 களில் மும்பையில் பலமாக இருந்த கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கத்தை உடைப்பதற்காக முதலாளிகள் மற்றும் காங்கிரசால் வளர்த்துவிடப்பட்ட பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல் துவங்கிய நாள் முதல் இனவெறியை கக்கும் பாசிச கும்பலாகத்தான் இருந்து வருகிறது. வர்க்க அடிப்படையில் தொழிலாளிகள் திரளுவதை அனுமதிக்காமல் மராட்டிய தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக பிற மாநிலத்தவரை வில்லனாக காட்டியே வளர்ந்து கொண்ட சிவசேனா அவ்வப்போது மண்ணின் மைந்தர் கோஷத்துக்காக கலவரங்களையும் நடத்தியது. இதே சிவசேனா மகாராஷ்டிரத்தின் விதர்பா மாவட்டத்தின் விவசாயிகள் தற்கொலை பற்றி மறந்தும் பேசுவதில்லை என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மும்பையில் தொழில் துவங்கியுள்ள முதலாளிகளில் பல மாநிலத்தவர்கள் இருந்தாலும் அவர்கள் யாரையும் எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட தாக்கரே கும்பல் நடத்துவதில்லை. பங்குச்சந்தை துவங்கி ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவன தலைமையகங்கள் கூட இங்குதான் இயங்கி வருகின்றன. கொத்தடிமைகள் போல மராட்டிய தொழிலாளிகள் அங்கு நடத்தப்படுவதை தட்டிக்கேட்க தாக்கரேக்கள் தயாராக இல்லை. இவர்களை முதலாளிகள் ஊக்குவிப்பதால் தொழிற்சங்கங்கள் எதுவும் மும்பையில் துவங்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டனர்.
முதலாளிகளின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிவசேனா வை சமீபகாலமாக தேர்தல் அரசியலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தாண்டிச் செல்வதால் இனவெறியை கக்கி ஆதாயம் அடைவதில் இருவரும் போட்டி போடுகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த அவல் பீகாரின் இடம்பெயரும் சாதாரண தொழிலாளிகள்.
மும்பையின் டாக்சி ஓட்டுநராக, கட்டிட வேலை செய்பவராக, சமோசா விற்பவராக வரும் வடமாநில தொழிலாளிகள்தான் தாக்கரேக்கும் வில்லன்கள், முதலாளிகளுக்கும் வில்லன்கள். ஆம் மும்பை போன்ற பெருநகரத்தில் சுரண்டப்படும் மராட்டிய தொழிலாளி வர்க்கத்தின் கூலி குறைவுக்கு காரணமாக காட்ட முதலாளி வர்க்கம் உருவாக்கிய மாயத்தோற்றம் பிற மாநிலத்தவர். அதுதான் மராட்டிய இனவாதிகளின் கொம்புப்பிடி.
தாராளமயமும், தனியார்மயமும் மக்களை நாடு முழுக்க ஓடும்படி செய்கிறது. பிழைப்பு தேடி வரும் மக்களுக்கு உள்நாட்டிலேயே பாஸ்போர்ட் கொடுக்க சொல்கிறார்கள் இனவாதிகள். தமிழகத்தில் காவல்நிலையத்தில் கணக்கெடுக்கிறார்கள். இறுதியில் இனவாத அரசியல் என்பது முதலாளிகளின் சேவைக்காக மட்டுமே நடக்கிறது என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா என்ன?

கருத்துகள் இல்லை: