சனி, 8 செப்டம்பர், 2012

ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் இலங்கை தமிழர்களை ஆபத்துக்குள்ளாக்கும் தமிழக அரசியல்

சினேகபூர்வமான போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த இரண்டு கால்பந்து அணிகளுக்கு உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு மாநில முதலமைச்சர ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டளையிட்டு இருந்தார்.
இதனை விமர்சித்து இந்தியாவில் வெளிவரும் 'த ஹிந்து' பத்திரிகை வெளியிட்டு இருந்த ஆசிரியத் தலையங்கத்தில் 'இன்று நாம் பாடசாலை கால்பந்து விளையாட்டு வீரர்களை வெளியேற்றுகிறோம், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், உல்லாசப் பிரயாணிகள் மற்றும் யாத்திரிகள் ஆகியோரையும் வெளியேற்ற வேண்டும் என்று நாளை கூச்சல் எழும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த ஆசிரியத் தலையங்கம் அச்சில் இருந்து வெளிவருவதற்கு முன்னரே அதில் கூறப்பட்ட எதிர்வு உண்மையாகிவிட்டது.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பூண்டிமாதா கோயிலுக்கும் பிரசித்தி வாய்ந்த அன்னை வேளாங்கண்ணி தேவஸ்தானத்திற்கும் தல யாத்திரைக்காக சென்ற 184 யாத்திரிகளை ஒரு கும்பல் அங்கிருந்து வெளியேறச் செய்ததோடு, மற்றொரு கும்பல் அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் வழியில் அவர்கள் பயணித்த பஸ்களையும் தாக்கியிருந்தது.

தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்கள் தாக்கப்படுவது இப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிவான ராஜதந்திர உறவிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களை அடுத்து இலங்கை அரசாங்கம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குச் செல்வோருக்காக பயண எச்சரிக்கை விடுத்தமை இவ்வுறவின் மீது ஏற்பட்ட முக்கிய தாக்கமாகும்.

இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை திடீரென எடுக்கவில்லை. கடந்த வருடம் முதல் இலங்கையர்கள் பலர் தமிழ்நாட்டில் வைத்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான குழுக்களால் பல்வேறு இம்சைகளுக்கு உள்ளக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இலங்கை அரசியலோடு தொடர்புடைய இலங்கையர்களே அவ்வாறு இம்சிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருகுமார் நடேசன், மற்றும் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குறே இவ்வாறு இம்சிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்களாவர்.

பின்னர் இந்த எதி;ர்ப்பு பயிற்சிக்காக இந்தியாவுக்குச் செல்லும் இலங்கை படையினர் பக்கம் திரும்பியது. இலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சியளிக்கக் கூடாது என தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூறலாயின. இந்த எதிர்ப்புக்களால் ஏற்கனவே பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்த இலங்கை படை அதிகாரிகள் மாநிலத்தில் இருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.

பின்னர் தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசியலுக்கோ அல்லது அரச இயந்தித்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாத விளையாட்டு வீரர்கள் மற்றும் யாத்திரிகள் போன்றவர்களை குறிவைக்கத் தொடங்கினர். எனவே இலங்கை அரசாங்கத்தின் பயண எச்சரிக்கை திடீரென விடுக்கப்பட்ட ஆதாரமற்ற முடிவல்ல.

இலங்கை அரசியலோடும் அரச இயந்திரத்தோடும் தொடர்புள்ளவர்களை; மீதான எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழகத்தில் ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் காண்கிறார்கள். ஆனால் அரசியலுக்கோ அல்லது அரச இயந்தித்திற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாதவர்கள் மீதான தாக்குதலை பெரும்பாலான தமிழகத்தவர்கள் எதிர்ப்பதாகவே தெரிகிறது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் அரச படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது பொருமளவில் சாதாரண தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியே தமிழக தலைவரகள் அங்கு செல்லும் இலங்கை அரசியலோடும் அரச இயந்திரத்தோடும் தொடர்புள்ளவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இதற்கென அவர்கள் தாமாகவே சில புள்ளி விவரங்களையும் தயாரித்துக் கொண்டுள்ளனர்.

போரின் இறுதிக் கட்டத்தின் போது 40,000 போர் கொல்லப்பட்டதாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமித்த (தருஸ்மான் குழு என பலரால் அழைக்கப்படும); குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக தலைவர்கள் இறுதிக்கட்ட போரின் போது ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். அவர்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு இந்த புள்ளி விவரங்களை முன் வைக்கிறார்களோ தெரியாது.

அதேவேளை, அரசாங்கம் அண்மையில் நடத்திய குடிசன மதிப்பீட்டின் பெறுபேறுகளின் படி 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் வட மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 8000 என கூறப்பட்டது. இயற்கை மரணங்கள், கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள், புலிகளால் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் ஆகியோரும் இந்த எண்ணிக்ககையில் அடங்குவதாக அரசாங்கம் கூறியிருந்தது. இந்த குடிசன மதிப்பீடு பிழையானது என இதுவரை எவருமே கூறவில்லை.

ஆனால் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த புள்ளி விவரங்களை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அவர்கள் இலங்கை அரசியலோடும் அரச இயந்திரத்தோடும் தொடர்புள்ளவர்களை எதிர்க்கிறார்கள். அது சரியென ஏற்றுக் கொண்டாலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் யாத்திரிகள் போன்றவர்களை குறிவைப்பதை நியாயப் படுத்த முடியாது.

கால்பந்து வீரர்களை வெளியேற்றியதை நியாயப் படுத்துவதற்காக ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இலங்கை படையினருக்கு தொடர்ந்து பயிற்சி வழங்குவதாக கூறி மத்திய அரசாங்கம் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்திக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களும் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

படையினருக்கு பயிற்சி வழங்குவதனால் கால்பந்து வீரர்களை நாட்டுக்குள் அனுமதித்தமை தவறு என்பதே இதன் அர்த்தமாகும். இது என்ன வாதம் என்று ஜெயலலிதாவுக்கு மட்டுமே விளங்குகிறது.

அவரது செயலை அங்கீகரிப்போரினதும் அவரை பின் பற்றுவோரினதும் எண்ணிக்கை மிகச் சிறியது என்றே தெரிகிறது. திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் இயக்கம், வைகோவின் மு.தி.மு.க., போன்ற ஒருசில அமப்புகளே சாதாரண இலங்கை மக்களை எதிர்க்கின்றனர். அண்மைக் காலத்தில் டெசோ மாநாட்டை கூட்டி பெரும் சர்ச்சையை கிளப்பிய தி.மு.க. தலைவர் கருணாநதியும் விளையாட்டு வீரர்களை வெளியேற்றியதை விமர்சித்து இருந்தார். ஆனால் அவர் அதனை கண்டிக்கவில்லை. சி.பி.ஐ.எம். மட்டுமே அதனை 'கண்டித்து' இருந்தது.

ஹிந்து பத்திரிகையும் தினமணி பத்திரிகையும் கால்பந்து வீரர்களை வெளியேற்றியதை தமது ஆசிரியத் தலையங்கங்கள் முலம் விமர்சித்து இருந்தன. இன்றைய தேவை நிதானம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இருந்த தினமணியின் ஆசிரியத் தலையங்கத்தில் 'இலங்கை அரசின் மீதான எமது கோபம் நியாயமானது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக் கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதும் அரசியல் எதிர்வினைகளாக இருக்க முடியுமே தவிர சரியான இராஜதந்திர நடவடிக்கையாக இருக்க முடியாது' என்று கூறப்பட்டுள்ளது.

போர் உக்கிரமாக நடைபெற்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உட்பட இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடியதையும் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா நற்புறவை பேண முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டும் அந்த ஆசிரியத் தலையங்கம் 'இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக் கொண்டிருக்கிறோம்' என்றும் கூறிப்பிடுகிறது.

'நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புக்களோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல. சாதாரண இலங்கை தமிழனும் இந்திய மீனவனும் தான்' என்கிறரார் தினமணி ஆசிரியர்.

இலங்கை இராணுவம் இந்தியாவில் பயிற்சிப் பெறுவதையும் தினமணி நியாயப்படுத்துகிறது. 'நாம் வேண்டாம் என்று சொன்னால் இலங்கை இராணுவ வீரர்கள் பெய்ஜிங் செல்வார்கள்... பரவாயில்லையா?' என்று தினமணி ஆசிரியர் கேள்வி எழுப்புகிறார்.

எனவே தமிழ்நாட்டில் ஒரு சிலர் இலங்கையரை வெறுத்த போதிலும் பெரும்பாலானவர்கள் அறிவுபூர்வமாகவே பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் இதனை விளங்கிக் கொண்டுள்ளார்களா என்பது கேள்விக்குறியே. எனவே தான் 'நாமும் இவ்வாறு நடந்து கொண்டால் என்ன நடக்கும்' என அமைச்சர் விமல் வீரவன்ச மிரட்டலாக கேட்டுள்ளார்.

இந்த அபாயத்தை தான் தினமணி ஆசிரியரும் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அபாயத்தை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் அக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் சேர்ந்து கொண்ட கணேசனின் சகோதரர் பிரபா கணேசனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

'இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் வன்முறையாளர்களின் இந்நடவடிக்ககைள் இந்நாட்டில் இருக்கின்ற தீவிரவாத இனவாத வன்முறை முட்டாள்களுக்குத் தான் உதவுகின்றன' என்று மனோ கணேசன் குறிப்பிட்டு இருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும் இலங்கையருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும் எதிர்ப்பும் ஒருபோதும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தரப் போவதில்லை. மாறாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்' என பிரபா கணேசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தமிழ்நாட்டு அரசியலால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் குரலாகும். ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர்களோடு இணைந்து 16 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதாவது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு தெரியாது என பிரபா கணேசன் கூறுகிறார்.

தமிழ்நாட்டு தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காகவே இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மீது எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் மாநில அரசியலேயல்லாமல் இலங்கை தமிழர்கள் மீதான அன்பு அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் கூறுகிறார். கடந்த 3ஆம் திகதி கடலூரில் முப்பனார் சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய அவர் இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்தே தமிழகத்தில் பல கட்சிகள் அரசியல் நடத்துவதாகவும் இலங்கையில் பிரச்சினை நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இது தான் உண்மை. ஆனால் அவர்கள் நேர்மையானவர்கள் என கடும்போக்குள்ள சிங்கள தலைவர்கள் நினைக்கிறார்கள், அல்லது அவ்வாறு நினைப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அங்கு தான் பிரச்சினை இருக்கிறது.
tamilmirror.lk

கருத்துகள் இல்லை: