வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை!

2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு.
அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும்.
இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் அமெரிக்காவிடமிருந்து ஆயுத கொள்முதல் செய்திருக்கின்றன? உலகின் பல்வேறு பகுதிகளில் நாடுகளுக்கிடையே விரோதத்தை வளர்த்து பராமரிப்பதன் மூலம் தனது ஆயுத விற்பனையை பெருக்கிக் கொள்வது அமெரிக்கா முதலான நாடுகளின் கொள்கையாக இருக்கிறது.

“உலகில் நடக்கும் எல்லா போர்களிலும் பெரும் பகுதி ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள்தான் விற்கின்றன. 1945க்குப் பிறகான ‘அமெரிக்க நூற்றாண்டு’ என்பது தொடர்ச்சியான போர்க் காலமாகவே இருக்கிறது” என்கிறார் அரசியல் பார்வையாளர் கிறிஸ் பாம்பரி.
‘ஈரான் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது. ஈரான் உயிரி ஆயுதங்களை தயாரிக்கிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது. இனி போர் தான். பக்கத்தில் இருக்கும் வளைகுடா நாடுகளுக்கு ஆபத்து’ என்று உருவாக்கிய புயலில் ஆடிப் போயிருக்கும் சவுதி அரேபியா முதலான மேற்காசிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு தைரியம் ஏற்றிக் கொள்ள எண்ணெய் ஏற்றுமதியில் சம்பாதிக்கும் பணத்தை அமெரிக்க ஆயுதங்கள் வாங்க செலவிடுகின்றனர். இதற்கு முன் சதாம் உசேனை வைத்து வாங்கினர்.
பாகிஸ்தானை காட்டி இந்தியாவிற்கும் இந்தியாவை காட்டி பாகிஸ்தானுக்கும் ஆயுதம் விற்பது அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான வெளியுறவுக் கொள்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது ஊடகங்கள் எல்லாம் மிச்செல் ஒபாமாவின் குத்து டான்ஸை ரசித்துக் கொண்டிருந்த போது, ஒபாமா மன்மோகன் சிங்குடன் ஆயுதங்கள் விற்பதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டார் என்பது வரலாறு
இதே மாதிரியான கொள்கையின் அடிப்படையில் சீனாவுக்கு எதிர் நிலையில் நிற்கும் தாய்வானுக்கு ஆயுதம் விற்ற அதே கையோடு அமெரிக்கா சீனாவுடன் $4 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை விற்பதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
“அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சிகளையும் பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியையும் பார்த்து சவுதி அரேபியா பயந்து போயிருக்கிறது. அமெரிக்க அடிவருடியான எகிப்தின் ஹோஸ்னி முபாரக் வீழ்ந்த பிறகு இந்த பிராந்தியத்தில் சவுதி அரேபியாதான் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது” என்கிறார் அரசியல் பார்வையாளர் கிறிஸ் பாம்பரி.
அத்தகைய நம்பகமான கூட்டாளிகளுக்கு ஆயுத விற்பனை அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம் ‘ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில் அமெரிக்காவில் இயங்கும் மிகப் பெரிய ராணுவ-தொழில் கூட்டமைப்பு உற்பத்தி செய்யும் ஆயுதங்களுக்கு புதிய சந்தைகள் தேவைப்படுவதுதான்’ என்கிறார் ஓய்வு பெற்ற அமெரிக்க லெப்டினன்ட் கர்னல் அந்தோனி ஷா்பர்.
பொருளாதார ரீதியாக “வளைகுடா நாடுகளுடன் நல்ல உறவை வைத்துக் கொண்டால், அவர்கள் தமது எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு எண்ணெய் ஏற்றுமதியை தொடர்ந்து செய்வார்கள் என்பது அமெரிக்க திட்டம்” என்கிறார் அந்தோனி ஷாபர். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயும் சீனாவிலிருந்து மலிவான உற்பத்தி பொருட்களையும் இறக்குமதி செய்யும் அமெரிக்கா அவற்றுக்கு ஈடாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்து சமன் செய்ய முயற்சிக்கிறது.
இப்படி அமெரிக்காவிடம் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்கள் முறையே சில ஆண்டுகளில் காலாவதி ஆகிவிட வாங்கிய நாடுகள் ‘போர் எப்போ வரும்’ என்று பாரதிராஜா பட நாயகியை போல் கண்ணை குவித்து நெற்றியில் கை வைத்து எதிர்பார்த்தப்படி இருக்கிறார்கள். ஆனால் ஆண்டு தோறும் இந்த எதிர்பார்ப்பை எகிற வைத்து அமெரிக்கா ஆயுதங்களை விற்றவாறு தனது கல்லாவை நிரப்பி வருகிறது.

கருத்துகள் இல்லை: