திங்கள், 27 ஆகஸ்ட், 2012

எங்கும் ஊழல்! நடிகர்கள் சிரித்து நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள்

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள். நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது. பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள்.
நம்பியவ்ர்களுக்கு? ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. தொடக்கத்தில் திண்டபங்களுக்குத்தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள். இப்போது ஊடகங்களுக்கும் தேவையாக இருக்கிறது.
இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது. வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையைக் கிழித்து செவிடர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வலைதளம் முதல் செய்திதாள்கள் வரை அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது. கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்கு சந்தனம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.  திரை அரங்கத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ‘கவலைகளை மறக்க’  போதை ஊட்டப்படுகிறது. கலை என்பது பணம் சம்பாதிக்க என்ற ஆன பிறகு அங்கு கலைக்கு வேலையில்லை. சதைக்குத் தான் வேலை.
ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிகைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும். கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளை சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்துகொண்டுருக்கும் பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மக் கதை போல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
முன்பிருந்த தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது கனிம வளத் துறைதான் என்பதை புரிந்து கொள்ள முடியும். சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும். அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லை.
அருண் ஷோரி மத்திய அமைச்சராக இருந்தபோது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் அமர்ந்திருக்கிறோம் என்று தெரிந்திருக்குமா? அல்லது ராசாவுக்கு, தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகிறோம் என்று தெரிந்திருக்குமா?
இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா? இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக்கொண்டுருக்கும் ஜெயலலிதாவுக்குத்தான் தெரியாதா? கடந்த பத்தாண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ? இல்லை, கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும்? ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படி கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்கு தெரியாமல் போயிருக்கும்?
ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள்தான் வீழும்போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரை எழுதுகின்றன.
அரசியலுக்கு பலியாடுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக இந்தியா பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடத்துகிறது. திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுகளைப் போல ஒவ்வொரு சமயத்திலும் ஒருவர் கிடைப்பார். அவர் அமைச்சராக இருக்கலாம். அல்லது அதிகாரியாக இருக்கலாம்.
ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல், அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர். மறுநாளும் அதையே படிக்கும் போது எரிச்சல்தான் உருவாகிறது. காரணம் செய்திகளை உள்வாங்கிக்கொள்பவர்களும்கூட நமக்கு எப்போது இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது.
பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது பணம் என்று இன்றைய உலகம் நினைக்கிறது. அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும். அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவனைப் பணம் ஆளத் தொடங்கிவிடுகிறது. அப்போது மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகிறது.
0
ஜோதிஜி திருப்பூர்

கருத்துகள் இல்லை: