திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சாராய மல்லையா கோவிலுக்கு தங்கக்கதவு தானம்

 சீமைச் சாராய முதலாளி மல்லையா 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது.
தன்னிடம் வேலை பார்க்கும் விமானிகளுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, விமான நிலையங்களுக்கு வாடகை தராமல் இருப்பது, நிரப்பிய பெட்ரோலுக்கு காசு  கேட்டால் அரசிடமே பெயில் அவுட் கேட்பது, கொடுத்த கடனை அடைக்க வீழ்ச்சியடையும் தனது பங்குகளையே பொதுத்துறை வங்கிகளுக்கு தருவது என இவர் நடத்தும் அக்கிரமங்கள் பராக்கிரமத்துடன் வெற்றி பெறுவதற்கு ஆண்டவனுக்கும் தாராளமாக கமிஷனை வெட்டியிருக்கிறார். தங்கக்கதவு தானம்
கடந்த ஆண்டு இறுதியில் தனது கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தில் 50 சதவீத சேவைகளை நிறுத்தி 100 விமானிகளுக்கு சம்பளம் தராமல் இழுத்தடித்து, ராஜினாமா செய்ய வைத்தார் மல்லையா. தொன்னூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரஸ்ட் என்ற தனது நிதி நிறுவனத்தின் மூலம் நிறைய வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி பணம் பறித்துவிட்டு, கடைசியில் நிறுவனம் திவால் எனச் சொல்லி சொத்துக்களை தனது மற்றொரு நிறுவனமான யுனைடெட் ப்ரீவரிஸுக்கு மாற்றியதோடு திவாலான நிறுவனத்துக்கு பெயில் அவுட் தொகையும் பெற்றது சாராய சாம்ராட்டின் முக்கியமான வரலாறு.

2004 முதல் தனியார் விமான கம்பெனிகளை அரசு ஊக்குவிக்கத் துவங்கியது. அதற்காகவே ஏர் இந்தியாவை நட்டத்தில் மூழ்கடிக்கும் சதி தொடங்கியது. தற்போதும் ஏர் இந்தியாவின் பயணக் கட்டணத்தை அதிகரித்தால் தான் தங்களுக்கு முழுச் சந்தையும் கிடைக்கும் என்கிறார்கள் ஏற்கெனவே 83 சதவீத சந்தையை வைத்திருக்கும் தனியார் விமான நிறுவன முதலாளிகள்.
இப்படித்தான் போதைத் தொழிலில் பில்லியனராக இருந்த மல்லையா வானத்து வர்த்தகத்தையும் வளைத்தார். கடந்த மார்ச்சில் ரூ. 7000 கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளிடம் ஏறத்தாழ ரூ. 750 கோடி மதிப்பிலான பங்குகளை தலையில் கட்டினார். அதன்பிறகுதான் அவரது பங்கின் மதிப்பு ரூ.65 லிருந்து ரூ.20க்கு வீழ்ச்சியடைந்தது. இப்படியும் மக்களின் பணம் மறைமுகமாக மல்லையாவுக்கு பெயில் அவுட்டாக போனது.
தனி விமானத்தில் போய் சரக்கு பார்ட்டிகளில் கலந்து கொள்ள மாதம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி செலவு செய்யும் மல்லையாவுக்கு, சுப்ரமணியருக்கு கொடுத்த ரூ.80 லட்சம் எல்லாம் ஒரு பிச்சைக்காசு. ஏர் இந்தியா விமானிகள் ஊதிய உயர்வு மற்றும் இன்ன பிற உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை.
ஆனால் இந்த சாராய சக்கரவர்த்திக்கு கேட்ட இடத்திலெல்லாம் மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தி கடன் தள்ளுபடி, இலவச எரிபொருள், இடம், குடிநீர், மின்சாரம், கூடவே ஒரு ராஜ்யசபா எம்பி பதவி என கொட்டிக் கொடுக்கிறார்கள். முதலாளி என்றால் இந்தியாவில் கிடைக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தொழிலாளி என்றால் லத்திக்கம்பாக மாறுகிறது.
ஆடு திருடும் திருடர்கள் திரும்பி வந்தவுடனே கிடைத்த ஆட்டில் ஒன்றை சாமிக்கு பலி கொடுப்பார்கள். அப்படி மக்களிடம் அடித்த கொள்ளைப் பணம்தான் தங்கக்கதவாய் சுப்புரமணிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி கிங் ஃபிஷர் விமானிகள் வெறுமனே வேலை நிறுத்தம் செய்யாமல் நேரே மல்லையாவின் வீட்டில் புகுந்து இருப்பதையும், ஒளித்திருப்பதையும் பறிமுதல் செய்ய வேண்டும். சாமிக்கு கட்டிங் வெட்டினால் தொழில் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று போதையில் இருக்கும் மல்லையாவை இப்படி அன்றி வெறு எப்படி திருத்த முடியும்?

கருத்துகள் இல்லை: