ஞாயிறு, 12 ஜூன், 2011

அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது இந்தியதூதுக்குழு

:
sivashankar mஇலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.
காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்றபோதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தீர்மானம், நிபுணர் குழுஅறிக்கை குறித்து பேசப்படவில்லை: சிவ் சங்கர்மேனன்
இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசின் உயர் மட்ட தூதுக்குழுவும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது கலந்துரையாடப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க விடயத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் சொந்த பொறிமுறையொன்றை இலங்கை கொண்டிருப்பதாகவும். ஆதனால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் 50 வீடுகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 1000 வீடுகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்த இந்திய தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: